மெல்லக் கைகூடும் காந்தியின் கனவு - மக்களை தட்டியெழுப்பும் கிராமசபா கூட்டங்கள்


கா.சு.வேலாயுதன்

சுதந்திர தாகத்தை அஹிம்சை உரம்கலந்து விதைத்த காந்தி, ‘கிராம சுயராஜ்யம்’ என்பதையும் கூடுதலாக முழக்கம் செய்தார். கிராமங்கள் தன்னிறைவு அடைவதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்பது காந்தியின் வேதம். அதன்படி உருவாக்கப்பட்டதுதான் கிராமசபாவும் பஞ்சாயத்துராஜ் அமைப்பும். கிராமசபாக்கள் மூலம் பொதுமக்கள் நேரடியாக அரசு நிர்வாகத்தில் பங்கேற்று இயக்க முடியும். நேர்மையாக நிமிர்ந்து நின்று அதிகாரிகளைக் கேள்வி கேட்கவும் முடியும். அதில் நியாயம் இருந்தால் அதை உடனே செயலுக்கும் கொண்டு வர முடியும். இத்தனை அதிகாரம் கொண்ட கிராமசபாக்கள் இப்போது மனு நீதி நாள் முகாம்களைப் போல மாறிவிட்டதுதான் சொல்ல முடியாத அவலம்!

தமிழகத்தில் ஆண்டு தோறும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய 4 நாட்கள் கிராம சபாக்கள் கூட்டப்படுகிறது. தமிழகத்தில் ஊராட்சி மன்றங்கள் சுமார் 12 ஆயிரத்து 500 உள்ளன. அவை அனைத்துமே கிராமசபா கூட்டங்களைக் கட்டாயம் நடத்தவேண்டும். முன்பெல்லாம் இந்தக் கூட்டங்கள் நடப்பதே மக்களுக்குத் தெரியாது. அப்படியே நடந்தாலும் சம்பிரதாய சடங்காக நடக்கும். ஆனால், இப்போது பல இடங்களில் மக்கள் கிராமசபாவின் அதிகாரத்தைப் புரிந்துகொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2-ம் தேதி கோவை மாவட்டத்தில் நடந்த சில கிராமசபா கூட்டங்களுக்கு நானும் போயிருந்தேன். அதில் பல கூட்டங்களில் அப்படித்தான் மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஒரு சில ஊராட்சிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே மக்கள் வந்திருந்ததால் அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திலும் கிராமசபா கூட்டங்கள் நிறைவுக்கு வந்தன. மக்கள் கூடிய சபாக்களிலோ ஏகப்பட்ட சலசலப்புகள்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னிமடை ஊராட்சியில் முப்பது நாற்பது பேர் கூடியிருந்தார்கள். ஊராட்சி மன்ற ஊழியர்களும் அதில் அடக்கம். வந்தவர்களை வைத்து தீர்மானங்களை நிறைவேற்றியதால் கூட்டமும் சீக்கிரமே முடிந்தது. அதில் கலந்துகொண்ட துப்புரவுத் தொழிலாளர்கள் சிலர், “பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்கள் இருந்தப்ப பெருங்கூட்டமே வரும். கட்டுப்படுத்த முடியாது. பந்தல் போட்டு, பஞ்சாயத்துப் பேசி கூட்டம் முடியறதுக்கு நாலு மணிநேரம் ஆயிடும்! இப்ப இருக்கிற அதிகாரி புதுசு. அவரால என்ன முடியுமோ அதைச் செஞ்சிருக்காங்க!” என்றார்கள்.

x