காய்ச்சல் வந்தா... பெல்ஜியம் போவோம்..!


நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருந்து நாங்குநேரி நோக்கிச் செல்கிறது அந்தப் பேருந்து. ‘’பெல்ஜியத்துக்கு ரெண்டு டிக்கெட் தாங்க அண்ணாச்சி!’’எனக் கேட்டு ரூபாயை நீட்டுகிறார் முன்சீட்டு பெரியவர். பெல்ஜியமா என ஆச்சரியம் விலகாமல் அவரை திரும்பிப்பார்த்த தருணத்தில் ‘பெல்ஜியம் 2 கி.மீ.’ என்ற நெடுஞ்சாலைத் துறையின் சாலையோரத்து அறிவிப்புப் பலகை பளிச்சென என் கண்ணில்பட்டது.

இப்படித்தான் பாஸ்போர்ட் இல்லாமல், விமானம் ஏறாமல் களக்காடு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நூற்றுக்கணக்கில் தினமும் பெல்ஜியம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால், இது மேற்கு ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் அல்ல. பின்னே? 

களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு உள்ளூர் மக்கள் வைத்திருக்கும் பெயர்.

உள்ளூர்க்காரரான கந்தன் பெல்ஜியம் வந்த கதையை நம்மிடம் சொன்னார். “ஆரம்பத்துல இந்தப் பகுதியெல்லாம் காலி இடமாத்தான் கிடந்துச்சு. 1971-ல பெல்ஜியத்துக்காரங்க இங்க வந்து ஆஸ்பத்திரி கட்டி, எங்க பகுதி முழுசுக்கும் இலவசமாக வைத்தியம் பார்த்தாங்க. அப்பவே இந்த ஆஸ்த்திரியில் ஒரு வேன் இருக்கும். அந்த வேனில் ஊரு ஊராக போய் வைத்தியம் பார்ப்பாங்க. நடமாடும் பிரசவ வேனாகவும் அது இருந்துச்சு. ஆனா, எண்ணி நாலே நாலு வருசம்தான் அவங்க இங்க இருந்து வைத்தியம் பார்த்தாங்க. அப்புறம், எல்லாத்தையும் நம்ம சர்க்கார்ட்ட குடுத்துட்டு அவுங்க நாட்டுக்கே போயிட்டாங்க. ஆனாலும் இன்னமும் அந்த ஆஸ்பத்திரி நல்ல முறையில செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இப்பயும் நாங்க காய்ச்சல் வந்தாலும் பெல்ஜியத்துக்குத்தான் போவோம்”என்கிறார் கந்தன்.

x