ஒருங்கிணைந்த தஞ்சை என்பது இன்றைய சென்னைக்கும் முன்பே ஒரு காஸ்மாபாலிட்டன் பிரதேசம். அதில் குறுக்கும் நெடுக்குமாக பயணிப்பதென்பது இன்றைய காஸ்மோபாலிட்டன் உலகத்துக்கு நாம் எப்படி வந்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். அப்படித்தான் ஆரம்பித்தது இந்தப் பயணம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தஞ்சையை எந்தப் பருவத்தில் சுற்றிவந்தாலும் பசுமையையும் செழுமையையும் காணலாம் என்பார்கள்.
கோடைக்காலத்தில்கூட அவ்வளவாகப் பசுமை இல்லை என்றாலும் மக்கள் சோர்ந்துபோய்விட மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை கோடை என்பதும் கொண்டாட்டக் காலமே! வருகிற விவசாயப் பருவத்துக்குத் தயார் செய்துகொள்வதற்கும் அதுவரை உழைத்ததற்கு ஈடுகட்டிக்கொள்வதற்கும் ஓய்வு, பொழுதுபோக்கு போன்றவற்றில் ஈடுபடுவதற்குமான காலம். குழந்தைகள் முதல் குடுகுடு கிழம் வரையில் எல்லோரிடமும் ஒரு சுறுசுறுப்பு, துறுதுறுப்பு. “அது தஞ்சையின் ரத்தநாளம்” என்று கூட அங்குள்ளவர்கள் பெருமையடித்துக்கொள்வார்கள்.
இன்று விவசாயப் பருவத்தில்கூட வயல்களில் பசுமை தெரிந்தாலும் மக்கள் மனநிலையில் பசுமை இல்லை. ஒரு பாலைவனப் பார்வை எல்லோரிடமும் தெரிகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருமே சொல்ல முடியாத துயரமொன்றின் சாட்சிகளாகத் திரிகிறார்கள். எப்படி மகிழ்ச்சி நிலவும்? தஞ்சையின் ரத்த ஓட்டமே தண்ணீர் எனும்போது தஞ்சையின் பெருமிதமே தண்ணீர் வளம் எனும்போது அதை இழந்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்குள் இருக்காதா என்ன?
எங்கள் வீடு ஆற்றங்கரை ஓரத்தில்தான் இருந்தது. பாமணி ஆறு. நீடாமங்கலத்துக்கு மேற்கே மூணாற்றுத் தலைப்பில் வெண்ணாற்றிலிருந்து பாமணி ஆறும் கோரையாறும் பிரிகின்றன. சில இடங்களில் பாமணி ஆறு குறுகலாகவும் சில இடங்களில் அகன்றும் ஓடும். எங்கள் வீட்டின் முன்னே தாராள மனசு பாமணிக்கு. நீர் ஓடும் பரப்புக்கும் கரைக்கும் இடையே ஒரு பெருஞ்சரிவு இருக்கும். அதற்கு ஆற்றுச் சருக்கை என்று பெயர். காட்டாமணக்கு, சீமைக் கருவேலமரமெல்லாம் அந்தச் சறுக்கையில் அடர்ந்திருக்கும். கழிப்பறையெல்லாம் வராத காலத்தில் அங்குதான் பெண்கள் ஒதுங்குவார்கள். ஆண்கள் சற்று தூரம் நடந்துசென்று ‘சட்ரஸ்’ என்றழைக்கப்படும் ஷட்டர்ஸைக் கடந்து ஆற்றுக்கு அக்கரைக்குத்தான் செல்ல வேண்டும். ஆற்றில் நீர் ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆற்றை மையம்கொண்ட வாழ்க்கை எங்களுக்கு.
வெண்ணாறு, வெட்டாறு, பாமணி என்றெல்லாம் காவிரியின் கிளை ஆறுகளுக்கும் கிளை ஆறுகளின் கிளைகளுக்கும் ஏராளமான பெயர்கள் வழங்கினாலும், எல்லாவற்றையும் வெளியில் உள்ளவர்கள் காவிரி என்று பொதுப்படையாகச் சொல்வதுண்டு. ஆனால், உள்ளூர் மக்கள் ஒருபோதும் காவிரி என்ற பெயரில் பாமணி ஆற்றை அழைத்ததில்லை. அவர்களுக்குப் பாமணி ஆறுதான். தனக்கு அருகில் உள்ளதுதான் மக்களுக்கு எப்போதும் யதார்த்தம். காவிரியின் ஒற்றைத்தன்மைக்கு இந்தப் பன்மையும் அழகு சேர்க்கும் விஷயம்தான்.
மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு ஆறு அப்படியே வறண்டு கிடக்கும் என்று சொல்ல முடியாது. மதகு இருக்கும் இடத்தை அடுத்துத் தண்ணீர் விழுந்து விழுந்து ஆழமானதால் அங்கு மட்டும் கோடையிலும் தண்ணீர் கிடக்கும். குளிப்பதிலிருந்து இன்ன பிற கடமைகளுக்கும் அந்தத் தண்ணீர்தான். இடையே பள்ளமான இடங்களிலும் உளுவை, கெளுத்தி முண்டிக்கொண்டு கிடக்கும்படி பாசித் தண்ணீர் கிடக்கும். மண்ணைத் தோண்டினால் பாமணி ஆறு விட்டுச்சென்ற ஈரம் ஊற்றுத் தண்ணீராய் வெளிப்படும். இப்படி, ஏதோ ஒரு வடிவத்தில் தண்ணீர் ஓடாத போதும் பாமணி ஆறு தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்.
இடையிடையே சிறுசிறு கோரைப் புதர்களூடே மணற்பரப்பு. கோடையில் எல்லாச் சிறுவர்களையும் ‘பேக்பைப்பர் மந்திரவாதி’ போலத் தன்னை நோக்கி ஈர்த்துக்கொள்ளும். ‘கிச்சுக்கிச்சுத் தாம்பாளம் கிய்யாங் கிய்யான் தாம்பாளம்’ விளையாட அவ்வளவு பெரும் மணற்பரப்பே காத்துக்கிடப்பதுபோலத் தெரியும். தண்ணீர் ஓடும்போது ஆற்றின் கரைகளை மொய்க்கும் சிறுவர் கூட்டம் தண்ணீர் இல்லாதபோது ஆற்றின் உள்ளேயே ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருக்கும். பட்டம் விடுவது, கபடி விளையாடுவது, ஓடிப்பிடித்து விளையாடுவது, கிளிஞ்சல்களைப் பொறுக்கி மணலில் தாஜ்மகால் பதிப்பது, மணல்வீடு கட்டுவது, ‘டிக் டிக் யாரது’ விளையாடுவது என்று விளையாட்டுகளின் பட்டியலுக்கு முடிவே இல்லாமல் நீளும். ஆறும் அதன்மணற்பரப்பும் கோரைப் புதர்களும் புதுப் புது விளையாட்டுகளைக் கண்டுபிடிக்கத் தூண்டும். ‘மலர்ச்சியும் புனைவும் புத்தாக்கமும் கொண்ட பொழுதுபோக்கு குழந்தைப் பருவத்துக்கு அவசியமானது’ என்று சிறார் உளவியலாளர்கள் சொல்வார்கள். அதற்கேற்ற குழந்தைப் பருவத்தை ஆறு எங்களுக்குத் தந்தது. விளையாட்டுகளின்போது கீழே விழுபவர்களை ஏந்திக்கொண்டது. சிறுவர்களுக்கிடையே சினேகமும் சிறுபகையுமான உறவை வளர்த்தது.
தண்ணீர் வந்தால் போதும் அதற்கேற்ப விளையாட்டுகளும் மன அமைப்பும் மாறிவிடும். புதுத் தண்ணீர் எல்லா அழுக்குகளையும் செத்தைகளையும் அடித்துக்
கொண்டு முன்னேறிவரும்போது, ஜல்லிக்கட்டு மாட்டைவாடிவாசலுக்கு நேரெதிராக நின்று மறிப்பது போல் பெரியவர்கள் சிறியவர்கள் மறித்து அதனோடு மல்லுக்
கட்டுவார்கள். “புதுத் தண்ணியில காலை நனைச்சுக்கிட்டு மட்டும் வா. குளிச்சிடாத” என்று பெரியவர்கள் அதட்டுவார்கள். தண்ணீர் விரட்ட ஓடிச்சென்று, அதிக நீர் வருவதற்குள் மணற்கரையின் ஏதாவது ஒரு இடத்தில் ஏறிவிடுவோம். அப்புறம் என்ன, இரண்டு நாட்களுக்குப் பிறகு, குளியல் அட்டகாசம் தொடங்கிவிடும். தூண்டில் போடுவது, தண்ணீர்ப் பாம்பை அடிப்பது என்று தண்ணீர் கொடுக்கும் பொழுதுபோக்கும் ஏராளம். தண்ணீர்ப் பாம்பையெல்லாம் சிறு வயதில் எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கிறோம் என்று இன்று வருத்தமாக இருக்கிறது.
தீபாவளி சமயம் என்றால் ‘இதோ வெள்ளம் வரப்போவுது’ என்ற கணக்கில் நீர் ஓடிக்கொண்டிருக்கும். எங்கள் கரையை விட எதிர் கரை பள்ளமானது என்பதால் எப்படியும் எங்கள் கரையை வெட்டிவிட அங்குள்ளவர்கள் துடித்துக்கொண்டிருப்பார்கள். ஆகவே, சட்ரஸில் ஒவ்வொரு நாள் இரவும் கரையைக் காவல் காப்போம். அங்குள்ளவர்கள் பதுங்கிப் பதுங்கி வந்தும் எங்களிடம் அகப்பட்டுக்கொள்வார்கள். “எங்க கரையில ஒங்களுக்கு இந்த நேரத்துல என்ன வேலை?” என்று கேட்டால் “ஒங்களுக்கு உதவிசெய்யலாம்”னுதான் என்று தலையைச் சொறிந்துகொள்வார்கள். “ஓகோ எங்கள்ட்ட மம்பட்டி இல்லன்னு இரக்கப்பட்டுக் கொடுத்துட்டுப் போக வந்தீங்களா, மாப்பிள்ளைகளா?” என்று அவர்கள் மறைத்து எடுத்துவந்த மண்வெட்டிகளைப் பிடுங்கிக்கொண்டு துரத்திவிடுவோம்.
இப்போது அப்படியெல்லாம் இல்லை. ஊரை விட்டு வந்த இந்த 17 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை வெள்ளம் வந்திருக்கிறது. காவல் காக்க யாரும் வேண்டியிராமல் பாரபட்சம் இல்லாமல் இரண்டு பக்கமும் நிரப்பிவிட்டுச்சென்றிருக்கிறது. அவ்வளவுதான். மற்றபடி வழக்கமானநீர்க்காலங்களிலும் மணலோடி, கோரையோடித்தான் பாமணி ஆறு கடந்த பல ஆண்டுகளாகக் கிடக்கிறது. ஆற்றில் தண்ணீர் இருந்தாலும் இல்லையென்றாலும் தண்ணீர் ஓடச் சாத்தியம் என்றாவது முன்பு இருந்தது. இப்போது அது கேள்விக்குறியாகிவிட்டது.
‘தண்ணீரைக் கொண்டுவர வக்கில்லாத உன்னுடன் எங்களுக்கு என்ன உறவு?’ என்பதுபோல் அங்குள்ள சிறுவர்கள் ஆற்றில் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். ஆறு இப்போது அவர்களுக்காக டி.வி., கைபேசி உருவத்தில் அவதாரம் எடுத்திருக்கிறது. அவ்வப்போது ஆற்றின் மணற்பரப்பில் தென்படும் சிறுவர்கள் இன்னும் ஆற்றுக்கும் நமக்கும் நம்பிக்கை தருகிறார்கள்.
இப்படிப்பட்ட தஞ்சையை அதன் ஆறுகளில் தண்ணீர் ஓடும் காலத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்?! கூடவே, தஞ்சையின் முற்காலத்தின் பிரதிநிதியாக, அதைப் பற்றி நிறைய தெரிந்தவராக ஒருவர் நம்மோடு பயணம் வந்தால் எப்படி இருக்கும்! காவிரியின் மைந்தர்களை நீரோடும் காலத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், எதிர்கால நம்பிக்கை குறித்தெல்லாம் கேட்டறிந்தால் எப்படி இருக்கும்!
(சுற்றுவோம்...)
- ஆசை