கட்டணக் கொள்ளைக்குக் கடிவாளம் தேவை!


பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டு வருகிறார்கள். தீபாவளி உள்ளிட்ட முக்கியப் பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கிறார்கள். ஆனால், இவர்களின் பயணம் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.

ரயில்களுக்கான முன் பதிவு தேதி தொடங்கியதுமே டிக்கெட்கள் அனைத்தும் தீர்ந்துவிடுகின்றன. இந்த ஆண்டும் அப்படித்தான். வழக்கமான ரயில்கள் அனைத்திலும் டிக்கெட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், ஆம்னி பேருந்துகளை இயக்குபவர்கள் பண்டிகை காலத்து ‘வசூல் மேளா’வை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்!
பண்டிகை நாட்களில் தமிழக அரசும் ஆண்டு தோறும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்கிறது. இதோ, இந்த ஆண்டும் தீபாவளிக்காகத் தமிழகம் முழுவதும் 20,567 சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர். அவரே, “நாடு முழுவதுமே மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பேருந்துகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை” என்ற அபாய அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டு, “இருந்தாலும் அதிக கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருக்கிறார். மக்களுக்கு இதைக் கேட்டுக்கேட்டுப் புளித்துவிட்டது கட்டணம் நிர்ணயிக்க சட்டத்தில் இடமில்லை என்று சொல்லும் அமைச்சர், அதிக கட்டணம் வசூலிப்போர் மீது எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பார்?

நடவடிக்கை என்ற பெயரில் ஏதோ இரண்டொரு இடத்தில் பேருக்கு காரியமாற்றிவிட்டுப் போவதல்ல நடவடிக்கை. ஓயாத இந்தக் கட்டண கொள்ளைக்குக் கடிவாளம் போட உறுதியான சட்டபூர்வ நடவடிக்கை தேவை. அவசியம் ஏற்பட்டால் சிறப்புச் சட்டம் இயற்றியாவது, பேருந்துப் பயணத்தை மட்டுமே நம்பியிருக்கும் லட்சோப லட்சம் சாமானிய மக்கள் நிம்மதியாகவும் நிறைவாகவும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவர வழிவகை செய்யுங்கள்!

x