பள்ளியில் முதல் நாள்... குழந்தைகளைத் தயார்படுத்துவது எப்படி?


விஜயதசமி நாளில் பொதுவாக நல்ல விஷயங்களைத் தொடங்குவது வழக்கம். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை பள்ளியில் சேர்ப்பதும் அதில் ஒன்று. சரஸ்வதி கடாட்சம் கிடைக்கட்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க, முதல் நாளில் ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும் பள்ளிக்குச் செல்லும் பிஞ்சுகள் பலரை இந்தக் காலகட்டத்தில் பார்க்க முடியும்.

புதிதாக ஒரு வேலைக்குச் செல்லும்போதோ, பெரிய மனிதர்களைப் பார்க்கச் செல்லும்போதோ, நம் மனதில் ஒருவித பதற்றம் வருவது இயல்பு. பக்குவப்பட்ட நமக்கே அந்தப் பதற்றம் என்றால், பிஞ்சுக் குழந்தைகளைப்பற்றிக் கேட்கவா வேண்டும். நாற்றைப் பறித்து வேறு இடத்தில் நடுவதைப் போல் தங்களைத் திடீரென்று வீட்டில் இருந்து பிரித்து பள்ளிக்கு அனுப்பும்போது குழந்தைகள் நிச்சயம் கலவரப்படத்தான் செய்வார்கள். இதுபோன்ற சூழலில் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் அவர்களை மன ரீதியாக தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

படிப்பின் மீது ஆர்வத்தை விதையுங்கள்

குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போது கலவரப்படாமல் இருக்க, அவர்கள் பள்ளிக்குச் செல்ல சில நாட்கள் இருக்கும்போதே, படிப்பின் மீதான ஆர்வத்தை விதைக்க வேண்டும். நன்றாகப் படித்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம், பள்ளியில் எப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பார்கள், அங்கு என்னவெல்லாம் விளையாடலாம் என்பதைப் பற்றிக் கூறி குழந்தைகளிடம் பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்ட வேண்டும். யாருடைய உதவியும் இல்லாமல் பள்ளியில் தனியாகச் சாப்பிடுவது எப்படி, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை அணுகுவது எப்படி என்பதைப் பற்றியும் சொல்லிப் புரியவையுங்கள். இதன்மூலம், பள்ளிக்குச் செல்வதற்கு ஏற்ற மனநிலையைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்.

x