கரு.முத்து
அதிமுக-வில் இருந்தாலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன். அதிமுக மூன்றாகப் பிரிந்திருந்த நேரத்தில், ``ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும்’’ என்று துணிச்சலாக உபாயம் சொன்னவர். ``சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து துரத்த வேண்டும்’’ என ஆளுக்கு முந்தி ஆர்ப்பாட்டம் கிளப்பியவரும் இவர்தான். இப்போது, தனது மாவட்டத்துக்கு வந்த ஆளுநரை வரவேற்கப் போகாமல் அவருக்கு எதிராகவும் பொங்கியிருக்கிறார். ஆளுநரைப் புறக்கணித்தது உள்ளிட்ட பல கேள்விகளோடு ராமச்சந்திரனைச் சந்தித்தேன். அத்தனைக்கும் வெளிப்படையாகவும் வெள்ளந்தித் தனமாகவும் பதில் சொன்னார். அவரது பேட்டியிலிருந்து...
ஆளுநர் நிகழ்சியை நீங்கள் ஏன் புறக்கணித்தீர்கள்?
அவரது நிகழ்ச்சியில் நான் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? மக்களிடம் மனுவாங்க அவர் யார்? இங்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் இல்லையா..? இந்தக் கேள்விகள் இருந்ததால்தான், அதிகாரிகள் அழைத்தும் நான் ஆளுநரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. ரெட்டை ஆட்சி முறைக்கு பிஜேபி வழிகோலுகிறது. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தங்களது ஆட்சியை மறைமுகமாக திணிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் புதுச்சேரியிலும் டெல்லியிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சில முதல்வர்கள் வெளிப்படையாக வெடித்திருக்கிறார்கள். சிலர், சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.