என்றென்றும் ஏழுமலையான்! 10: பக்தனுடன் பகடை ஆடிய பெருமாள்


ஏழுமலையான் மீது தீரா காதலும் பக்தியும் கொண்ட அடியவர்கள் பலரும் அவருக்கு பல வடிவங்களாக, பல நிலைகளில் இருந்து அருந்தொண்டாற்றி வருகிறார்கள். அதேபோல் அந்த ஏழுமலையானும் பல்வேறு அவதாரங்கள் எடுத்து தனது அடியவர்களை காத்து வருகிறார். அப்படியொரு பக்தனின் உயிர் காக்க, யானை வடிவில்
வந்தார் ஏழுமலையான். அத்தகைய பெருமையைப் பெற்ற திருமால் பக்தரான ஹத்திராம் பாவாஜி குறித்து இந்த வாரம் பார்ப்போம்.
திருமலையில் ஏழுமலையானின் கோயிலுக்கு தென் கிழக்கில் அமைந்திருக்கிறது ஹத்திராம் ஜி மடம். சித்தராக கருதப்படும் ஹத்திராம் பாவாஜி ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே ஆன்மிக பாதையில் பயணிக்கத் தொடங்கிய இவர். பரம்பொருளை அடைய தனது சீடர்களுடன் பல நாடு, தேசம் எனக் கடல் கடந்தும் புனிதப் பயணம் மேற்கொண்டார். இறுதியில், தனது தேடல் திருப்பதி திருமலையில்தான் இருக்கிறது என அறிந்து ஏழுமலையான் கோயிலுக்கு அருகிலேயே ஒரு ஆசிரமம் அமைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்.

மஹந்த் அர்ஜுன் தாஸ்

மஹந்துகள் வம்சம்

மஹந்துகள் வம்சத்தில் வந்த இவர், திருமலையில் ஏழுமலையானின் பக்தர்களுக்கு சேவை செய்வதையே தனது முழுநேரப் பணியாக மாற்றிக் கொண்டார். இந்த பக்தனின் சேவையில் ஆனந்தம் அடைந்த அந்த ஏழுமலையான், தினமும் ஹத்திராமின் ஆசிரமத்துக்கே வந்து அவருடன் பகடை ஆடியதாக மடத்தின் ஸ்தல புராணம் சொல்கிறது. இன்றைக்கும் ஏழுமலையான் இந்த மடத்துக்கு வந்து ஹத்திராம் ஜி-யுடன் பகடை ஆடிச் செல்வதாக ஹத்திராமின் பக்தர்கள் தீர்க்கமாய் நம்புகிறார்கள்.
ஏழுமலையான் இப்படி ஹத்திராம் மடத்துக்கு வந்து போவதாக பரவிய செய்தி அப்போதைய சந்திரகிரி அரசர் கிரிதர ராயரின் காதுகளையும் எட்டியது. அவர் இதை உடனடியாக நம்பவில்லை. “யாரோ ஒரு சன்யாசி, கடவுள் தம்முடன் தினமும் பகடை ஆடுவதாக வீண் புரளியை ஏற்படுத்தி உள்ளான்” என ஆவேசம் காட்டிய அரசர், ஹத்திராம் ஜியை கைது செய்து இருட்டுச் சிறையில் அடைத்தார்.

ஹத்திராம் ஜி மடம்

யானை வடிவில் வந்து...

இருட்டுச் சிறையில் அடைத்ததோடு விடாமல் அந்தச் சிறை முழுவதும் கரும்பைக் கொண்டு நிரப்பினாராம்.“நாளை விடிவதற்குள் இந்தக் கரும்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தின்று முடி; உன்னோடு ஏழுமலையான் பகடை ஆடுவதை நான் நம்புகிறேன். அப்படிச் செய்யாவிட்டால், கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றிய குற்றத்துக்காக நீ கடுமையாகத் தண்டிக்கப்படுவாய்” என உத்தரவிட்டார் அரசர்.

தனது பக்தனை அப்படியொரு இக்கட்டில் சிக்க விடுவாரா அந்த ஏழுமலையான்..? யானையாக உருவெடுத்து, ஹத்திராம் அடைக்கப்பட்டிருந்த சிறைக்குள் சென்று இருட்டறையில் இருந்த கரும்புகள் அனைத்தையும் துவம்சம் செய்து முடித்தாராம் பெருமாள். பொழுது விடிந்ததும் சிறைக்கு வந்த அரசர், கரும்பு முழுவதும் காணாமல் போயிருந்ததைக் கண்டு வியந்து போனார். நிச்சயம் இது ஏழுமலையானின் மகிமைதான் என்பதை உணர்ந்த அரசர், உடனடியாக ஹத்திராமை விடுதலை செய்தாராம். இதைத் தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட திருப்பதியில் உள்ள 18 கோயில்களை பராமரிக்கும் பொறுப்பு ஹத்திராம் ஜி-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹத்திராம் ஜி மடம்

வெள்ளித் தட்டில் பழங்கள்

தற்போது மஹந்த் அர்ஜுன் தாஸ் என்ற மடாதிபதியின் கட்டுப்பாட்டில் ஹத்திராம் ஜி மடம் உள்ளது. இவரது தலைமையில், நாள் தோறும் ஏழுமலையானின் சுப்ரபாத சேவைக்கு மடத்தின் சார்பில் மூலவருக்கு பால் அனுப்பப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமைகளில்
மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்போது ஹத்திராம் ஜி சார்பில் ஹாரத்தி கொடுக்கப்படுகிறது. ஹத்திராம் ஜி-யை யானை வடிவெடுத்துக் காத்த பெருமாளை இன்றும் போற்றுகிறது ஹத்திராம் ஜி மடம். இதற்காக பிரம்மோற்சவ நாட்களில் கஜ (யானை) வாகனத்தின் போது, தென் கிழக்கு மாட வீதியில் ஹத்திராம் மடாதிபதி தலைமையில் வெள்ளித் தட்டில் பழங்கள் வைத்து ஹாரத்தியும் வழங்கப்படுகிறது. மேலும், பாரி வேட்டை உற்சவத்தின்போது, ஹத்திராம் மடம் சார்பில் உற்சவரான மலையப்பருக்கு பொங்கல் நைவேத்தியமாக சமர்பிக்கப்படுகிறது. இது தவிர, கோகுலாஷ்டமியின் போது, உற்சவரான  கிருஷ்ணர் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வகையில் ஹத்திராம் ஜி மடத்திலிருந்து நல்லெண்ணெய் அனுப்பப்படுகிறது. திருமலையில் உள்ள ஜபாலி ஹனுமன் கோயில் ஹத்திராம் ஜி மடத்தின் மூலம்தான் இப்போதும் பராமரிக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு ஆண்டு தோறும் ஹனுமன் ஜெயந்தியன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

90 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலைப் பராமரித்த ஹத்திராம் மடம்

ஹத்திராம் மடத்தின் சேவை குறித்து நம்மிடம் பேசிய மடாதிபதி மஹந்த் அர்ஜுன் தாஸ், “1837-ல், ஆங்கிலேய அரசு, கோயில்களையும் மசூதிகளையும் அந்தந்த மதத்தவரே பராமரித்துக் கொள்ளலாம் என ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி, 1843-ம் ஆண்டிலிருந்து, ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட திருப்பதியில் உள்ள 18 கோயில்களையும் ஹத்திராம் ஜி மடத்தினரே பாராமரிக்கும்படி ஆங்கிலேய அரசு எழுத்துபூர்வமாகத் தெரிவித்தது. அதன்பெயரில், திருப்பதி ஏழுமலையான் கோயில், கோவிந்தராஜ பெருமாள், பத்மாவதி தாயார், கபில தீர்த்தம், வேதநாராயண சுவாமி, கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட 18 கோயில்களை ஹத்திராம் மடத்தினர் பராமரித்து வந்தனர்.

சுதந்திரத்துக்கு முன்பு 1933-ல், ‘மதராஸ் இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின்’ அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒரு அறக்கட்டளையின் கீழ் இயங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1933-ல் தொடங்கப்பட்டது. அப்போது, எங்களது பராமரிப்பில் இருந்த ஏழுமலையான் கோயில் உட்பட 18 கோயில்களும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மஹந்துகள், ஏழுமலையானை தரிசிக்க எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை அனுபவிக்கலாமே தவிர வேறெதுக்கும் பயன்படுத்த முடியாது என்பது ஆங்கிலேயர் காலத்து உத்தரவு. அந்த உத்தரவுப்படியே கோயில் சொத்துகள் அனைத்தையும் தேவஸ்தானத்திடம் நாங்கள் ஒப்படைத்தோம். என்றாலும் இன்றளவும் ஹத்திராம் மடத்தின் சார்பில் நாங்கள் ஏழுமலையானுக்குத் தொடர்ந்து சேவைகளைச் செய்துவருகிறோம்” என்றார்.
கோ சேவை... சாது சேவை...

தினமும் ஹத்திராம் ஜி மடத்தின் சார்பில் திருமலையில் கோ சேவை மற்றும் சாது சேவைகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, வட இந்தியாவில் இருந்து திருமலைக்கு வரும் சாதுக்கள் அனைவருக்கும், இந்த ஹத்திராம் ஜி மடம் மூலமாக இலவச உணவு, தங்கும் இருப்பிடம் வழங்கப்படுகிறது. திருப்பதியில் அவிலாலா அருகே 30 ஏக்கரில் கோசாலை அமைத்து அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களைப் பாதுகாத்து வருகிறது ஹத்திராம் ஜி மடம். இந்த மடத்துக்குத் தமிழகத்தில் சென்னை ராயப்பேட்டை, விருத்தாசலம், தஞ்சாவூர் போன்ற இடங்களிலும், பெங்களூரு, மும்பை, டில்லி, நாசிக் போன்ற நகரங்களிலும் சொத்துகள் உள்ளன. இங்கெல்லாம் மடத்தின் சார்பில் சமயச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

(முகங்கள் வரும்...)

x