காந்தக் கறியும்... மீன் வெந்தயக்கீரை தவாவும்!
“எங்க கிராமத்து வீட்டுல எந்த நேரமும் சமையல் நடக்கும். எப்ப யார் வந்தாலும் விருந்துக்கு பஞ்சமிருக்காது. அப்படி வீட்டுச் சாப்பாட்டின் சுவையிலேயே ஊறி வளர்ந்தவள் நான். இப்ப கட்சிப் பணிக்காக பல்வேறு மாநிலங்களுக்கும் போகும்போதும் யாராவது சொந்தக்காரங்க அல்லது தெரிஞ்சவங்க வீட்டுலதான் சாப்பாடு. கட்சி வேலையா கரூர்ல இருக்கும் நாட்களில், என் ஒரே சாய்ஸ் ‘ஹோட்டல் ஹேமலா’ தான்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான கரூர் ஜோதிமணி.
“10 வருசமா இந்த ஹோட்டல்ல சாப்பிடுறேன். அமைதியான வீட்டுச் சூழலோட இருக்கும். நிறைய இடம் விட்டு தனித்தனியா மேசைகள் இருக்கிறதால எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் பொறுமையா உட்கார்ந்து ரசிச்சுச் சாப்பிட முடியும். ரெகுலர் வாடிக்கையாளர் என்பதால் இங்க இருக்கிற ஒவ்வொரு ஊழியர்களையும் எனக்குத் தனிப்பட்ட முறையில தெரியும். அதனால் மதியம் மூணு மணிக்கு வந்தாலும், இரவு பதினோரு மணிக்கு வந்தாலும் அலுப்பு பாக்காம என்னன்ன தேவையோ அதைத் தயார் செஞ்சு கொடுப்பாங்க. கூட வர்ற கட்சிக்காரங்களையும் அதே அன்போட உபசரிப்பாங்க. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், குஷ்பு, ப.சிதம்பரம்னு யார் வந்தாலும் அவங்கள இங்க அழைச்சுட்டு வந்துருவேன்.
முதல்ல, கோழி ரசம் கொண்டுவந்து வச்சிடுவாங்க. அத ருசிச்சு குடிச்சு முடிச்ச பின்னாடி ‘காந்தக்கறி புர்க் டிக்கா’வும், ‘மீன் வெந்தயக்கீரை தவா’வும் வந்துடும். அதிகம் காரம் இல்லாத, வயித்துக்கு தீங்கு பண்ணாத சுவை. வெள்ளைச்சோறு, அல்லது இட்லி, தோசை, நாண் இதுல ஏதாவது ஒண்ணோடசேர்த்து ஒரு கட்டுக் கட்டிடுவேன். முத்தாய்ப்பா ஃபிரைடு ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டுத்தான் எந்திரிப்பேன். வாயில போடும்போது சூடா இருக்கிற அது உள்ளபோய் கரைஞ்சதும் உச்சந்தலையை புடுச்சி இழுக்கிற மாதிரியான ஒரு ஜிலிர்ப்போடு அது ஒரு தனிச்சுவை” என்று தான் விரும்பி உண்ணும் உணவின் வகைகளை ஜோதிமணி பட்டியலிட்டு முடிக்கவும் அந்த அய்ட்டங்கள் அனைத்தும் அவரது மேசைக்கு வரவும் சரியாக இருந்தது. சொன்னது மாதிரியே ரசித்து ருசித்துச் சாப்பிட்டு முடித்தார்.
“ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின், வைகோ, தினகரன், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் உள்பட கரூருக்கு எந்த விஐபி வந்தாலும் அவர்கள் தங்குவதும், சாப்பிடுவதும் இங்குதான். லாபத்தைவிட, வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவு கொடுக்கணும்கிறதுதான் எங்களோட பிரதான நோக்கம். இதுல நான் மட்டுமில்ல எங்க ஊழியர்களும் உறுதியா இருக்கிறதால சமையல் ருசிக்குது. சமையல்கட்டுக்குள்ள எப்ப வேணும்னாலும் நான் நுழைஞ்சு ருசி பார்ப்பேன். நல்லாயிருந்தா மட்டும்தான் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவாங்க. சாப்பாடு எப்பவுமே தரமா ருசியா இருக்க அதுதான் காரணம்” என்கிறார் ஹோட்டல் உரிமையாளர் எம்.ரவி.
அடுத்து, காந்தக்கறி புர்க் டிக்காவும் மீன் வெந்தயக்கீரை தவாவும் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காந்தக்கறி புர்க் டிக்கா: இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். நாட்டுகோழி அல்லது பிராய்லர் சிக்கன் எதில் வேண்டுமானாலும் செய்யலாம். நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்துக்குத் தேவையான செய்முறை. அரைகிலோ சிக்கன், இரண்டு மாதுளம்பழம், சீரகம் 25 கிராம், மல்லி 50 கிராம், மிளகு 20 கிராம், பட்டை, கிராம்பு 30 கிராம், வரமிளகாய் 50 கிராம், பெரிய எலுமிச்சை 1, தயிர் 100 மிலி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் 50 கிராம், எண்ணெய் 30 மிலி மற்றும் தேவையான அளவு உப்பு.
மல்லியை லேசாக வறுத்து எடுத்துக்கொண்டு அதோடு மிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு பவுடராக அடித்து எடுத்துக்கொள்ளவும். மாதுளம் முத்துக்களை உதிர்த்து அதைத் தனியாக விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சையை சாறுபிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து அதில் தயிர், எண்ணெய், உப்பு சேர்த்து ஒரே கலவையாக்கி அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை பிசறி நன்றாக ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரத்துக்குக் குறையாமல் ஊறியதும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் சிக்கன் கலவையை வேகவைக்க வேண்டும். குறைவான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேகவைத்தால் காந்தக்கறி புர்க் டிக்கா ரெடி. புளிப்பு, இனிப்பு காரம் என மூன்று சுவையும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை
யில் இருக்கும். தேவைப்பட்டால் புதினா சாஸ் சேர்த்துச் சாப்பிடலாம்.
மீன் வெந்தயக்கீரை தவா: தேவையான பொருட்கள் வஞ்சிரம் போன்ற சதைப்பற்றுள்ள மீன் ஒரு கிலோ, உலர்ந்த வெந்தயக்கீரை 50 கிராம், தயிர் 200 மிலி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் 50 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் பவுடர் 20 கிராம், மிளகாய்த் தூள் 50 கிராம், எண்ணெய் 20 மிலி, எலுமிச்சை சாறு 20 மிலி, தேவையான அளவு உப்பு. இவற்றில் மீன் தவிர மீதமுள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும். கெட்டிப் பதமாக மசாலா தயார் செய்துகொண்டு உப்பு, உரைப்பு பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவேண்டும். மீன் துண்டுகளை எடுத்து அதன் இருபக்கமும் மசாலாவில் நன்றாகத் தோய்த்து எடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து அதில் லேசாக எண்ணெய் காட்டி வேகவைத்து எடுத்துக்கொண்டால் ஒரு வித்தியாசமான மீன் உணவு தயார். இதன்மீது மல்லித்தழை போட்டு வெங்காயம், எலுமிச்சை துண்டுகள் வைத்து அலங்கரிக்கலாம்.
கரூருக்குப் போக முடியாவிட்டாலும், நம் வீட்டிலேயே முயன்று பார்க்கலாமே?!