என்றென்றும் ஏழுமலையான்! 11: நைவேத்திய சேவையில் நாராயணன் பக்தர்கள்


திருப்பதி என்றதுமே நமக்கெல்லாம் மறக்காமல் லட்டு பிரசாதம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆனால், நைவேத்திய பிரியன் என பக்தர்களால் பரவசத்துடன் அழைக்கப்படும் அரங்கனுக்கு லட்டு மட்டுமின்றி, காலை சுப்ரபாதம் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை தினமும் பலவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

16 வகையான நைவேத்தியங்கள்

சுமார் 9.5 அடி உயரமுள்ள மூலவருக்கு அவரது உயரத்தின் அடிப்படையிலும், ஆகம சாஸ்திரங்களின் படியும் நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. ஏழுமலையானுக்கு இந்த வேளைக்கு இதுதான் நைவேத்தியம் என்பது ஆகம விதிப்படி இங்கே பின்பற்றப்படுகிறது. அப்படி தினமும் 16 வகையான நைவேத்தியங்கள் ‘போட்டு’ என்றழைக்கப்படும் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு ஏழுமலையானுக்குப் படைக்கப்படுகிறது.

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்ற அன்னப் பிரசாதங்களோடு லட்டு, ஜிலேபி, பாயசம், பணியாரம், போளி போன்ற இனிப்பு வகையறாக்களும் ஏழுமலையான் படையலில் இருக்கும். அத்துடன் பால், வெண்ணெய், பாலேடு போன்ற நைவேத்தியங்களும் அன்றாடம் சுவாமிக்குப் படைக்கப்படும். என்றாலும் சுவாமி வீற்றிருக்கும் குலசேகர படியைத் தாண்டி, கர்ப்பகிரஹத்துக்குள் செல்லும் ஒரே ஒரு நைவேத்தியம் எது தெரியுமா ? அது தத்யோதனம் எனப்படும் தயிர் சாதம் மட்டும் தான்! இது தினமும், உடைந்த புதிய மண் சட்டியில் சுவாமிக்குப் படைக்கப்படுகிறது. இப்படிப் பல நூற்றாண்டுகளாக வம்சாவளியாக ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்துகொடுத்து சேவையாற்றும் ‘போட்டு’ ஊழியர்களைப் பற்றி இந்த வாரம் பேசுவோம்.

ஏழுமலையானுக்குப் பிடித்த தயிர் சாதம்

தொண்டமான் சக்கரவர்த்தி என்பவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். இவர் தினமும் சுவாமியை தங்கத் துளசியால் அர்ச்சனை செய்து வந்தாராம். அதனால் தன்னை மிஞ்சிய பக்தர் யாரும் இப்பூவுலகில் இல்லை என்ற அகங்காரம் அவருக்கு! இந்நிலையில் ஒரு நாள், ஏழுமலையானின் திருப்பாதங்கள் அருகே தங்கத் துளசியுடன் மண்ணால் செய்யப்பட்ட துளசி இலைகளும் காணப்பட்டன. இதைக் கண்ட சக்கரவர்த்தி அதிர்ச்சி அடைந்தார். “ஏழுமலையானே... நான் தினமும் தங்கத் துளசி இலைகளால் அர்ச்சிக்கும் இவ்விடத்தில் மண் துளசி எப்படி வந்தது?” என மன்றாடினார் சக்கரவர்த்தி. அப்போது, “ இந்த மண் துளசி இலைகள் எனது பரம பக்தனான குருவநம்பி என்பவர் எனக்கு அர்ப்பணித்தவை. அவரது பக்திக்கு மிஞ்சியர் யாரும் இப்பூவுலகில் இல்லை” என அசரீரியாய் ஒலித்தாராம் பெருமாள்.

அப்போதே தனது அகம்பாவத்தைத் தொலைத்த தொண்டமான் சக்கரவர்த்தி, குருவநம்பியின் இருப்பிடம் தேடி ஓடினார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை ஒன்றில் மண் பானைகளைத் தயாரித்துக்கொண்டிருந்த ஏழை குருவநம்பியின் காலில் விழுந்து வணங்கிய தொண்டமான் சக்கரவர்த்தி, “ஏழுமலையானுக்கு என்னை மிஞ்சிய பக்தன் இல்லை என்ற கர்வத்தில் இருந்தேன். நீதான் பரமனுக்குப் பிரியமான பக்தன் என அந்த ஏழுமலையானே சொன்னபோது அந்த கர்வம் முற்றும் அழிந்து போனது. தயவு செய்து உன் பாதத்தை எனது கண்ணீரால் கழுவ அனுமதி கொடு” என்று வேண்டியபடி குருவநம்பியின் கால்களில் விழுந்து கதறியபடியே மயக்கமுற்றார்.
அப்போது, தனக்குப் பிடித்த பக்தனான குருவநம்பிக்குக் காட்சி கொடுக்கிறார் ஏழுமலையான். பரமனைக் கண்டதும் பக்தியில் திளைத்த நம்பி, தனது குடிசையில் இருந்த தயிர் சாதத்தை எடுத்து ஏழுமலையானுக்குத் தந்தாராம். அதை மகிழ்வோடு வாங்கி உண்டுவிட்டு மறைந்தாராம் அந்த மலையப்ப சுவாமி. ஏழுமலையானுக்குப் பிடித்தமான பக்தர் தந்த அந்த நைவேத்தியத்தைத்தான் இன்றளவும் முக்கியப் படையலாக சுவாமியின் திருப்பாதங்கள் அருகே உடைந்த புதிய மண் சட்டியில் வைக்கிறார்கள்.

தினமும் 20 மணி நேரம்...

திருமலை மடப்பள்ளியில் தினமும் 20 மணி நேரம் நைவேத்தியம் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. திருப்பதி லட்டை வெளியில் வேறு யாரும் அவ்வளவு சுலபமாகத் தயாரித்துவிட முடியாது. காரணம், பரமனுக்குப் படைக்கப்படும் அதன் தனித்துவமான சுவை. இதுமட்டுமல்லாமல், சிறிய வகை லட்டு, வடை, புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், கதம்பம் போன்றவற்றை சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். சிபாரிசு கடிதம் இருந்தால் வடையும் கிடைக்கும்.
இவை தவிர, ஜிலேபி, முறுக்கு, தோசை, போளி, கேசரி, இனிப்புப் பணியாரம், ஜீரா அன்னம், மிளகு அன்னம், வெண்ணெய், நுரை ததும்பும் பசும்பால், நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் போன்ற பிரசாதங்களும் சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. சுவாமிக்கு தினசரி பிரசாதங்கள், வாராந்திர பிரசாதங்கள், மாதாந்திர பிரசாதங்கள், வருடாந்திர சிறப்புப் பிரசாதங்கள் என வகைவகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன.

ஆகம விதிகளின்படி நைவேத்தியம் தயாரிப்பு

கோயிலின் ஆக்னேய மூலையில், அதாவது தென் கிழக்குப் பகுதியில் வாஸ்துப்படி ‘போட்டு’ என்ற மடப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சுவாமியின் தாயாரின் மேற்பார்வையில் சுவாமிக்கு நைவேத்தியங்கள் தயாரிக்கப்படுவதாக ஒரு ஐதீகம். அதனால் நைவேத்தியங்களைத் தயாரிப்பதிலும் ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சுவாமிக்குப் படைக்கப்படுவதால், வாயில் துணி கட்டியே நைவேத்தியங்களைத் தயாரிக்கின்றனர். இப்படித் தயாராகும் நைவேத்தியங்களை பித்தளை குண்டானில் இட்டுத் துணியால் மூடி, கோயிலுக்குள் எடுத்துச் செல்கிறார்கள். அவற்றை சுவாமிக்குப் படைக்கும்போது அர்ச்சகர் மட்டுமே அங்கு இருப்பார். கருவறை மூடப்பட்டு, காயத்திரி, விஷ்ணு மந்திரங்கள் உச்சரித்தபடி துளசி இலையால் சுவாமிக்கு ஆகம விதிகளின்படி நைவேத்தியம் சமர்ப்பணம் செய்யப்படும். இப்படிப் படைக்கப்பட்ட நைவேத்தியங்கள்தான் வெளியில் எடுத்துவரப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நைவேத்தியங்கள் அனைத்துமே விறகு அடுப்புகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அதிலும், மா, அஸ்வத்தா, பலா மர விறகுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஏழுமலையானுக்கு தினமும் பாலபோகம், ராஜபோகம், சயன போகம் என மூன்று விதமான நைவேத்தியம் படைக்கப்படும். காலை சுப்ரபாதத்தின்போது, நுரை ததும்பிய பசும்பாலும், தூய வெண்ணெய்யும் சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து பாலபோகம் காலை 6 முதல் 6.30 மணி வரை கடைப்பிடிக்கப்படும். அப்போது சுவாமிக்கு புளியோதரை, சக்கரைப் பொங்கல், ரவா கேசரி போன்றவை படைக்கப்படும். அதற்கு முன்பாக முந்தைய நாள் கணக்கு விவரமும் சுவாமிக்குத் தெரியப்படுத்தப்படும். அப்போது அன்னதானம் மூலம் எத்தனை பேர் சாப்பிட்டார்கள், லட்டு, வடை போன்ற பிரசாதங்கள் எத்தனை பேருக்கு, எவ்வளவு விற்கப்பட்டன, அவை மூலம் வந்த வருமானம் எவ்வளவு என்பது குறித்தெல்லாம் சுவாமிக்குக் கணக்கு ஒப்படைக்கப்படும்.

காலை 10-லிருந்து 11 மணிக்குள் ராஜபோகம் நைவேத்தியம் படைக்கப்படும். இதில், வெண் சாதம், புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் அல்லது ஜீரா அன்னம் போன்றவை இருக்கும். அடுத்ததாக இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் சயன போகத்துக்கான நைவேத்தியம் படைக்கப்படும். இதில், மிளகுப் பொங்கல், தோசை, வடை மற்றும் லட்டு, அப்பம், போளி போன்றவை இருக்கும்.

வாராந்திர நைவேத்தியத்தில், பெரிய லட்டு, வடை, ஜீரா அன்னம், வெல்ல தோசை, கொழுக்கட்டை, போளி, உளுத்தம் பூரணம் போன்றவை இடம்பெறும். வியாழன் தோறும் நடைபெறும் திருப்பாவாடை சேவையில், 420 கிலோ அரிசியில் புளியோதரை படைப்பது ஐதீகம். இத்துடன் ஜிலேபி, முறுக்கு போன்றவையும் சிறப்பு நைவேத்தியங்களாகப் படைக்கப்படும். விசேஷ நாட்களான வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், தீபாவளி ஆஸ்தானம் போன்ற நாட்களிலும் சிறப்பு நைவேத்தியங்கள் சமர்ப்பி க்கப்படும்.

முன்பு அன்னப் பிரசாதங்கள் மட்டுமே!

தினமும் நடக்கும் ஏகாந்த சேவையின்போது, சுவாமிக்கு நெய்யால் வறுத்த முந்திரி, பாதாம், மற்றும் சூடான பால் போன்றவை நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும். பல நூறு வருடங்களுக்கு முன்பு தினமும் 16 முறை அரிசியை உலக்கையால் உடைத்து பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்கள் செய்து ஏழுமலையானுக்குப் படையலிடப்பட்டன. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்தில் குதிரை வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும் திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு , புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவைகளை மன்னர்கள் பிரசாதங்களாக வழங்கினார்கள்.

இந்தப் பிரசாதங்களை அவர்கள் ஊருக்கு எடுத்துச் சென்று மற்றவர்களுக்குத் தருவதற்குள் கெட்டுப் போயின. இந்தச் சங்கடத்தைத் தவிர்க்கத்தான் பூந்தி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதுவும் 1966-லிருந்து லட்டு பிரசாதமாக மாற்றப்பட்டது. திருமலையில் தயாராகும் லட்டு உள்ளிட்ட 16 வகையான பிரசாதங்களைத் தயாரிக்கும் பணியில் தினமும் நூற்றுக்கணக்கான முகம் காட்டாத மனிதர்கள் தங்களது சேவையை முழு மனதோடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

நைவேத்திய ரகசியங்கள் சொல்லும் புத்தகம்!

ஏழுமலையான் கோயிலில் கடந்த 23 ஆண்டுகளாகப் பிரதான அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். சமீபத்தில், ‘தி சீக்ரெட் ஃபுட் ஆஃப் காட்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்ட அவர் தனது நூல் குறித்து நம்மிடம் பேசுகையில், “திருப்பதி என்றாலே நமக்கெல்லாம் லட்டு பிரசாதம் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். இங்கு 16 வகையான பிரசாதங்கள் இருப்பதெல்லாம் பலருக்குத் தெரியாது. பல நூற்றாண்டுகளாக இந்த நைவேத்திய முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை கல்வெட்டுகள் மூலமாகவும், ஓலைச்சுவடிகள் மூலமாகவும் அறிய முடிகிறது.

ரமண தீட்சிதர்

அந்த ஆகமங்கள் மாறாத வகையில் இன்றளவும் சுவாமிக்கு நைவேத்தியங்கள் தயாரித்துப் படைக்கப்படுகின்றன. பக்தர்களுக்கும் எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் திருப்பதி பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. நவதானியங்கள், துளசி, ஏலக்காய், வனஸ்பதி உள்ளிட்ட பல மூலிகை பொருட்கள் இந்தப் பிரசாதங்களில் சேர்க்கப்படுவதால் இவை எந்தத் தீங்கும் விளைவிக்காது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்யப்படும் பிரசாதங்கள், அவை தயாரிக்கும் முறை, சுவாமிக்கு சமர்ப்பிக்கும் முறை, அவற்றை சமர்ப்பணம் செய்வது யார் உள்ளிட்ட ரகசியங்களைத்தான் எனது புத்தகத்தில் விரிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறேன்” என்றார்.

மண்டபங்களும் மரபுகளும்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள மண்டபங்கள் பல மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. இந்திய கலாச்சாரத்தையும், சிற்பக் கலையையும் வெளிப்படுத்தும் இந்த மண்டபங்களில்தான் உற்சவ மூர்த்திகளுக்குப் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரங்கநாயக மண்டபம்: ஏழுமலையான் கோயிலுக்குள் செல்லும்போது, துலாபாரத்திற்கு அடுத்தபடியாக இடதுபுறம் இருக்கும் மண்டபமே ரங்கநாயக மண்டபம். இது ரங்கா மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. நவாப்புகள் படையெடுப்பின்போது, இந்த மண்டபத்தில்தான் ரங்கரின் உற்சவர் சிலை பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இதற்கு ரங்கா மண்டபம் எனப் பெயரிட்டுள்ளனர். இங்குதான் சிறப்பு திருமஞ்சன சேவைகள் நடத்தப்படுகின்றன. மேலும், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட விஐபி-க்கள் இந்த மண்டபத்தில்தான் வேத பண்டிதர்கள் ஆசீர்வதிக்க, தீர்த்த பிரசாதம் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.

(முகங்கள் வரும்...)

x