அவர் திமுக-வுக்கும் நெருக்கமானவர்!
ஓபிஎஸ் - தினகரன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அந்த கான்ட்ராக்டர் தற்போது அதிமுக-வின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முக்கியப் புள்ளி ஒருவரின் ஜெயமான மகன் தானாம். ஓபிஎஸ் சரிப்பட மாட்டார் என்றதும் பதினெட்டு எம்எல்ஏ-க்கள் ஆதரவில் திமுக-வை அரியணை ஏற்றிப் பார்க்கலாம் என்று தினகரன் தரப்பும் திமுக தரப்பும் இதே வீட்டில் தான் ஆலோசனை நடத்தினார்களாம். கான்ட்ராக்டர் திமுக தலைமைக்கும் வேண்டப்பட்டவர் என்கிறார்கள். இந்த சதி ஆலோசனைகள் தெரிந்துதான் அவசர அவசரமாக 18 எம்எல்ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தார்களாம்.
வந்ததுமே வசூல் பேச்சா..?
திருச்சி மாவட்ட சுகாதாரத் துறைக்கு அண்மையில் ஒரு அதிகாரி மாற்றலாகி வந்திருக்கிறார். வந்ததுமே மாவட்டத்திலுள்ள தன் துறை சார்ந்த முக்கியப் பணியாளர்களை அழைத்துக் கூட்டம் போட்டவர், “என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய ஊருக்கு அமைச்சர் என்னை மாத்திருக்காரு. அவருக்கு நான் நிச்சயம் உரிய மரியாதை செஞ்சாகணும். எல்லாரும் அதை மனசுல வெச்சுக்கிட்டு புரிஞ்சு நடந்துக்குங்க” என்றாராம். இதுக்கு வெளிப்படையாவே வாசல்ல ஒரு உண்டியல வெச்சிருக்கலாம்யா!