நீரோடிய காலம் 3: ஆற்றங்கரை சொற்கிழத்தி!


வெட்டாறு தாண்டி நாங்கள் நுழைந்தது காவிரியின் பாசனப் பரப்பில். வெண்ணாறு ஏறத்தாழ 6 லட்சம் ஏக்கருக்கும் காவிரி 6 லட்சம் ஏக்கருக்கும் நீர் அளிக்கிறது. கூடவே, ஜி.ஏ.கனால் எனப்படும் கல்லணைக் கால்வாய் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கு பாசனம் தருகிறது. இதெல்லாம் கணக்கில் வருவது. கணக்கில் வராத பாசனப் பரப்பு இன்னும் அதிகம் இருக்கும். பாசனப் பரப்புக்குத் தமிழில் ‘ஆயக்கட்டு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இதே சொல் ஆங்கிலத்திலும் ‘ayacut’ என்று வழங்கப்படுகிறது.

முடிகொண்டான் ஆற்றில் கொஞ்சமாகத் தண்ணீர் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. அருகிலுள்ள கிராமத்துக்கும் ஆற்றுக்கும் ஒரே பேர்! இப்படி ஆற்றால் ஊருக்கும் ஊரால் ஆற்றுக்கும் பல இடங்களில் பேர் அமைந்திருக்கும். ஆற்றால் ஊருக்குப் பேரென்றால் சென்னையில் அடையாற்றைச் சொல்லலாம்; ஊரால் ஆற்றுக்குப் பேரென்றால் பாமணி ஆறு, முடிகொண்டான் போன்ற ஆறுகளைச் சொல்லலாம். ஊரும் ஆறும் பிரிக்க முடியாதவை என்பதற்கு அடையாளம் இது.
திருவாரூரையும் மயிலாடுதுறையையும் நோக்கிச் செல்லும் சாலை என்பதால், இடையில் ஏராளமான கிராமங்கள் இருந்தாலும் சாலை ஓரளவு தரமானதாக இருந்தது. ஒரு இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இந்த வழியில் வந்தால் மாட்டு வண்டிகளைப் பார்க்கலாம். இப்போது அநேகமாக, குடிசை வீடுகள் உட்பட, எல்லா வீடுகளிலும் இருசக்கர வாகனங்களைப் பார்க்க முடிந்தது. சாலைப் போக்குவரத்தில் அரசு காட்டிய அக்கறையை நீர் மேலாண்மையில் காட்டவில்லை என்பதையே வழியில் தென்பட்ட குளங்கள், வாய்க்கால்கள் எங்களுக்கு உணர்த்தின.

“போக்குவரத்தில் நிறைய நவீன மாற்றங்கள் வந்துடுச்சு. குக்கிராமங்கள் கூட நகரங்களோட இணைக்கப்பட்டுடுச்சு. அந்த மாதிரி நீர் மேலாண்மையில் முன்னேற்றம் ஏற்படாததுக்கு காரணம் என்ன?” என்று ஜெயராமனிடம் கேட்டேன்.

“முன்னாடியெல்லாம் ஆறு, குளமெல்லாம் எல்லோருக்கும் பொதுவாக இருந்துச்சு. குடிக்கிறது, குளிக்கிறது, விவசாயம் இப்படித் தண்ணிக்கு எல்லாரும் ஆறு, குளங்களைத்தான் நம்பி இருக்கணும். அதனால, ஒரு கூட்டுப்பொறுப்பு இருந்துச்சு. இன்னைக்கு எல்லோரும் தண்ணிக்கு ஆறு, குளங்களை நம்பியிருக்கிற அவசியம் இல்லாம போயிடுச்சி. ஒரு தனி விவசாயி நாலு ஏக்கர்ல நிலம் வச்சிருக்காரு; அவருகிட்ட போர்செட்டும் இருக்குன்னா வாய்க்கால்ல தண்ணி வந்தா என்ன வரலன்னா என்னன்னு நினைக்கிறாங்க. எல்லாவயல்லயும் போர்செட்டு இருக்கு. எல்லா வீடுகள்லயும் போர் போட்டுருக்காங்க. போர் போட முடியாதவங்க குழாய்த் தண்ணிய நம்பியிருக்காங்க. ஆறுகள்லயும் எப்போவாவதுதான் தண்ணி வருது. ஆக, ஆறு, குளங்கள்லாம் நம்ம பொறுப்பு இல்லங்கிற உணர்வு  மக்களுக்கு எப்படியோ ஏற்பட்டுடுச்சி. போக்குவரத்திலெல்லாம் முன்னேற்றம் அடைஞ்சும் நீர் மேலாண்மையில் நாம் பின்தங்கிப் போனதற்கு இதைத்தான் நான் முதல் காரணமாகச் சொல்வேன்” என்றார்.

தண்ணீரின் போக்கைக் கட்டுப்படுத்துவது அந்தக் காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக இருந்திருக்கிறது. நீர் இருப்புக்கும் நீர் வளத்துக்கும் உத்திரவாதம் அளித்துவிட்டால் சமூகமே வளம் பெறும். அதன் மூலம்சமூகத்தை ஆளவும் முடியும். ஆறு, குளங்களை வெட்டுவது என்பது ராஜாவாக ஒருத்தர் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கான வழி. இன்றைக்கு ஆட்சியைப் பிடிப்பதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் அந்த வழி பின்னுக்குச் சென்றுவிட்டது.
“கரிகாலன் நீர் மேலாண்மையில இவ்வளவு அக்கறை காட்டுனதுக்குப் பின்னால இந்தக் காரணமும் இருந்திருக்கலாம்” என்றார் ஜெயராமன்.

“வரும் வழியிலெல்லாம் இருக்குற ஆறுகளோட விவரப் பலகைகளைப் பார்க்குறப்ப ஆங்கிலேயர் காலத்திலும் நிறைய வேலைகள் நடந்திருப்பதுபோல தெரியுதே?” என்று கேட்டேன்.

“அந்தக் கால ராஜாக்களோட தொடர்ச்சியாத்தான் ஆங்கிலேயர்களும் நீரை ஆள்வது மக்களை ஆள்வதுன்னு புரிஞ்சிக்கிட்டு நீரோட்டத்தைச் சரியாப் பராமரிச்சாங்க. நோக்கம், நம்ம நாட்டை அடிமை செய்யுறதுன்னாலும் அந்தக் கெட்டதுலயும் ஒரு நல்லதா நீர் மேலாண்மைப் பராமரிப்பு ஒழுங்கா நடந்துச்சு. நீடாமங்கலத்துக்குப் பக்கத்துல இருக்கிற மூணாற்றுத் தலைப்பு கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதகுகள் இடப்பட்டு சீரமைக்கப்பட்டிச்சு. சுதந்திரத்துக்குப் அப்புறம் நீர் மேலாண்மை மரபுங்கறது கொஞ்சம் கொஞ்சமா போயிடிச்சு. எல்லா இடங்களிலும் ஆள் போடாமலும், இதுக்குன்னு ஒதுக்கப்பட்ட பணத்தைச் செலவு பண்ணாமலும் விட்டதால எல்லாம் பழுதடைய ஆரம்பிச்சது. ஊழலும் அதற்கு முக்கியக் காரணம்” என்றார் தங்க.ஜெயராமன்.
பூந்தோட்டம் கடைத்தெரு வழியாக எங்கள் கார் நகர்ந்தது. ஆடிப்பெருக்கின் முந்தைய நாளுக்கான எந்தப் பரபரப்பும் இல்லாமல் இருந்தது கடைத்தெரு. அங்கங்கே, ஆடிப்பெருக்குக்கான காதோலை கருகமணி,மஞ்சள், பேரிக்காய் இத்தியாதிகள் விற்கும் ஆட்கள் தரையில் கடைபோட்டு  உட்கார்ந்திருந்தாலும், அவ்வளவு பரபரப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

“இங்கேருந்து கிழக்கே போனா ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல திருமாகாளம் இருக்கு, பாத்துட்டுப் போகலாமா? ரொம்ப விசேஷமான கோயில் அங்க இருக்கு. கலைஞரோட மனைவி தயாளு அம்மாவோட ஊர்” என்றார் தங்க.ஜெயராமன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊருக்கு நான் சென்றிருக்கிறேன். காரைக்கால் போகும் வழியில் உள்ள ஊர் அது. ஊரின் பெயரை ‘திருமாகாலம்’ என்றும் வைத்திருக்கலாம். காலம் உறைந்து கிடப்பது போல் இருந்தது. விசாலமான தெருக்கள், விசாலமான வீடுகள், ஆனால், ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. ஊரின் விசாலத்துக்கு ஏற்ப கோயிலும் விசாலமாக இருந்தது. மகாகாளநாதர் கோயில்! சம்பந்தர் பதிகம் பாடியிருக்கிறார்! எனினும், பக்தர்கள் அதிகம் வந்துபோகும் இடமாகத் தோன்றவில்லை இந்தக் கோயில். ஏகாந்தத்தைச் சூடிய கோயில்.

“அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து/
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய/
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்/
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே”
என்று உருகி உருகி சம்பந்தர் இந்த ஸ்தலத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.
திருமாகாளத்தின் ஸ்தலபுராணம் அந்தக் கோயிலின் உட்புறச் சுவரின் மேல்பக்கத்தில் தொடர்ச்சியான படங்
களாக வரையப்பட்டிருந்தது. மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்தலபுராணம் அது. இந்து மதம் தனக்குள்
ளேயும் சனாதனத்தை எதிர்ப்பதற்கான விசையைக் கொண்
டிருந்ததை அந்த ஸ்தலபுராணம் மூலம் உணர்ந்தேன்.

சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்போல் தோற்றம் தரித்துக்கொண்டு திருவாரூர் தியாகேசர் வருகிறார். அவரது தோளில் நந்திகேஸ்வரர், செத்துப்போன கன்றுக்குட்டி போல் கிடக்கிறார். கூடவே, சாதாரண பெண்ணின் தோற்றத்துடன் பார்வதியும் நடந்துவருகிறார். பிள்ளையாரும் முருகனும் குழந்தைகளாக ஓடிவருகிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு நாய்களின் தோற்றத்தில் தியாகேசர் பின்னால் ஓடி வருகின்றன. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் வருகிறாரே, அதுவும் செத்துப்போன கன்றுக்குட்டியைத் தோளில் சுமந்துகொண்டு, என்று சிவாச்சாரியர்கள் யாகத்தை விட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். இந்த ஐதீகம் கோயிலில் ஓவியமாக வரையப்பட்டிருக்கிறது.

இந்தக் கதைக்கும் ஆதிசங்கரரின் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்துக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியப்படுத்துகிறது. விஸ்வநாதர் கோயிலுக்குத் தனது சீடர்கள் புடைசூழ சங்கரர் சென்றுகொண்டிருக்கிறார். வழியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்போல் வேடம் தரித்துக்கொண்டு சிவபெருமான், சங்கரருக்கு எதிரில் வந்துகொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக வந்துகொண்டிருக்கின்றன. மனு தர்மத்தின்படி, பிராமணரின் பார்வையிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் படக் கூடாதல்லவா! “எதிரே வராதே, ஒதுங்கிப்போ” என்று சங்கரர் ஆணையிடுகிறார். “இந்த உடலை ஒதுங்கச் சொல்கிறாயா? இல்லை, அதிலுள்ள ஆத்மாவை ஒதுங்கச் சொல்கிறாயா, சங்கரா?” என்று சிவபெருமான் கேட்டதும் சங்கரருக்கு மிச்சசொச்சம் ஒட்டியிருந்த பேத உணர்வுகள் அகன்று, எல்லாமே எல்லாருமே பிரம்மமாக இருக்கும்போது பிராமணர் யார், தாழ்த்தப்பட்டவர் யார் என்று உணர்வு அவருக்குள் உதிக்கிறது. அப்படியே சிவபெருமான் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறார். சாதிக் கொடுமை இருந்த மரபுக்குள்ளேயே சாதிக்கு எதிரான புரட்சிகளும் ஐதீகங்களும் இருந்திருக்கின்றன என்பதையே இவை உணர்த்துகின்றன.

கோயிலுக்கு வெளியே, அந்தச் சிறு கிராமத்திலும் வேதபாட சாலையொன்று இருக்கிறது. கோயில் குருக்களாக இருக்கும் சிவாச்சாரியர்தான் இந்த வேதபாடசாலையை நடத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அவரைச் சந்தித்திருக்கிறேன். தற்போது எனது பயண நோக்கம் வேறு என்பதால், அவரைச் சந்திக்க நேரம் இல்லாமல் கிளம்பிவிட்டோம்.

பூந்தோட்டத்துக்கு கிழக்கே திருமாகாளம் என்றால் மேற்கே கூத்தனூர். சரஸ்வதி கோயில் இருக்கும் ஊர். அரசலாற்றின் கரையில் இருக்கும் இந்த சரஸ்வதியை ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி’ என்று ஒட்டக்கூத்தர் பாடியிருக்கிறார். சொற்களை அள்ளிக்கொடுக்கும் இறைவி என்று இந்துக்களால் நம்பப்படும் இந்த சரஸ்வதியை சம்ஸ்கிருதத்தில் ‘வாக்தேவி’ என்றும் அழைக்கிறார்கள். 

ஆற்றங்கரைகள் தமிழுக்கு எவ்வளவு கொடைகள்

தான் வாரி வழங்கியிருக்கின்றன!

(சுற்றுவோம்...)

x