ஸ்ரீவி வத்தக்குழம்பும், பருப்பு நெய்யும்!
“ஸ்ரீவில்லிபுத்தூர்னு சொன்னதும் ஆண்டாளும், பால்கோவாவும் மட்டும்தான் ஞாபகத்துக்கு வருதுன்னா, அந்த ஊர்ல ஒருவாட்டி கூட கை நனைக்காத ஆளு நீங்கன்னு அடிச்சிச் சொல்லுவேன். வில்லிபுத்தூரில் எந்த இடத்துல நின்னு, யார்கிட்ட கேட்டாலும் நல்ல சைவ ஹோட்டலா, கோயில் பக்கத்துல இருக்க கதிரவன் ஹோட்டலுக்குப் போங்கன்னு சொல்லிருவாங்க” என்கிறார் ‘அய்யனார் வீதி’ படத்தின் இயக்குநரும், ‘சிட்டிசன்’, ‘பாரதி’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்தவருமான ‘ஜிப்ஸி’ என்.ராஜ்குமார்.
1912-ல் சண்முகம் பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்ட கதிரவன் உணவகத்துக்கு இப்போது வயது 106. கூரைக்கடையாக இருந்து இப்போது காரைக்கட்டிடமாக மாறிவிட்டாலும்கூட, சுவையும், பாரம்பரியமும் மாறவில்லை. அடுத்தடுத்த தலைமுறை வந்துவிட்டபோதும் புதிய கிளைகள் தொடங்கி பிரிந்து செல்லாமல், காலை டிபன் ஒருவருக்கு, மதிய உணவு இன்னொருவருக்கு, இரவு வேறொருவருக்கு என்றுதான் பங்கு பிரித்து ஒற்றுமையாக உணவகத்தை நடத்துகிறார்கள் குடும்பத்தினர். வில்லிபுத்தூர் வருகிற சுற்றுலாப்பயணிகள் எல்லாம் மொய்க்கிற இந்த உணவகத்தின் தனி அடையாளமே எளிமையும், சுத்தமும்தான். வெறும் 800 சதுரடியில்தான் உணவுக்கூடம். அங்கேயும் ஆடம்பர நாற்காலிகள் எதுவும் கிடையாது. கிராமத்து பாணியில் சிமென்ட் டேபிள் மேஜைகள்தான். ஒவ்வொரு இருக்கையின் பின்னாலும் ஒரு எண் எழுதப்பட்டிருக்கும். “ஏய், 7-ம் நம்பர் அண்ணாச்சிக்கு சாம்பார் விடு. 12-ம் நம்பருக்குப் பாயசம்” என்று சொல்லுவதே தனி அழகு!
“ராஜபாளையத்தில் இருந்து சோறு சாப்பிடுறதுக்காகவே வாரத்துக்கு ஒரு தடவையாவது வில்லிபுத்தூருக்கு பஸ் ஏறி வர்றவன் நான். சென்னைவாசியான பிறகும், ஊர்ப்பக்கம் வந்தால் கதிரவன் ஹோட்டலுக்குப் போகாமல் என் பயணம் நிறைவடையாது. அரை கிலோ சோறு, 100 கிராம் பருப்பு என்று எடை போட்டுத்தான் பறிமாறுவார்கள் என்றாலும், அந்த ருசியை அடிச்சிக்கவே முடியாது. வெறும் சாம்பார், ரசத்துக்காக அல்ல, இந்தக் கடையின் வத்தக்குழப்புக்காகத்தான் நாம வர்றது. எல்லாரும் பருப்பு நெய், சாம்பார், ரசம், வத்தக் குழம்பு, மோர்னு வரிசையாக வாங்கிச் சாப்பிடுவார்கள். நான் அப்படியல்ல. முதல்ல ஊத்துற பருப்பு நெய்க்கே தொட்டுக்க கொஞ்சம் வத்தக்குழம்பு கேட்பேன். அடுத்து சாம்பாருக்குப் பதில் மறுபடியும் வத்தக்குழம்பு, ரசத்துக்குப் பதிலாகவும் வத்தக்குழம்பு, மோருக்குத் தொட்டுக்கிடவும் வத்தக்குழம்பு என்று போவேன். ‘சார், கையாவது தண்ணியில கழுவுவீங்களா? இல்ல அதுக்கும் வத்தக்குழம்பு வேணுமா?’ன்னு கேட்பாங்க. ஆனாலும், விட மாட்டோம்ல” என்கிறார் ராஜ்குமார்.
இவர் மட்டுமல்ல, மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், இயக்குநர்கள் சமுத்திரகனி, சசிகுமார், சுஹாசினி மணிரத்னம், டெல்லி கணேஷ் போன்றோரும் இந்தக் கடைக்கு வந்திருக்கிறார்கள். இந்தத் தனித்த ருசிக்குக் காரணம் என்ன என்று 67 வயதாகும் இன்றைய உரிமையாளரான கே.பாலசூரியனிடம் கேட்டோம். “நான் எதையும் செய்யவில்லை. தாத்தா சண்முகம் பிள்ளை காலத்தில் எப்படிச் சமைத்தார்களோ அந்தப் பக்குவத்தை பாட்டி அம்மாவிடம் சொல்லிச் சென்றது. அதை இப்போது என் குடும்பத்தினர் தொடர்கிறார்கள். சில பேர் கேட்பார்கள், ‘புதிய சுவைகளை அறிமுகப்படுத்தலாமே?’ என்று. நம்மைத் தேடி வருகிறவர்கள் புதிய சுவைக்காக அல்ல, ஏற்கெனவே தங்கள் சுவை மொட்டுகளில் புகுந்து நினைவில் தங்கிவிட்ட அதே பழைய ருசிக்காகத்தான் வருகிறார்கள். அதை விடமுடியாது என்று சொல்லிவிடுவேன்” என்கிறார் அவர்.
அடுத்ததாக சமையல் குறிப்பு கேட்டோம். “வெளியூர்க்காரர்களில் நிறைய பேர் பக்குவம் கேட்டு விசாரிக்க, அவர்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ஒருவர் சொன்னார், ‘பேசாமல், நீங்களே இதற்கான மசாலாக்களையும் விற்றால் என்ன?’ என்று. அதன்படி இப்போது வத்தக்குழம்பு பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி எல்லாம் எங்கள் கைப்பக்குவத்திலேயே தயாரித்து விற்பதுடன், அடுத்த முறை அவர்களே அந்தப் பொடியைத் தயாரித்துக் கொள்வதற்காக சேர்மான விவரத்தையும் அச்சிட்டுக் கொடுக்கிறோம். அதேபோல கூட்டு, குழம்பு, பருப்பு போன்றவற்றையும் தனித்தனியாக பார்சல் வாங்கிக்கொள்ளலாம்” என்றார் பாலசூரியன்.
கதிரவன் வத்தக்குழம்பு: புளி 50 கிராம், உரித்த பூண்டு 50 கிராம், சின்ன வெங்காயம் 50 கிராம், வெல்லம் 40 கிராம், கதிரவன் வத்தக்குழம்பு பொடி 40 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம், சுண்டவத்தல் 10 எண்ணம், உப்பு தேவையான அளவு. (வத்தக்குழம்பு பொடி என்பது, மல்லி விதை, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அரைத்த பொடி)
50 கிராம் புளியை 40 மில்லி தண்ணீரில் நன்றாகக் கரைத்து, அதில் வத்தக்குழம்பு பொடியைக் கரைத்து, மஞ்சள்பொடி, உப்பு, வெல்லம் சேர்த்து கலக்கவும். பிறகு பூண்டு, வெங்காயம், சுண்டவத்தலை நல்லெண்ணெய்விட்டு வதக்கி, அதில் புளித்தண்ணியை விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்த பிறகு கடுகு, உளுந்தம்பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து ஊற்றினால், சுவையான வத்தக்குழம்பு தயார்.
நெய் பருப்பு: துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து, பெருங் காயத்தூள், உப்பு, நெய் கலந்தால் நெய் பருப்பு தயாராகிவிடும். மதிய உணவை இதைச் சேர்த்துத் தொடங்கினால் ருசியே தனி.
சாப்பிட்டுவிட்டு வெளியே வருகையில், “எல்லாம் சரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் 25க்கும் அதிகமான கூட்டுறவு பால்கோவா கடை இருக்குதே? இதில் எது ஒரிஜினல்?” என்று கேட்டோம். ஆள விடுங்க சாமி என்று ஓடியேவிட்டார் கடை ஊழியர்.
-கே.கே.மகேஷ்