தந்தை வழியில் தடம் பதித்த தனயன்!


சில நிமிடங்களே ஓடும் துண்டு சலனப் படங்களின் சகாப்தம் 1910 வாக்கில் முடிவுக்கு வருகிறது. முழு நீள மவுனப்படங்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் அறிமுகமாகின்றன. பம்பாய், அமெரிக்காவில் தயாரான மவுனப்படங்கள் சென்னையிலும் திரையிடப்படுகின்றன. அந்தச் சமயத்தில் சைக்கிள், கார்களை இறக்குமதி செய்து, சென்னையின் மில்லர்ஸ் சாலையில் இருந்த தனது கடையில் விற்றுவந்தார் வேலூரைச் சேர்ந்த நடராஜ முதலியார். மவுனப்படங்களைப் பார்த்த அவருக்கு படத் தயாரிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. உடனே, பூனா சென்று ஸ்டூவர்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேயரிடம் சினிமா கேமராவை இயக்கவும், ஃபிலிம் சுருளைக் கழுவி ‘உருத்துலக்க’வும் கற்றுக்கொண்டு மீண்டும் சென்னைக்கு வந்தார்.

வந்தவுடன் ‘இந்தியன் ஃபிலிம் கம்பெனி’ என்ற தென்னிந்தியாவின் முதல் பட நிறுவனத்தைத் தொடங்கி, ‘கீசகவதம்’ என்ற தமிழ்நாட்டின் முதல் மவுனப் படத்தை 1916-ல் எடுத்தார். ஆங்கிலேயர் அல்லாத சென்னைவாசி ஒருவரால் கட்டப்பட்டு, மூன்று ஆண்டுகளே ஆகியிருந்த கெயிட்டி திரையரங்கிலும் இன்னும் சில டூரிங் டாக்கீஸ்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது. அடுத்த வருடமே அவர் ‘திரௌபதி வஸ்திரா பரணம்’ என்ற தனது இரண்டாவது படத்தையும் தயாரித்து வெளியிட்டார். அடுத்து வந்த ஆண்டுகளில் ‘மாருதி விஜயம்’, ‘மார்க்கண்டேயா’ ஆகிய படங்களையும் தயாரித்தார். ஆனால், தங்கள் வசம் இருந்த திரையரங்குகளில் முதலியாரின் படத்தை நுழையவிடாமல் ஆங்கிலேயர்கள் தடுத்தனர். இதனால் வெறுத்துப்போன முதலியார், தனது மவுனப்படங்களை ஆந்திராவின் பல பகுதிகளில் திரையிட்டு பொருளீட்டினார். சொந்த மண்ணில் தனது படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காததும் வேலூரின் சத்தூவாச்சேரில் அவர் உருவாக்கியிருந்த ஸ்டுடியோ தீக்கிரை ஆனதும் நிரந்தரமாகப் படத் தொழிலை விட்டு நடராஜ முதலியார் வெளியேறக் காரணமாக அமைந்துவிட்டன.

திரையரங்குகள் தந்த துணிவு!

இந்தச் சமயத்தில் ‘க்ரோனோமெகாபோன்' (Chronomegaphone) என்ற ஒலிக்கும் கருவியின் உதவியுடன் மவுனப்படங்களை பேசும் படங்கள் போல திரையிட்டுக் காட்டி, மக்களை வாய்பிளக்க வைத்தார் சென்னைவாசியான ரகுபதி வெங்கையா. தனது கருவி மற்றும் துண்டுப்படங்களுடன் உலகம் சுற்றித் திரிந்து பொருளீட்டிய வெங்கையா, பிறகு சென்னை திரும்பினார். ‘மக்களைத் தேடி சினிமா செல்வதை விட சினிமாவைத் தேடி மக்கள் வரவேண்டும்’ என்று முடிவுசெய்த அவர், 1913-ல் ‘கறுப்பர்கள் சாலை’ என்று அழைக்கப்பட்ட ‘பிளாக்கர்ஸ்’ ரோட்டில் சாமானிய மக்களின் குடியிருப்புக்கு மத்தியில் சென்னையின் முதல் தனியார் திரையரங்கைக் கட்டினார். அதுதான் கெயிட்டி. அதன்பின்னர் மேலும் இரு திரையரங்குகளைக் கட்டினார். அப்போது அவரது கைவசம் மூன்று திரையரங்குகள் இருந்தன.

x