சைஸ் ஜீரோ 9: உடல் வளர்க்கும் உயிர்ச்சத்துகள்!


ஊட்டச்சத்தான உணவு என்றால் அதில் உயிர்ச்சத்தும் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு இவற்றுடன் உயிர்ச்சத்துகளான வைட்ட மின்களும் தாதுக்களும் உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மற்ற ஊட்டச்சத்துகளைப் போல வைட்டமின்களும் தாதுக்களும் நம் உடலுக்குத் தேவையான சக்தியையோ அல்லது கலோரிக்களையோ தருவதில்லை. ஆனால், அவற்றை நம் உடலில் கொண்டு சேர்க்க உதவுகின்றன. வைட்டமின்கள் வினையூக்கிகளாக வளர் சிதை மாற்றத்துக்கு உதவும் சார் நொதிகளாகத் திகழ்கின்றன.

லைஃப்ஸ்டைலை மாற்றுங்கள்

வைட்டமின்களும் தாதுக்களும் உடலின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் மிகச்சிறிய அளவிலேயே தேவைப்படுகின்றன. ஆனால், தவிர்க்கமுடியாதவையாக திகழ்கின்றன. இந்தத் தேவையை உண்ணும் உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய இயல்கிறது. மேலும், சேமித்த உயிர்ச்சத்துகளை இழக்காமல் இருக்க முறையான வாழ்வியல் தேவைப்படுகிறது. அடிக்கடி துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, மன அழுத்தம், உடல் உழைப்பு இல்லாமை, புகைபிடித்தல், மது அருந்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்தல் போன்ற நம் முறையற்ற பழக்கவழக்கங்கள்தான் உயிர்ச்சத்துக் குறைபாட்டை உருவாக்குகின்றன.

உயிர்ச்சத்துகள் எவையுமே தனியாக இயங்குவதில்லை. உதாரணத்துக்குக் கால்சியம் அதன் வேலையைச் செய்ய வேண்டுமானால் அத்துடன் 24 நுண்ணூட்டச் சத்துகள் தேவையாக இருக்கின்றன. அதேபோல் ஹீமோகுளோபின் உருவாக இரும்புச் சத்துடன் புரதமும் அத்துடன் வைட்டமின் பி மற்றும் சி-யும் தேவைப்படுகின்றன. எனவே, உங்கள் லைஃப்ஸ்டைலை சீராக வைத்திருந்தாலே உணவில் கிடைக்கும் உயிர்ச்சத்துகள் சிறப்பாக அதன் பணியைச் செய்யும்.

x