ஆதித்தமிழ் முறையில் 4,621 திருமணங்கள்!- 91 வயதிலும் தொடரும் தமிழ் தொண்டு


இரண்டு மணமாலை, இரண்டு துணை மாலை, விளக்கு ஒன்று இவற்றை மட்டுமே வைத்து எளிய முறையில் 4,621 தமிழ் முறைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார் தமிழறிஞர் இரா.இளங்குமரனார். வயது 91 நிறைந்துவிட்டது. ஆனாலும், அடுத்த பிப்ரவரி மாதம் வரையில் திருமண அழைப்புகளால் அவரது நாட்குறிப்பு நிரம்பி வழிகிறது.

மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றேன். துணைவியாரும், மகனும் உபசரித்து மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். படிகளைப் பார்த்ததுமே, இத்தனை படியேறியா அய்யா மாடிக்குச் செல்கிறார் என்று வியப்பு ஏற்பட்டது. இதுவரையில் 550 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இன்னும் 50 புத்தகங்கள் அச்சுக்குக் காத்திருக்கின்றன.

அறைக்குள் நுழைகையில், வேட்டி, மேல்துண்டு மட்டும் அணிந்து மணிமேகலைக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார் இளங்குமரனார். தமிழ் முறைத் திருமணங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? என்று அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

“இளம் வயதிலேயே தமிழ் மீது ஆர்வம். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே மேடையேறத் தொடங்கிவிட்டேன். 16 அகவையில் (1946-ல்) தமிழாசிரியரானேன். சிக்கிரமே திருமணமும் நடந்தது. சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் ரொம்பவும் எளிமையாக நடந்தது எனது திருமணம். அறுகாலி (பெஞ்சு) மேல் சமுக்காளம் விரித்து கிழக்கு முகமாக மணமக்களாகிய எங்களை அமரச் செய்தார்கள். மணமகளுக்குச் சீலையும், சட்டையும் ரெண்டே முக்கால் ரூபாய். எனக்கு வேட்டியும் துண்டும் ரெண்டே கால் ரூபாய். மாலையாக நூற்சிட்டங்கள் (கதர் நூல்) இரண்டு, மாற்று மாலையாக மல்லிகை மாலை இரண்டு. மொத்தச் செலவே அவ்வளவுதான். திருமணத்தை நடத்தியது அய்யரல்ல, உள்ளூர் மகளிர்! கெட்டி மேளம்? மகளிர் குலவை. வாழ்த்தும் அந்தத் தாய்மாரே. அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், எரி(தீ) வளர்த்தல், அயன்மொழி மந்திரம் ஓதுதல் போன்ற சடங்குகள் எதுவும் இல்லை. அப்போது எங்கள் ஊரில் நடந்த அத்தனை திருமணங்களும் அப்படித்தான் நடந்தன.

x