பதறும் பதினாறு 10: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


பெண்ணுக்குப் பெண் மீது ஏற்படும் ஈர்ப்பு பொதுவாகத் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இயல்புக்கும் இயற்கைக்கும் மாறானது என்று பரப்பப்படுகிறது. பதின் பருவத்தில் இரு பெண்களுக்கோ நான்கு தோழிகளுக்கோ இருக்கும் நட்பு தாண்டிய நெருக்கத்தைத் தன்பால் ஈர்ப்பு எனப் புரிந்துகொள்வதும் இங்கே பலநேரங்களில் நடக்கிறது. நெருக்கமான நட்பில் இருக்கும் எல்லாப் பெண்களுமே அந்த வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.

திரைப்படக் கதாநாயகர்கள் மீதும் நமக்குப் பிடித்த துறையில் சாதிப்பவர்கள் மீதும் தோன்றும் அபிமானத்தைப் போலவே தங்கள் பள்ளியில் சிறந்து விளங்கும் பெண் மீது இன்னொரு பெண்ணுக்கு ஈர்ப்பு ஏற்படலாம். பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் இது இயல்பு. பெரும்பாலும் சீனியர் மாணவிகள் மீது ஜூனியர் மாணவிகளுக்கு இப்படியான ஈர்ப்பு தோன்றும். எப்போதும் அவர்களைப் பற்றி வியந்து பேசிக்கொண்டிருப்பது, அவர்களது வெற்றியைத் தன் வெற்றியாக நினைத்துக் கொண்டாடுவது போன்றவையெல்லாம் இந்த ஈர்ப்பின் அங்கமே. இப்படி ஈர்க்கப்படுகிறவர்கள் சம வயது கொண்டவர்களாகவோ, வகுப்புத் தோழிகளாகவோ இருந்தால் நெருக்கம் கூடும்.

பால் ஈர்ப்பு இல்லாத இந்த நெருக்கத்தை ‘Womance’ என்கிறார்கள். Woman, Romance ஆகிய இரண்டு வார்த்தைகளையும் இணைத்து இந்தப் புது சொல்லை உருவாக்கியிருக்கிறார்கள். அமெரிக்காவில் வெளியான ‘பிக் பிரதர்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியர் டேவ் கார்னி என்பவர் Brother, Romance ஆகிய இரண்டு சொற்களையும் இணைத்து 1990-களில் Bromance என்ற சொல்லை உருவாக்கினார். அதை அடியொற்றியே Womance என்ற சொல் உருவாக்கப்பட்டது. ஆண்களுக்குள் இருக்கும் நட்பு தாண்டிய நெருக்கத்தைக் குறிப்பிடவே அவர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினார். இந்தச் சொற்கள் தோன்றியதன் பின்னணியைப் புரிந்துகொண்டாலே பெண்ணுக்குப் பெண் மீது ஏற்படும் ஈர்ப்பின் எல்லையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

பிணைப்பு இயல்பானது

ஆண்களுக்கும் இப்படியான நெருக்கம் உண்டு என்றாலும் பெண்கள் அளவுக்கு இருக்காது என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. “உடல் சார்ந்த நெருக்கம் இல்லாமல் காதலுக்கும் காமத்துக்கும் இடைப்பட்ட நெருக்கம் ஆண், பெண் இருவருக்கும் சாத்தியமே. ஆண்கள் வெறும் நட்புடன் மட்டும் கடந்துவிடுகிற இந்த உணர்வைப் பெண்கள் நோய் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்கிறார் அவர்.
மன அழுத்தத்தை ஆணும் பெண்ணும் எப்படிக் கையாள்கிறார்கள் என ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. மன அழுத்தம் அதிகரிக்கிறபோது ஆண்கள் அதிகக் கோபத்துக்கு ஆளாகி வெடிப்பார்கள் அல்லது அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைப்பார்கள். ஆனால், பெண்கள் அந்தப் பிரச்சினையைக் கவனிப்பார்கள், நட்புடன் அணுக முயல்வார்கள். காரணம், ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன். இதைப் பிணைப்பு ஹார்மோன் என்பார்கள். தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பில் தொடங்கி அனைத்து உறவுகளுக்குமான பிணைப்புக்கும் இந்த ஹார்மோனே காரணம்.

மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இந்த ஹார்மோனுக்கு உண்டு. “இது ஆணுக்குக் குறைவாகவும் பெண்ணுக்கு அதிகமாகவும் சுரக்கும். அதனால்தான் தன் தோழி சோகமாக இருப்பதைப் பார்க்கும் பெண், உடனே ஆறுதலாக அவளது தலையை வருடுவாள். கையைப் பிடித்துக்கொள்வாள். அப்போது அவர்களுக்குள் இயல்பாகவே நெருக்கம் கூடும்” என்கிறார் மோகன வெங்கடாசலபதி. இறப்பு வீடுகளில் பெண்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுவதையும் இதன் தொடர்ச்சியாகவே நாம் புரிந்துகொள்ளலாம்.

பதின் பருவத்தில் தோன்றும் இந்த ஈர்ப்பு இப்படியே நிலைத்துவிடும் என்றே பலரும் நம்புகிறார்கள். இது பருவ வயதின் உந்துதலால் ஏற்படுகிற நெருக்கமே தவிர விபரீதமாகச் சிந்திக்க எதுவுமே இல்லை. ஹார்மோன்களின் மாற்றத்தால் பருவ வயதின் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு உடல் குறித்த கேள்விகள் எழும். அதுவரை அணைப்பு, முத்தம் போன்றவை ஒரு வகையான உணர்வை அவர்களுக்குத் தந்திருக்கும். ஆனால், பருவ வயதிலோ அது அவர்களுக்கு இதமான, கதகதப்பான உணர்வைத் தரும். அதனால்தான் தோழிகளுக்குள் தோள் மீது கைபோட்டுக்கொள்ளுதல், நெருங்கி உட்கார்வது, அணைப்பது, முத்தமிட்டுக்கொள்வது போன்றவை மிக இயல்பானவையாக இருக்கின்றன. குழந்தைகள் இப்படிச் செய்வதை இயல்போடு ஏற்றுக்கொள்கிற நாம், பருவ வயதுக் குழந்தைகள் செய்வதை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். உண்மையில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

பருவ வயதில் நெருக்கமாகப் பழகும் தோழிகள், தன்பால் ஈர்ப்பாளர்களாக மாறுவது மிகக் குறைவான சதவீதமே. அதனால் குழந்தைகளின் நெருக்கம், அவர்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்காத வகையில் இருக்கிறபோது அதைப் பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை. அதே நேரம், உணர்வுபூர்வமாக ஒருவர் மற்றவருக்கு அடிமையாவது போலத் தெரிந்தால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நம் கடமை. உடனே நம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகள் அவர்களுடைய தோழிகளிடம் பழகுவதைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கக் கூடாது. காரணம், எல்லாக் குழந்தைகளும் இப்படியான நெருக்கத்துடன் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

விட்டுப் பிடிப்பது நல்லது

பருவ வயதுப் பெண் குழந்தைகளின் மற்ற செயல்கள் குறித்துக் கவலைப்படுகிற பெரும்பாலான பெற்றோர், அவர்கள் எதிர்த்துப் பேசுவதைப் பெரும் குற்றமாகச் சொல்வார்கள். உண்மையில் குழந்தைகள், பெற்றோரை எதிர்த்துப் பேசுவதில்லை. அவர்கள் தங்களை ஒரு ஆளுமையாக உணரத் தொடங்குவதன் வெளிப்பாடாகவே அனைத்து விஷயங்களிலும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். அதற்குப் பெற்றோர் மதிப்பளிக்கவில்லை என்கிறபோது அதை எதிர்த்துக் கேள்வி கேட்பார்கள். அதைத்தான் நாம் குற்றம் சொல்கிறோம்.
நாம் வளர்ந்துவிட்டோமா அல்லது இன்னும் குழந்தையா, பெற்றோரின் பேச்சைக் கேட்க வேண்டுமா அல்லது நாமாகவே முடிவெடுக்க வேண்டுமா என்று பல குழப்பங்கள் அவர்களின் மனதுக்குள் அலையடிக்கும். பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும் சில பெற்றோர் அவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்குவார்கள். இவையெல்லாம்கூட அவர்களின் துடுக்குத்தனமான நடவடிக்கைகளுக்கும் பேச்சுக்கும் காரணம். கடந்த ஆண்டு வெளியான ‘லேடி பேர்ட்’ என்னும் படம், பதின் பருவப் பெண்ணுக்கும் அவளுடைய அம்மாவுக்குமான உறவையும் மோதலையும் சொல்கிறது. அந்தப் படத்தில் வரும் பெண்ணைப் போலத்தான் பெரும்பாலான பருவ வயதுப் பெண்களின் செயல்பாடும் இருக்கும்.

தனக்குப் பிடிக்காத பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்ததற்காக அம்மாவுடன் சண்டை போடுவாள். பெற்றோர் வைத்த பெயரைப் புறக்கணித்துத் தன்னை ‘லேடி பேர்ட்’ என்று அழைத்துக்கொள்வாள். தோழிகளையும் அப்படியே அழைக்கச் சொல்வாள். வீட்டின் வறுமை நிலை குறித்து அம்மா சொன்னால் எரிச்சலடைவாள். அவளது செயல்களால் எரிச்சலடையும் அவளுடைய அம்மா, அதுவரை அவளுக்குச் செலவு செய்த பணத்தைப் பற்றிக் குறிப்பிடுவார். உடனே ஆத்திரத்தில் வெடிக்கும் மகள், “இதுவரை எனக்காகச் செலவு செய்த தொகையைச் சொல்லுங்கள். நான் வேலைக்குப் போனதும் அந்தக் கடனை அடைத்துவிடுகிறேன்” என்பாள். அதற்கு அவள் அம்மா, “நிச்சயம் உனக்கு அப்படியொரு வேலை கிடைக்கும் எனத் தோன்றவில்லை” என்பார்.

படம் முழுவதும் அம்மாவும் பெண்ணும் இப்படித்தான் கீரியும் பாம்புமாகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் அவரவர் பக்கம் நியாயம் இருப்பதாகவே தோன்றும். பருவ வயதின் வேகத்தில் மகள் செய்கிற அனைத்தையும் பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் வீட்டின் நிலையை அவளுக்கு எடுத்துச் சொல்லவும் முடியாமல் அம்மா வேதனைப்படுவார். ஆனால், மகளுக்கோ நமக்கு இந்த வீட்டில் உரிய மரியாதை இல்லை, அம்மாவுக்குத் தன் மீது அன்பே இல்லை எனத் தோன்றும். பெரும்பாலான வீடுகளில் பருவ வயதுப் பெண்களைக் கையாள முடியாமல் பெற்றோர் இப்படித்தான் திணறிக்கொண்டிருக்கின்றனர்.
நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடாமல், அவர்கள் பக்கம் இருந்தும் சிலவற்றைப் புரிந்துகொள்ள முயலலாம். தோள்வரை வளர்ந்த குழந்தைகள் எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். ஆனால், அதை நாம் குழந்தைகளிடம் வெளிப்படுத்தினால் அது அவர்களை இன்னும் மூர்க்கமாக்குமே தவிர பிரச்சினையைத் தீர்க்காது. அந்தப் படத்தில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும் மரியாதையும் இருந்தாலும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். இறுதியில் படிப்புக்காக மகள் வெளியூருக்குச் செல்லும்போது அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதி அவளுடைய பையில் வைத்து அனுப்புவார் அம்மா. விடுதியில் அம்மாவின் கடிதத்தைப் படிக்கும் மகள், அம்மாவின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்வாள். இப்படியான புரிதல் ஒரே நாளில் சாத்தியமில்லை. அவர்கள் எதிர்த்துப் பேசும்போது நாமும் உடனுக்குடன் வினையாற்றாமல் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். அதுதான் இருவருக்குமே நல்லது.

(நிஜம் அறிவோம்…)

x