“தமிழக பாஜக தலைவராக என்னை நியமித்தால் பாஜக ஓட்டு வங்கியை இன்னும் அதிகரித்துக் காட்டுவேன்” ஸ்ரீவில்லிப்புத்தூரில் எஸ்.வி.சேகர் அளித்த இந்தப் பேட்டி தமிழக பாஜக-வுக்குள் பல மட்டங்களிலும் சலசலப்பை உண்டாக்கி வருகிறது. இந்தப் பேட்டிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் எதிர் வினையாற்றியிருக்கும் நிலையில், காமதேனுக்கு பிரத்யேக பேட்டியளித்தார் எஸ்.வி.சேகர்.
பாஜக மாநிலத் தலைமையை ஏற்கத் தயார்னு தீடீரெனப் பேசியதற்கு என்ன காரணம்?
“ஸ்ரீவில்லிபுத்தூரில், ‘நீங்கள் தமிழக பாஜக தலைமை ஏற்க மறுக்கிறீர்களாமே’ என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு ‘நான் ஒண்ணும் மறுக்கலியே... எனக்குத் தலைமை பதவி கொடுத்தால் சிறப்பாகச் செயல்படுவேன். பாஜக-வுக்கு இப்போது இருப்பதைவிடவும் ஓட்டு வங்கியை அதிகாரிச்சுக் காட்டுவேன்’னு சொன்னேன். உடனே பிரஸ்காரங்க, ‘நீங்க கேள்வியத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க’ன்னாங்க. ‘அப்டின்னா எனக்குப் புரியுற மாதிரி நீங்க சரியா கேளுங்க’ன்னு சொன்னேன்.
அப்புறம்தான், ‘நீங்க தமிழிசை சவுந்தரராஜன் தலைமையை ஏற்க மறுக்குறீங்களாமே...’ன்னு கேட்டாங்க. அதுக்கு நான், ‘அப்படி யெல்லாம் ஒண்ணும் கிடையாது. ஆக்சுவலா அவங்க ரெண்டு தடவையும் பதவிக்கு வந்தப்ப நேருல சந்திச்சு சால்வை போட்டு வாழ்த்திட்டு வந்தவன் நான்’ன்னு சொன்னேன்.