சைஸ் ஜீரோ 10: சாப்பிடுவதிலும் கொள்கை தேவை!


சித்தாந்தம் இல்லா கட்சி மக்கள் அபிமானம் பெறாது. கொள்கை இல்லாத சாப்பாட்டு முறை ஆரோக்கியமான உடலைப் பெற துளியும் உதவாது. உலக அரசியலுக்கும் உடல் அரசியலுக்கும் கொள்கை அவசியம் என்பதை உணர்த்தப் போகிறது இந்த அத்தியாயமும் இதற்கு அடுத்த அத்தியாயமும்.

பசித்தால் சாப்பிடப் போகிறோம் இதிலென்ன கொள்கை தேவை எனக் கேட்கும் உங்களுக்காக 4 விதிகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.
டயட் என்பது சமச்சீரான ஊட்டச்சத்து நிரம்பிய உணவை 4 கொள்கைகளைப் பின்பற்றி சாப்பிடுவதே. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்... உணவுச் சங்கிலியைப் போல் இந்த உணவு உண்ணும் சங்கிலியும் தொடர்ச்சியானது. 4 விதிகளில் உங்கள் சவுகரியத்துக்கு ஒன்றைவிட்டுவிட்டு ஒன்றைப் பின்பற்ற முடியாது.

விதி 1: கண்விழித்தவுடன் காஃபியும், டீயும் கூடாது!

காலையில் எழுந்தவுடன் டீ, காஃபி போன்ற பானங்களைக் குடிக்கக்கூடாது. பிளாக் டீ, பிளாக் காஃபி, க்ரீன் டீ இன்னும் நீங்கள் என்ன பெயர் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் நான் `நோ' என்றுதான் சொல்வேன். அதற்குக் காரணம் இருக்கிறது. இரவு தூங்கி எழுந்தவுடன் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்துவிடும். குறைந்த அந்த சர்க்கரையின் அளவை கணிசமான அளவு உயர்த்த வேண்டுமானால் எழுந்தவுடன் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் ஏதாவது சாப்பிட்டுவிட வேண்டும்.

x