பதறும் பதினாறு 11: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


பருவ வயதில் குழந்தைகள் எதிர்த்துப் பேசுவதும் பெற்றோர் சொல்வதையெல்லாம் கேள்வியோடு அணுகுவதும் இயல்பு. இன்னும் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் எரிச்சல்படலாம் அல்லது கோபப்படலாம். அவர்கள் தங்களை வளர்ந்தவர்களாகக் காட்ட முனைவதன் வெளிப்பாடுதான் இவையெல்லாம். ஆனால், இவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. அதைத் தாண்டாதவரைக்கும் சிக்கல் இல்லை.

இப்படியான எல்லைக்கோட்டைப் பற்றியெல்லாம் தருணுக்குக் கவலையில்லை. அவன் எப்போதும் தன்னந்தனிக்காட்டு ராஜாதான். யாரும் தன்னைக் கேள்வி கேட்பதை விரும்பாதவன். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என அவன் சொன்னால் அதை அனைவரும் ஆமோதித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். அதனாலேயே அவனைப் பகைத்துக்கொள்ள நண்பர்கள் விரும்ப மாட்டார்கள். படிப்பிலும் கெட்டி. எட்டாம் வகுப்புப் படித்தாலும் வயதுக்கு மீறிய அறிவு. எத்தனை பாதுகாப்பான கம்யூட்டரையும் ஹாக் செய்யும் அளவுக்குத் தொழில்நுட்பத்தைத் தெரிந்துவைத்திருந்தான்.

வீட்டிலும் பள்ளியில் நண்பர்கள் மத்தியிலும் தருண் சொன்னதே சட்டம். முன்பெல்லாம் அமைதியாக இருந்தவன் சமீபகாலமாகத் தன்னை எதிர்த்துப் பேசுகிறவர்களைத் திட்டுவதையும் அடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனிடம் அடி வாங்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது அடி வாங்கிய குழந்தைகளின் பெற்றோர் பள்ளியில் புகார் சொன்னார்கள். வகுப்பு ஆசிரியரும் வழக்கம்போல தருணை அழைத்து, கண்டித்து அனுப்பினார். அதற்கெல்லாம் கவலைப்படுகிறவன் இல்லையே அவன். கண்டிப்புக்குப் பிறகு அவனது மூர்க்கத்தனம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

எல்லை கடந்த மூர்க்கம்

பள்ளியில் மட்டுமல்ல, வீட்டுக்கும் அடங்காதவனாக மாறினான். அவனுடைய அம்மா, விவாகரத்தானவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பாட்டி, அம்மா இருவரது அரவணைப்பில்தான் தருண் வளர்கிறான். அப்பா இல்லாத ஏக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவனுடைய மாமாவும் தருணுக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தருவார். தட்டிக் கேட்க ஆளில்லாத சூழல், தருணைத் தறிகெட்டு ஓடச் செய்தது. அவன் அடம்பிடிக்கிறான் என்பதற்காகவே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளே ஸ்டேஷனை அவனுடைய மாமா வாங்கிக் கொடுத்தார். அதிலும் அவன் திருப்தியடையவில்லை. வேண்டியது, வேண்டாதது என அனைத்தையும் கேட்டு வீட்டினரை நச்சரிக்கத் தொடங்கினான். நினைத்த எல்லாமே கிடைக்க வேண்டுமென நினைத்தான். கிடைக்காத போது வன்முறையில் இறங்கினான். வீட்டில் இருக்கும் பொருட்களை உடைத்தான். வீட்டில் அவன் உடைக்காத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அவனது மூர்க்கம் எல்லை கடந்தது.

பள்ளியில் சக மாணவர்களை அடிப்பது, வீட்டுக்கருகில் விளையாடும்போது நண்பர்களை அடிப்பது என இருந்தவன், தன்னுடைய மாமாவையும் அடிக்கத் தொடங்கினான். அப்போதுதான் தருணின் வீடு விழித்துக்கொண்டது. அவனிடம் ஏதோ சிக்கல் இருப்பதை முதலில் உணர்ந்தவர் அவனுடைய மாமா. 50 வயது மாமாவை அடிக்கிறோமே, அது தவறு என்பதை உணரும் நிலையில் அவன் இல்லை. ஏன் இப்படிச் செய்கிறான் தருண்?

“பருவ வயதில் சில குழந்தைகளிடம் நடத்தை மாற்றம் ஏற்படலாம். ஆனால், எல்லாமே அளவோடு இருக்க வேண்டும். தருணின் விஷயத்தில் அவனை வளர்த்தவிதத்தில்தான் சிக்கல். குழந்தை முதலே அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருக்கிறான். அப்பா இல்லை என்பதையே காரணம்காட்டி அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குச் சில விஷயங்களை மறுத்திருந்தால் இப்படி ஆகியிருக்காது. அன்பு எவ்வளவு தேவையோ கண்டிப்பும் அந்த அளவுக்குத் தேவை. அவனுக்கு வீட்டில் தகுந்த ரோல் மாடல் இருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது” என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல மருத்துவர் குருமூர்த்தி.

பள்ளிகளில் வெளிப்படும் வன்முறை

தருணின் தனிப்பட்ட குடும்பச் சூழல் அப்படி, அதனால்தான் அவன் பருவ வயதில் மூர்க்கமாக நடந்துகொள்கிறான் என நினைத்தால் அது தவறு. பெரும்பாலான பள்ளிகளில் பதின் பருவத்தில் இருக்கும் ஆண் குழந்தைகள் எடுத்ததற்கெல்லாம் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். புரிந்துகொண்ட பெற்றோர், அமைதியான குடும்பச் சூழல் என வளரும் குழந்தைகள்கூட பள்ளிக்கு வந்துவிட்டால் வேறு முகம் காட்டக்கூடும். குறிப்பிட்ட சதவீதக் குழந்தைகள் ஆறாம் வகுப்பிலிருந்தேகூட அடிதடியில் இறங்கிவிடுகிறார்கள்.

ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உடன் படிக்கும் மாணவனின் தவறை ஆசிரியரிடம் ஒரு மாணவன் சொல்கிறான். மாட்டிக்கொண்ட மாணவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து மாட்டிவிட்ட மாணவனை அடிக்கிறார்கள். அடிப்பது என்றால் சாதாரண அடியெல்லாம் இல்லை. பெரும்பாலும் முகத்தில் குத்துவது, கீழே தள்ளிவிடுவது என ஆபத்தான முறையில் தாக்கிக்கொள்கிறார்கள். சிறு சிறு சண்டைகள்கூட தையல் போடுகிற அளவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. ஒரு வகுப்பு முடிந்து இன்னொரு வகுப்புக்கு ஆசிரியர் வருவதற்குள்ளான இடைவேளையைக்கூட விட்டுவைப்பதில்லை. அந்த நேரத்திலும் அடித்துக்கொள்கிறார்கள். ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் தங்களை ஹீரோவாகக் காட்டிக்கொள்ள மாணவர்கள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால், இருபாலரும் படிக்கும் பள்ளிகளில் காதலும் ஒரு காரணமாக இருக்கிறது.

குருட்டு நம்பிக்கை

பத்தாம் வகுப்புவரை மட்டுமே இந்த நிலை. அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் மத்தியில் நடக்கிற வன்முறையில் சாதிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மாணவர்கள் ஏரியாவாரியாகப் பிரிந்து அணி சேர்வதும் சாதி அடிப்படையில் குழுக்களாகப் பிரிந்து இயங்குவதும் நடக்கிறது.

“இதையெல்லாம் ஓரளவுக்கு மேல தட்டிக்கேட்க முடிவதில்லை. சில மாணவர்கள் தங்கள் சாதித் தலைவரின் பெயரை ஸ்கூல் டேபிளில் எழுதிவைப்பார்
கள். இன்னும் சில மாணவர்கள் கைகளில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும் பட்டைகளையும் ரிப்பன்களையும் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவார்கள். அவற்றையெல்லாம் கழற்றச் சொன்னால் எல்லா மாணவர்களும் அதற்குக் கீழ்ப்படிவதில்லை. ‘சார், நீங்க இப்படிச் சொன்னா என்னை சாதி பேரைச் சொல்லித் திட்டினீங்கன்னு புகார் கொடுத்துடுவேன்’னு மிரட்டறாங்க. அந்த நேரத்துல எங்களால எதுவும் செய்ய முடியறது இல்ல. பள்ளி நேரத்தில் அவர்கள் வன்முறையில ஈடுபடாம பார்த்துக்கறோம். அப்படியும் உணவு இடைவேளையிலயும் பள்ளி முடிஞ்சதுக்கு அப்புறமும் குழு குழுவா பிரிஞ்சி அடிச்சிக்கறாங்க” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத விருதுநகர் மாவட்டப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

பள்ளியில் இப்படி வெளிப்படுகிற வன்முறை குணத்தை அந்த மாணவர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களிடத்திலும் பின்னாளில் வெளிப்படுத்துவார்கள். கல்லூரியில் சேரும்போது அது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு, சில நேரம் அவர்களின் எதிர்காலத்தையேகூட கேள்விக்குள்ளாக்கிவிடுகிற அபாயமும் உண்டு. “என் பையன் அந்த மாதிரி தப்புத் தண்டாவுக்கெல்லாம் போறவன் இல்லை” என்று தங்கள் குழந்தைகள் மீது பெற்றோர் வைக்கிற குருட்டு நம்பிக்கைகூட அந்தக் குழந்தைகள் பாதைமாறக் காரணமாகிவிடும்.

அடிக்கச் சொல்லுமா அன்பு?

குழந்தைகள் வீட்டில் நம்முன் எப்படி நடந்துகொள்கிறார்களோ அதேபோலத்தான் பள்ளியிலும் வெளியிலும் நடந்துகொள்வார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சித்தார்த்தின் கதையைக் கேட்டால் நம் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். சித்தார்த் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். எல்லோருக்கும் இனியன் அவன். எப்போதும் சிரித்த முகத்துடனும் குழந்தைத்தனத்துடனும் பேசுவான். அவனது ஒவ்வொரு செயலிலும் புத்திசாலித்தனம் வெளிப்படும். பொறுப்பும் பொறுமையும் ஒருசேர நிறைந்தவன்.

பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இரண்டாம் வகுப்புப் படிக்கும் தன் தங்கையைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்வான். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியதும் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டுப் படிக்க உட்கார்ந்துவிடுவான். தங்கைக்கும் வீட்டுப் பாடத்தில் உதவுவான். இரவில் அம்மாவுக்குச் சமையலில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வான். சித்தார்த்தின் செயலைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் குறைவு. ஒரு நாள் இரவு வீடு திரும்பிய பெற்றோர், தங்கள் மகளின் நெற்றியைப் பார்த்துப் பதறிவிட்டனர். காரணம் கேட்டபோது அண்ணன் அடித்துவிட்டதாகச் சொன்னாள். சித்தார்த்தோ, இருவரும் விளையாடும்
போது அவள் தவறி விழுந்துவிட்டதாகச் சொன்னான். மகன் பொய் சொல்ல மாட்டான் என அந்தப் பெற்றோருக்குத் தெரிந்ததால் அதை அப்படியே விட்டுவிட்டனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் தங்கள் மகளுக்குக் கையில் அடிபட்டிருந்ததைப் பார்த்த சித்தார்த்தின் பெற்றோருக்குச் சந்தேகம் வந்தது.

குழந்தையோ வலியில் அழுதபடி இருக்க, இந்த முறையும் விளையாடியபோது விழுந்துவிட்டதாக சித்தார்த் சொன்னான். மகன் சொல்வதை நம்பவும் முடியாமல் சந்தேகிக்கவும் முடியாமல் அந்தப் பெற்றோர் தடுமாறினர். “ஏன் இப்பல்லாம் உங்க பையன் அவன் தங்கச்சியைப் போட்டு அடிச்சிக்கிட்டே இருக்கான்?” எனப் பக்கத்து வீட்டில் இருப்பவர் கேட்டபோதுதான் அந்தப் பெற்றோருக்கு உண்மை தெரிந்தது. அன்பும் அமைதியுமாக இருந்த சித்தார்த் ஏன் இப்படி மாறினான்?

(நிஜம் அறிவோம்...)

x