மறக்கமுடியாத கேமரா மன்னன்!


தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இருவர் கூட்டணிகள் உண்டு. ஆனால், மூவர் கூட்டணி என்பது மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வக் கூட்டணி, தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கியது. ‘கேமராமன்னன்’ என்று அழைக்கப்பட்ட கே.ராம்நாத், ‘சந்திரலேகா’ படத்தின் கலை இயக்குநர் ஏ.கே.சேகர், பத்திரிகையாளரும் இயக்குநருமான கே.முத்துசுவாமி அய்யர். இவர்கள்தான் அந்த மூவர் கூட்டணி. அந்தக் காலத்திலேயே கேமராமற்றும் சினிமா தொழில் நுட்பங்கள் பற்றி கட்டுரைகளை வெளியிட்ட 'சவுண்ட் அண்ட் ஷேடோ' (Sound and Shadow) என்ற ஆங்கில சினிமா பத்திரிகையின் ஆசிரியர் முத்துசுவாமி அய்யர். தனது ஆக்கபூர்வமான விமர்சனங்களால் மற்றவர்களைக் கவனிக்க வைத்த இவர் பின்னாளில் முருகதாஸா என்ற பெயரில் இயக்குநராக மிளிர்ந்தவர். ஆக, இவர்கள் மூவருமே சாதனைத் தடம் பதித்தவர்கள்தான். இருப்பினும் ஒளிப்பதிவில் தனிப்பெரும் சாதனைகளைப் படைத்து, 40 மற்றும் 50-களில் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்தவர் கே.ராம்நாத்.

திறமையால் இணைந்த மூவர்!

அன்றைய மதராஸ் பட்டணத்தில் முக்கிய வணிகக் கேந்திரமாக இருந்த ஜார்ஜ் டவுன் பகுதியில், ஆச்சாரப்பன் தெருவில் பொம்மி ரெட்டியால் (தெலுங்கு சினிமாவின் முன்னோடி மற்றும் வாஹினி ஸ்டுடியோவின் ஸ்தாபகர் நாகிரெட்டியாரின் அண்ணன்) நடத்தப்பட்டுவந்த பி.என்.கே அச்சகத்தில் `சவுண்ட் அண்ட் ஷேடோ' பத்திரிகை அச்சாகிவந்தது. அதில் இடம்பெற்றுவந்த கேமரா உள்ளிட்ட சாதனங்களைப் பற்றிய கட்டுரைகளுக்கு ‘இன்ஜினீயரிங் டிராயிங்’ படித்த ஓவியர் ஒருவரை முத்துசுவாமி அய்யர் தேடினார். அப்போது கிடைத்தவர்தான் பத்திரிகைகளுக்கும் பாட்டுப் புத்தகங்களுக்கும் வியத்தகு டிசைன்களை வரைந்துகொடுத்துப் புகழ்பெற்ற ஓவியர் ஏ.கே.சேகர். இவரது திறமையைக் கண்ட முத்துசுவாமி அய்யர், ஓவியங்கள் வரையவும் லே-அவுட் செய்யவும் சேகரை அமர்த்திக்கொண்டார். பின்னர் பத்திரிகையைத் தானே முழுப்பொறுப்பில் நடத்தவேண்டிய சூழல் வந்தபோது, சேகரை பங்குதாரராகவும் சேர்த்துக்கொண்டார்.

இந்த இருவருடனும் ராம்நாத் வந்து இணைந்துகொண்டதும் திறமையின் அடிப்படையில்தான். நான்குமொழிப் படங்களின் தென்னிந்தியத் தயாரிப்புக் கேந்திரமாக விளங்கிய அன்றைய மதராஸில் கோடாக் ஃபிலிம் கம்பெனி தனது கிளையை நிறுவியிருந்தது. அதில் பயிற்சி உதவியாளராக வேலை செய்தவர்தான் ராம்நாத். 

x