எம்.சோபியா
மதுரையைச் சேர்ந்த எழுத்தாளரான சேதுமணி, ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரும் கூட. தமிழ் மண், மக்கள், மொழிக்காக இயங்கும் ‘தமிழர் பேரலை' அமைப்பின் நிறுவனர். சிந்தனையாளர்; சிறந்த பேச்சாளர். 1995-ம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘சிறந்த ஆசிரியர்’ விருது பெற்றவர். இவரது ஆய்வுக் கட்டுரைகள் வியப்பளிப்பவை. இவர் எழுதிய, ‘மொழி பெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும்' நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. மதுரை காமராசர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மட்டுமின்றி சிங்கப்பூர் பல்கலையிலும் பாடநூலாகியுள்ளது, இவரது ‘மொழி என்னும் பெருவரம்' என்ற சிறுநூல்.
இவரது ‘நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்?' என்ற 30 பக்க நூல் ஓராண்டில் (2016-17) 5000 படிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. எழுதிய நாவல்கள் 4, சிறுகதைத் தொகுப்பு 1, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பழந்தமிழ் நூல்கள் 4, இன்னும் இவர்தம் எழுத்துகள் மூலம் எட்ட முயலும் உயரங்கள் - தமிழ் வளர்ச்சியும் மானுட மலர்ச்சியும். இவரது ‘தமிழ் நாவல்களில் மதிப்புகள்' என்ற நூலைப்பற்றி மறைந்த மேதை கோமல் சுவாமிநாதன், “அவர் புத்தகம் ஒரு சரியான ஆய்வாளரை அடையாளம் காட்டிவிட்டது... சமீப காலத்தில் தற்கால இலக்கியம்பற்றி வெளிவந்துள்ள மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று” என்று பாராட்டியிருக்கிறார். முனைவர் சேதுமணிக்குப் பிடித்தவை 10 இங்கே...
ஆளுமைகள்: இயேசு என்ற போராளி (மதம் பிடிக்காது).
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்று தான் உரைத்த அறங்களுக்கே புறனடை (exception) படைத்த வள்ளுவன். என்னை ஈர்த்த இன்னொரு முக்கியமான ஆளுமை ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை டாக்டர் ஆனிமென் அவர்கள்.