மேடைத் தமிழின் மேன்மைக்கும் கோன்மைக்கும் அறிஞர் பெருந்தகை அண்ணா ஆற்றிய அரும்பணிகளை எத்தனை இரவுகள் பேசினாலும் விடியாது. கேட்டவர்களைக் கேட்ட நொடியில் இருந்து இனி எப்போது கேட்போம். அப்பொழுது எப்போது வரும் என்று ஏங்கவைத்த அதிசயம் அண்ணா என்பதை அண்ணாவின் இலட்சியங்களை ஒப்புக்கொள்ளாதவர்களும் ஒப்புக்கொள்வார்கள்.
அந்த அண்ணா குறித்து உரையாற்றுவதற்கான வாய்ப்பு அந்த நாள் மேடைகளில் கிடைத்தது என்றாலும், ஒரு பொது மேடையில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது அடியேன் பெற்ற பேறுதான். கம்பன் கழகத்தை செந்தமிழ் வளர்த்த செட்டிநாட்டின் தலைநகராகக் கருதப்படும் காரைக்குடியில் நிறுவி கம்பனடிப்பொடி கணேசன் அவர்கள் ஆண்டுதோறும் விழா எடுத்த மாட்சியை விவரிப்பதற்குத் தனியே நூல் எழுத வேண்டும். அந்தத் தகுதி நிச்சயமாக எனக்கு இல்லை. கம்பன் தமிழ் கேட்பதில் காரைக்குடி தமிழர்களுக்கு ஒரு மயக்கமே உண்டு. கம்பன் தமிழ் வளர்த்த காரைக்குடி நகரில் அண்ணன் தமிழ் வளர்க்க அண்ணா தமிழ்க் கழகம் நிறுவியவர்களை வணங்கத்தான் வேண்டும். அண்ணா தமிழ்க் கழக கருத்தரங்கில் ‘அண்ணா ஒரு சொல்லருவி’ என்ற தலைப்பில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தபோது கண்ணில் தெரிகிற வானம் கையில் கிடைத்ததைப் போல கரையிலா மகிழ்ச்சிக்கு ஆளானேன்.
அறிஞர் அண்ணாவின் பெரும் புகழுக்குக் கட்டியம் கூறுகிற வகையில் கட்சி சாராத கற்றறிந்த பேராசிரியர்கள் மட்டுமே கலந்துகொள்கிற பாங்கறிந்த பட்டிமன்றம் பேராசிரியர் காரைக்கால் சக்கரபாணி அவர்கள் தலைமையில் நடந்தது. ‘அண்ணா ஒரு பாசப் பறவை’ என்ற தலைப்பில் நான் உரையாற்றிய பிறகு, அண்ணாவின் காலத்தில் தென்பாண்டி மண்டலத்தில் அண்ணாவின் அமைப்பிற்குத் தலைமை தாங்கிய தகுதி மிக்க சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு அவர்கள் அண்ணாவின் பந்த பாச அரசியலை அவருக்கே உரிய நடையில் அழகுபடப் பேசினார்கள். கட்சியின் வண்ணமோ எண்ணமோ இல்லாமல் தமிழின் தகுதியைத் தூக்கி நிறுத்திய நிகழ்ச்சியாக அமைந்தது. காலத்தாலும் சீலத்தாலும் மூத்த பெருமக்கள் மட்டுமல்ல; வாலிப எரிமலைகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்த மாதிரி இருந்தது.
அடியேன் பேசும்போது “அரசியல் தலைவர், சீர்திருத்தச் செம்மல், பகுத்தறிவாளர், சிறுகதை ஆசிரியர், நாடகாசிரியர், நாவலாசிரியர், நாடக நடிகர், இதழாளர், இலக்கிய விற்பன்னர், கட்டுரையாளர், வரலாற்றறிஞர், அருந்தமிழோடு ஆங்கிலத்திலும் உச்சம் தொட்டவர், சிந்தனையாளர், கவிதைக் காதலர், பொருளியல் அறிஞர் என அண்ணா அவர்களுக்கு இந்திய அரசியலில் எந்தத் தலைவருக்கும் வாய்க்காத பன்முகம் இருந்தாலும், எல்லாத் துறையிலும் அவர் சுடர் விடுவதற்குக் காரணமே அவரது சொல்லாற்றல்தான். அடுக்கு மொழி என்று அதை அலட்சியப்படுத்தி விட முடியாது. இது அடுக்கு மொழி வசப்படாதவர்கள் வைக்கிற அர்த்தமற்ற விமர்சனம். அந்தச் சொல்லில் கருத்தும் பொருளும் களி நடனம் புரியும். கேட்டவரும் கற்றவரும் தன்னை மறந்து ரசிப்பார்கள். அக்கிராசனாதிபதி அவைத் தலைவர் ஆனதும், காரியதரிசி செயலாளர் ஆனதும், விவாஹ சுப முகூர்த்தப் பத்திரிகை திருமண அழைப்பிதழ் ஆனதும், அபேட்சகர் வேட்பாளர் ஆனதும், ஜெயம் வெற்றி ஆனதும், சந்தோசம் மகிழ்ச்சி ஆனதும், தமிழ் தமிழ் ஆனதும் அண்ணாவால் அல்லவா’’ என்றேன்; கைத்தட்டல் அள்ளிக்கொண்டேன்.
“கம்பன் கழகம் விழா எடுக்கும் காரைக்குடி என்பதை நான் மறந்துவிடவில்லை. என்றுமுள தென் தமிழில் காவியம் பாடிய தேரெழுந்தூர்க் கம்பன்தான் ராமனை இராமன் ஆக்கினான். விபீஷணனை வீபீடணன் ஆக்கினான். இலட்சு மணனை இலக்குவணன் ஆக்கினான். அன்று கம்பன் செய்ததைத்தான் நேற்று அறிஞர்
அண்ணா தமிழில் செய்தார் என்பதே பொருத்தமானது’’ என்றபோது மேடையில் இருந்த பேராசிரியர் ஒருவர் ‘பலே பலே’’ என்று உச்சுக் கொட்டி ரசித்தது என் காதிலும் விழுந்தது. “அண்ணா அவர்கள் உரையாற்றுகிற மேடையில் இன்னொருவர் பேச்சு எடுபடாமல் போகிறதென்றால் அண்ணாவின் அழகான சொல் மட்டுமல்ல; அண்ணாவின் அறிவார்ந்த பார்வை யும் அண்ணாவுக்கு அந்தத் தகுதியை வழங்கி யது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நீண்ட நெடுங்காலமாகக் கெட்டித்துப்போன மரபுகளை அண்ணா துணிச்சலாக உடைத் தெறிந்தார். அண்ணாவின் நாவில் இருந்து உயிர்த்துடிப் போடு உலா வந்த அருந்தமிழின் கருத்தில், மிடுக்கில், சுவையில் இந்த நாட்டு இளைஞர்கள் தன் நெஞ்சைப் பறிகொடுத்தார்கள்.
‘காலைக் கதிரவன், மாலை மதியம் ஆடிடும் பூங்கொடி, பாடிடும் அருவி, கொஞ்சிடும் கிள்ளை, துள்ளி விழும் வெள்ளி மீன், ஒளி விடு மீன், மருண்ட விழி மான், சிரித்திடும் முல்லை, பேசிடும் புறாக்கள், பழமுதிர்ச்சோலை, வளமி கும் வயல்கள் எதுதான் தம்பி அழகாக இல்லை’ என்று அண்ணா அவர்கள் குறிப்பிடும்போது தம்பிகள் எல்லாம் தமிழ்த் தும்பிகள் ஆனார்கள். பேச்சுக்கு விலை வைத்தார் மேனாட்டில் பேரறிஞர் இங்கர்சால். அண்ணாவின் பேச்சையும் கட்டணம் கொடுத்துத் தமிழ் மக்கள் கேட்டார்கள். திராவிட டெமாஸ்தனிஸ் என்று ஆராதிக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்களைப் பின்பற்றி ஆயிரமாயிரம் சொற்பொழிவாளர்கள் அன்னைத் தமிழகத்தில் உருவானார்கள் என்பது மேடைத் தமிழில் புதிய வரலாறு.
அறிஞர் அண்ணா அவர்கள் சட்டப் பேரவைக்கு 1957-ல் நுழைந்தபோது சட்டப் பேரவையில் அவைத்தலைவராக இருந்த பெருமகன் டாக்டர் யு. கிருஷ்ணாராவ். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அறிஞர் அண்ணாவின் பேச்சை நித்தமும் கேட்கிற இடத்தில் இருந்த அந்தப் பெருமகன் சொல்வதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ‘அண்ணாவின் பேச்சைத் தினமும் சட்டமன்றத்திலே கேட்டு வருகிறேன். எப்படியாவது அவர் என்னை ஒருநாள், என் சீடர்களிலே ஒருவனாக நீயும் வந்து சேரு என்று அழைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன்’ என்று சட்டமன்றத்திலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு சொன்னார் என்றால், அண்ணாந்து பார்க்கிற உயரத்தில் இருக்கிறவர் அண்ணா என்பதைச் சொல்லத்தானே வேண்டும்.
நாற்றங்காலாம் மாணவச் சமூகம் அறிஞர் அண்ணாவுக்குப் பின்னால் அணி அணியாய் அலை அலையலையாய் அணி வகுத்து வந்தது என்றால், அவரது ஆட்பெருஞ்சேனையில் தங் களையும் இணைத்துக்கொண்டார்கள் என்றால் அண்ணாவின் சொல்லில் கட்டுண்டதால்தான். ‘மயிலாடுவது பிறர் கண்டு மகிழ, நீர் உண்ட மேகம் சூழ் கொண்டு உலவுவது நிலம் கண்டு மகிழ, நிலமாதின் பொற்குவியல் மக்களை அணி செய்து மகிழ்விக்க, ஒளியுள்ள திருவிளக்கு இருளகற்றி இடர் நீக்க, பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர் நாட்டைச் செழிக்கச் செய்ய உமது ஆற்றலை ஈந்திடவே இந்த அனுமதிச் சீட்டு. வருக வென்று வருக, தமிழ் உமது முரசாகட்டும், பண்பாடு உமது கவசமாகட்டும், அறிவு உமது படைக்கலன் ஆகட்டும், அறநெறி உமது வழித்துணை ஆகட்டும்’ என்று மதுரைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா பேருரை யில் அண்ணா பேசிய பேச்சைக் கேட்ட மாண வர்கள் அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
சர்க்கரையினால் செய்த பொம்மையை எந்தப் பக்கம் பிட்டுத் தின்றாலும் தித்திப்பதைப் போல அண்ணாவின் எல்லா மேடைப்பேச்சும் தித்திப்பாக மட்டுமே இருந்தன. ஆதிக்கத்தைச் சாய்க்க அண்ணா நாவையே ஆயுதமாக ஏந்தினார். சொல்லை அறிஞர் அண்ணா வில்லாகவும் ஏந்தினார்; நெல்லாகவும் விதைத்தார். அண்ணாவின் சொல்லருவியில் நனைந்தவர்கள் இன்னொரு அருவியில் குளிக்க மாட்டார்கள். அதனால்தான் அண்ணா அவர்கள் கண்ணை மூடியபோது, ‘மேடைகளே புலம்புங்கள்... மின்னும் சரிகைச் சொல் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தவன் போய்விட்டான் மேடைகளே புலம்புங்கள்...’ என்று கவிதையிலே அழுதார் தமிழ்க் கவிதைக்கு உலகத் தகுதியை வாங்கித் தந்த கவிக்கோ அப்துல் ரகுமான். அண்ணா இல்லாத தமிழகத்தில் நானும் அழுகிறேன். அறிஞர் அண்ணா இருக்கும் திசை நோக்கித் தொழுகிறேன்’’ என்று காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகத்தில் நான் பேசி முடித்தபோது பாராட்டுகள் குவிந்தன. அர்ச்சகர் ஒருவர் என்னருகில் வந்து நின்று “கம்பன் மேடையைக் கழக மேடை ஆக்கிட்டீங்க’’ என்று சொன்னபோது அண்ணாவை நினைத்துக்கொண்டேன்.
(இன்னும் பேசுவேன்...)