வேண்டாம் இன்னொரு அவப்பெயர்!


வள்ளுவர் சொல்லாத வாழ்க்கை வழிமுறையே கிடையாது. ‘தெரிந்து செயல்வகை’ அதிகாரத்தில், ஆள்வோருக்கு பொட்டில் அறைந்தாற் போல் அவர் சொல்லிவைத்த அறிவுரை இப்போதும் எப்போதும் நினைவுகூரத் தக்கது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

கர்நாடக பெருமழையால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணை மளமளவென நிரம்பியது. அப்போதே டெல்டா பாசன வாய்க்கால்களைத் தூர்வாரச் சொல்லி அரசை எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும், ஊடகங்களும் ஒன்றுக்குப் பலமுறை எச்சரித்தன. ஆனால், அரசு அதை முழுமையாகச் செய்யத் தவறியது. ஆற்றின் வழியே அபரிமிதமாய் ஓடிய நீர், பயந்தது போலவே கடலில் கலந்ததே தவிர கடைமடையை அடையவில்லை!

இதோ, பெருமழை பற்றிய ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கிளம்பியிருக்கிறது. இன்னமும் அரசு எந்திரம் கழிவுநீர், மழைநீர் கால்வாய்களை குச்சியால் குத்திக் கொண்டிருக்கிறது. இனிவரும் பருவத்தில் மழை கூடுதலாகவே இருக்கலாம் என்பதால் ஒருமுறை சென்னை மாநகரம் அடைந்த பெருந்துயரம் மறுபடியும் அரங்கேறிவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு எழத் தொடங்கியிருக்கிறது. கடைசி நிமிடம் வரை கண்மூடி இருந்துவிட்டு திடீரென ஓர் இரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டதுதான் 2015-ல் சென்னை மாநகர் மூழ்கித் தவித்ததற்கு முக்கியக் காரணம்.

x