உறவுகளை உடைக்குமா இந்தத் தீர்ப்பு?


திருமண பந்தத்தை மீறிய பாலியல் தொடர்புகள் கிரிமினல் குற்றம் ஆகாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அதேவேளையில், விவாகரத்து உள்ளிட்ட விவகாரங்களுக்கு அதுபோன்ற உறவுகள் எப்படியெல்லாம் சிவில் குற்றமாகக் கருதப்படலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற காலங்காலமான தத்துவத்தை உடைப்பதற்கு இந்தத் தீர்ப்பு துணைபோய்விடாதா என்ற ஆதங்கக் குரல்களுக்கு மத்தியில், ’மனைவியை தனது ஏகபோக சொத்து போல அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கணவன்மார்களின் எஜமான புத்திக்கு இது ஒரு சவுக்கடி’ என்ற ரீதியில் ஆதரவு குரல்களும் ஒலிக்கின்றன.

மத ரீதியிலான பார்வைகளை எல்லாம் தாண்டி, இந்தியாவுக்கென்று ஒரு தனித்த பண்பாடு உண்டு. வள்ளுவர் காலம் தொட்டு, இல்லற வாழ்க்கை குறித்த தமிழ்நாட்டின் புனிதப் பார்வை எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடியது.  அதேசமயம், இந்த அவசர யுகத்தில் மாறிவரும் குடும்ப உறவுகளின் தன்மையால், சட்டத்தைப் பயன்படுத்தி ஆண் - பெண் இரு பாலரும்  ஒருவரை ஒருவர் பழிவாங்கிக்கொள்ளும் போக்கையும் பார்க்க முடிகிறது. இப்படி ஒரு காலகட்டத்தில், ‘சட்டங்களால் மட்டுமே கணவன் மனைவியை ஒரு கூட்டுக்குள் இணைத்து வைத்திருக்க முடியுமா?’ என்ற விவாதத்தையும் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியவில்லை.

சட்டமும் நீதியும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்... பரஸ்பர அன்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை, குடும்ப உறவுகள் மீதான அசைக்க முடியாத மரியாதை, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை எப்போதும் சீராக கடைப்பிடித்து வந்தாலே இதுபோன்ற தீர்ப்புகளுக்கு அவசியமில்லாமல் போய்விடும்.

x