டிசம்பரில் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அவரது மன்றத்து பொறுப்பாளர்களும் அவரால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாகிகளும் ரஜினி கட்சியை ரெண்டுபடுத்தி விடுவார்கள் போலிருக்கிறது!
பேஸ்மென்ட் ஸ்ட்ராங்க்!
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக அஸ்திவாரத்தை பலமாக்க நினைத்தார் ரஜினி. என்னதான் சினிமாவில் சூப்பர் ஸ்டராக இருந்தாலும் கட்சி என்று வருகிறபோது சரியான கட்டுமானம் இல்லா விட்டால் கவிழ்ந்து விடுவோம் என்று தெரிந்து கொண்ட ரஜினி, முதல்கட்டமாக பூத் கமிட்டிகளை அமைக்க தனது ரசிகர் படைக்கு உத்தரவிட்டார். அப்படித்தான் தமிழகத்தின் சுமார் 65,000 வாக்குச் சாவடிகளுக்கும் தலா 30 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தொடங்கின.
போலிகளைத் தவிர்க்க, பூத் கமிட்டி உறுப்பினர்களின் புகைப்படம், வாக்காளர் அட்டை நகல், செல்போன் எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் சேகரிக்கிறார்கள். இதில்லாமல், 1 கோடி என்று இலக்கு வைத்து தொடங்கப்பட்ட, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையும் தனியாக நடக்கிறது. ஆக, கட்சிக்கான அடித்தளத்தை திட்டமிட்டு செதுக்கிக்கொண்டிருக்கிறார் ரஜினி.