விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 12: முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்


மிளகு சீரக தோசையும், நாவல்பழ ஜூஸும்!

முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகை செல்வன், சென்னையில் குடியிருந்தாலும் வாரந்தோறும் மதுரைக்கு வருபவர். வாய்ப்புக் கிடைத்தால் பேரையூர் பக்கம் இருக்கும் சொந்த ஊரான சிலைமலைப்பட்டிக்குச் செல்லும் அவர், மதுரையில் இருந்தால் காலேஜ் ஹவுஸை எட்டிப்பார்க்கத் தவறுவதில்லை. மதுரையின் லேண்ட் மார்க்குகளில் ஒன்றாக அறியப்படும் ‘நியூ காலேஜ் ஹவுஸ்சின்’ பெயர்க்காரணம், (பழைய) மதுரை கல்லூரி ரயில் நிலையம் அருகே இருந்தபோது அதன் மாணவர் விடுதியாக இருந்த கட்டிடம் இது என்பதே.

“அந்தத் தங்கும் விடுதியை தமிழ் இலக்கியச் சங்கமம்னு சொல்லலாம். உலகத் திருக்குறள் பேரவையின் மதுரை கிளைத் தலைவராக இருந்த மணிமொழியனார் நிர்வகித்த விடுதி என்பதால், இது தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் சொந்த வீடு மாதிரி. மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள், அதற்கு வருகிற பார்வையாளர்கள் என்று கூட்டம் அலைமோதினாலும், இலக்கியவாதிகள் என்றால் தனி கவனிப்புதான். இந்த விடுதியின் தரைத்தளத்தில் அன்னமீனாட்சி உணவகத்தையும் அவர்களே நடத்துகிறார்கள். உணவகங்கள் என்றாலே வடநாட்டு இளைஞர்கள்தான் என்றாகிவிட்ட காலத்திலும், குறைந்தது 20 ஆண்டு அனுபவம் பெற்ற ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் அது.

காலேஜ் ஹவுஸ் காபி உலகப் பிரசித்தம். கருப்பட்டி காபி, நாவல்கொட்டை டீ, சுக்குமல்லி காபியும் தருவார்கள். வழக்கமான ஜூஸ்களைத் தாண்டி அந்தந்த சீசன்களில் கிடைக்கிற நுங்கு, மா, பலா, நாவல்பழத்திலும் ஜூஸ் போட்டு அசத்துவார்கள். மதிய சாப்பாட்டின் ருசியே தனி. இரவிலும் அரிசி சாதம்தான் சாப்பிடுவேன் என்பவர்கள், கண்ணை மூடிக்கொண்டு காலேஜ் ஹவுஸ் போகலாம். அங்கே இரவு 10 மணி வரையில் சுடச்சுட அரிசி சாதம் கிடைக்கும். நிறைய சொல்லலாம் என்றாலும், எனக்கு அங்கு ரொம்பப் பிடித்தது சீரக மிளகு தோசை, நாவல்பழ ஜூஸ், அப்புறம் அன்பான உபசரிப்பு” என்கிறார் வைகை செல்வன்.

அவர் சொல்லச் சொல்ல நா ஊறியது. உடனே, ‘சினிமா படத்தையெல்லாம் பார்த்து விட்டுத்தானே விமர்சனம் எழுதுகிறோம். அதேபோல இதையும் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுத வேண்டும்’ என்ற உறுதியோடு அந்த உணவகத்துக்குச் சென்றோம். பழமையும், நவீனமும் கலந்த கலவையாக உணவகம் காட்சி தந்தது. உரல், அரிக்கேன் விளக்கு, பல்லாங்குழி என்று பழங்கால வீட்டு உபயோகப்பொருட்களின் மியூசியம் போல நிறைய பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அண்ணன் சொன்ன அந்த இரண்டு ஐட்டங்களையும் ஆர்டர் செய்தோம். மணக்க மணக்க தோசை வந்தது. ஆனால், நாவல்பழ சீசன் முடிந்துவிட்டதால், அதைச் சுவைக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. விலை கொஞ்சம் கூடுதல்தான் (ரூ.100) என்றாலும் தோசையின் சுவை அபாரம்.

தற்போதைய நிர்வாகியும், மணிமொழியனாரின் மகனுமான கார்த்திகேயனிடம் பேசியபோது, “அரிசி, எண்ணெய், காய்கறிகள், பால் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து வாங்குகிறோம். ஊழியர்களும் தரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் நானே குடும்பத்தோடு சாப்பிடுவேன். நண்பர்களைச் சாப்பிட அனுப்புவேன் என்பதால், ரொம்ப கவனமாக உணவு தயாரிப்பார்கள். தாத்தா வி.கே.கல்யாணசுந்தரம் காலத்தில் வாங்கப்பட்ட ஹோட்டல். அவர் கட்டிக்காத்த பழமையையும், பெருமையும் பாதுகாப்பது என் கடமையல்லவா?” என்றவர், “மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிற வடநாட்டு பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் பாரம்பரியமான தமிழக உணவுகளுடன், பஞ்சாபி, சைனீஸ் உணவுகளையும் தயாரிக்கிறோம்” என்றும் சொன்னார்.

அடுத்து, சீரக மிளகு தோசை, நாவல்பழ ஜூஸின் தயாரிப்பு முறைகளைச் சொன்னார் 40 ஆண்டுகாலமாகப் பணிபுரியும் மேலாளர் ஆசைத்தம்பி.

சீரக மிளகு தோசை: அரிசி 4 கப், உளுந்து 1 கப், வெந்தயம் 2 டீ ஸ்பூன், பச்சரிசி 1 டேபிள் ஸ்பூன் இவற்றை ஒன்றாக 4 மணி நேரம் வரை ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து எடுக்கவும். சீரகம் 50 கிராம், மிளகு 50 கிராமை வறுத்து, மிக்ஸியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் தரமான நல்லெண்ணெய் தடவி  மாவை வார்த்து மெலிதாகத் தேய்த்து, அதன் மீது சீரக, மிளகுப் பொடியைத் தேவையான அளவு தூவவும். வெந்ததும் மறுபுறம் புரட்டிப் போடவும். கடைசியில் இரண்டு டீ ஸ்பூன் நெய்யை வார்த்து தோசையை எடுத்தால், மணக்க மணக்க சீரக மிளகு தோசை தயார்.

குழந்தைகளுக்கென்றால் குட்டியாக, சிறுவர்களுக்கென்றால் ராக்கெட் மாதிரி கூம்பாக, பெரியவர்களுக்கென்றால் பேப்பர் ரோஸ்ட் மாதிரி சுருட்டிப் பரிமாறலாம். தேங்காய் சட்னி, காரச்சட்னி, மல்லிச்சட்டினி, கொஞ்சம் சாம்பார் ஆகியவை தோசைக்கு மேலும் ருசி சேர்க்கும்.

நாவல் பழ ஜூஸ்: தேவையானவை: 50 மில்லி பால், ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம், 10 நாவல் பழம். நாவல்பழத்தின் கொட்டைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை பால், ஐஸ்கிரீமுடன் சேர்ந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும். வடிகட்டி இறுக்காமல் அப்படியே பரிமாறினால் நாவல் பழத்தின் சுவையும், சத்தும் குன்றாத ஜூஸ் கிடைக்கும். நாவல்பழத்துக்குப் பதில்  நுங்கு (மெல்லிய மேல் தோல் நீக்கப் படாதது) சேர்த்துச் செய்தால் நுங்கு ஜூஸ் தயாராகிவிடும். நுங்கின் மெல்லிய மேல் தோலை நீக்குவதோ, வடிகட்டு வதோ அதன் சுவையையும், சத்தையும் குறைத்துவிடும்.

“எல்லாம் சரி. இன்னும் நாங்க ஜூஸை ருசிக்கல. நாவல்பழம், நொங்கு சீசன் தொடங்குனதும் வாரோம்” என்று ஸ்டிரிக்டாக (கண்ணடித்தபடி) சொல்லிவிட்டு விடைபெற்றோம்.

எம்.சோபியா

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

x