குடும்பத்தின் பாரம்பரியத் தொழில் நூலிழை வியாபாரம். பருத்தி நூலுக்கு எப்படி சாயம் தோய்ப்பது என்பதைப் படித்துவரும்படி லண்டனுக்கு அனுப்பப்பட்டார் அந்த இளைஞர். திருச்செங்கோடு வி.வி.சி.ராமலிங்க முதலியாரின் ஐந்தாவது மகன் அவர். அப்பாவின் விருப்பப்படி டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங் படிக்க இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் சென்றார். படித்து, முதல் வகுப்பில் தேறி, பொறியியல் பட்டம் பெற்ற அதேநேரம், காதல் மனைவி கிளாடியஸை பதிவுத் திருமணம் செய்துகொண்டு 1933-ல் நாடு திரும்பினார்.
இங்கு வந்ததும் படித்த படிப்பைக் கொண்டு குடும்பத்தின் தொழிலையாவது விருத்தி செய்வார் எனக் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், அவரோ திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் குதித்தார். அதுவரை மவுனப்படமாக இருந்த சினிமா பேசத் தொடங்கியதும் அதற்குக் கிடைக்கத் தொடங்கிய அபரிமிதமான வரவேற்பு, அவரை சினிமாவை நோக்கி இழுத்தது. எஸ்.எஸ்.வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் இணைந்து 1933 முதல் 1935 வரை கல்கத்தா சென்று ஏழு படங்களைத் தயாரித்தார். நல்ல லாபம் கிடைத்தபோதும் தயாரிப்பு சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் கல்கத்தா செல்ல வேண்டியிருந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். ‘இதற்குப் பதிலாக, அனைத்து வசதிகளும் கொண்டு ஒரு ஸ்டுடியோவை சேலத்திலேயே அமைத்துவிட்டால் என்ன’ என்ற யோசனை அவருக்குள் உதித்தது.
உடனடியாக சேலம் – ஏற்காடு மலை அடிவாரத்தில் பத்து ஏக்கர் நிலத்தை வாங்கினார். படப்பிடிப்புத் தளம், கேமரா உள்ளிட்ட சாதனங் கள், படச்சுருள் பதனிடல், அச்சிடல்உள்ளடங்கிய லேப், படத்தொகுப்பாளர் அறை, இசைப் பதிவுக் கூடம், நட்சத்திரங்களுக்கான ஓய்வு அறை, தொழிலாளர் குடியிருப்பு, பிரிவியூ திரையரங்கம் என நவீன படத்தயாரிப்பு வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான ஸ்டுடி யோவை இரண்டே ஆண்டுகளில் உருவாக்கி அதற்கு ‘மாடர்ன் தியேட்டர்’ என்று பெயரிட்டார்.திரைப்படம் என்ற கலை, மக்களை மகிழ்விப்பதாக இருக்க வேண்டுமே தவிர, அதைவைத்து புத்தி சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்று அந்த
இளைஞர் நினைத்தார். அதனால் தேசபக்தி, சமூக அக்கறை, விழிப்பு ணர்வு ஆகியவற்றைத் தேவையின்றி திணிக்காமல், நல்ல கதையம்சமும் நடனம், சண்டை, நகைச்சுவை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட திரைப்படங்களை அவர் தயாரிக்கவும் இயக்கவும் தொடங்கினார். பாரதிதாசன், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலிதேவி உட்பட பல புகழ்பெற்ற படைப்பாளிகளை, நட்சத்திர ஆளுமைகளைத் தனது படங்கள் மூலம் அறிமுகப்படுத்தினார். இவை எல்லாவற்றையும்விட 250 தொழிலாளர்களுக்கு வேலை தந்த மாடர்ன் தியேட்டர்ஸை ஒரு கட்டுக்கோப்பான தொழிற்சாலைபோல கண்டிப்புடனும் ஒழுங்குடனும் நிர்வகித்தார். இப்படித் தமிழ் சினிமாவின் வளர்ச்சியிலும் போக்கிலும் பெரும் மாற்றங்களைச் செய்து ‘தமிழ் சினிமாவின் கோமகன்’ என்று பெயரெடுத்த அந்த இளைஞர்தான் டி.ஆர்.சுந்தரம் என்று அழைக்கப்பட்ட திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்.
ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம்