பிடித்தவை 10- கவிஞர் கு.அ.தமிழ்மொழி


பண்பலை வானொலி தொகுப்பாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், மேடை நிகழ்ச்சி வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் கு.அ.தமிழ்மொழி பாவலர். புதுச்சேரியைச் சேர்ந்த இவரது எழுத்தில் ‘புத்தனைத் தேடும் போதிமரங்கள்’, ‘சிறகின் கீழ் வானம்’ ஆகிய ஹைக்கூ கவிதை தொகுப்புகளும், ‘கல் நில் வெல்’ என்ற குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பும், ‘நினைவில் வராத கனவுகள்’ என்னும் புதுக்கவிதை தொகுப்பும் வெளிவந்துள்ளன.

9 வயதில் எழுதத் தொடங்கிய இவரின் முதல்நூல் வெளியானது பன்னிரண்டாம் அகவையில்! 2007 -ம் ஆண்டில் எழுத்தாற்றலுக்கான தேசியக் குழந்தை விருது பெற்றுள்ள இவர் தற்போது பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார். எழுத்தோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளிலும் முனைப்புகாட்டி வருகிறார். ‘ மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்’ என்ற அமைப்பின் மூலம், வளரும் இளம் எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, வழிகாட்டி வருபவரின் பிடித்தவை பத்து இங்கே…

விருப்பம்: அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது, கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது. மரம் நட்டேன்… இரண்டும் திரும்பி வந்து விட்டது என்பார்கள். அதனால்தான் ஒவ்வொரு பிறந்தநாளிலும் மரக்கன்று நடுகிறேன். மரம் நடுதலும், அது வளர்வதை ரசிப்பதும் என் விருப்பம்.
ஆளுமைகள்: வாழ்க்கைப்பாடம் தந்த திருவள்ளுவர், வாழ்வியல் நெறி தந்த புத்தர், பெண் விடுதலைக்காக அயராது உழைத்த தந்தை பெரியார், ‘அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன்.
மேற்கோள்: கற்றுக்கொண்டதற்கு நீ ஆசிரியன், கற்றுக்கொள்ள வேண்டியதற்கு நீ மாணவன். எல்லோரும் ஆசிரியர்கள், எல்லோரும் மாணவர்கள் - மாவோ.

இடம்: புதுச்சேரி கடற்கரை. கடல் பார்த்தலும், அலைகளுடன் விளையாடும் மழலைகளைக் கண்டு மகிழ்தலும் அகத்திற்கு நெருக்கம்.
நபர்: நிலையான, தூய அன்பு கொண்டு நேசிக்கும் யாவரும் மனதுக்குப் பிடித்தமானவர்களே!
பிடித்த நாள்: உயிர்நேயத்துக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் அறவே ஒழிக்கப்படும் ஒரு நாள்.
வாழ்வியல் தத்துவம்: முயற்சி என்பது விதை போல, அதை விதைத்துக்கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம் – இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்.
பொழுதுபோக்கு: புத்தகமும், இசையும்… பின்னே பயணங்களும், நினைவுகளைச் சுமக்கும் புகைப்படங்களும்!
எழுதியதில் பிடித்தது: இந்த வாழ்க்கை, குழந்தை கைகளில் இருக்கும் மண் பொம்மை.
அயல்நாட்டுத்தலைவர்: சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்பட்டவரும், தமிழர்களிடம் பேரன்பு கொண்டவருமான லீ குவான் யூ.
சுற்றுலாத்தலம்: இயற்கை எழில் நிறைந்த தீவுகளுக்கு எப்போதும் விருப்பப் பட்டியலில் முதலிடம் உண்டு. அப்படியாக மாலத்தீவு மற்றும் மொரிஷியஸ்.
நினைவிடம்: புதுச்சேரிக்கு நீர் வழங்க, குளம் வெட்டித் தாகம் தணித்த அருட்செல்வி ஆயி அம்மாள் நினைவிடம். இதுவே புதுச்சேரி அரசின் இலட்சினையாக உள்ளது.

x