பதறும் பதினாறு 9: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு மழலைப் பருவம் என்பது மிகக் குறுகியதாக இருக்கிறது. நடக்கப் பழகுவதற்குள் அவர்கள் கைக்கு செல்போன் கிடைத்துவிடுகிறது. அதைப் பார்த்தபடிதான் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ சோறூட்ட முடிகிறது என அலுத்துக்கொள்ளும் பெற்றோர் இன்று அதிகம்.

பிறந்ததுமே குழந்தைகளை அறிவாளிகளாக்கிவிட வேண்டும் என்ற பேராசையால் பல்வேறு வீடியோக்களையும் தரவிறக்கம் செய்து சிறு வயது முதலே தங்கள் குழந்தைகளைப் பார்க்கச் செய்யும் பெற்றோரும் நம்மிடையே உண்டு. இது போதாதென்று தொலைக்காட்சியும் தன் பங்குக்குப் பல்வேறு விஷயங்களையும் குழந்தைகளுக்குப் போதிக்கிறது. இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். வாழ்க்கை முறை ஒரு பக்கம் என்றால்அளவுக்கு அதிகமான தகவல் ஞானம் குழந்தைகளின் உடல்/மன வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றுகிறது. அறிந்துகொள்ளும் விஷயங்களுக்கு ஏற்ப குழந்தைகளின் உடலில்ஹார்மோன் மாற்றம் வழக்கமான பருவத்தைவிட முன்கூட்டியே தொடங்கிவிடுகிறது. ஹார்மோன் மாற்றத்துக்கு ஏற்ப உடலும் மனமும் செயல்படத்தானே செய்யும்? அதனால்தான் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு குழந்தைகள்கூட காதலைப் பற்றி இயல்பாகப் பேசுவதும் இன்னாரைக் காதலிக்கிறேன் எனச் சொல்வதும் சாதாரணமாக நடக்கிறது. இருபாலரும் படிக்கும் பள்ளிகளில் ஆணும் பெண்ணும் காதலிப்பார்கள் அல்லது காதலிப்பதாக நம்புவார்கள். பெண்கள் மட்டுமே படிக்கிற பள்ளிகளில் என்ன செய்வார்கள்? அந்தக் கேள்விக்கான பதில்களில் ஸ்வேதாவின் கதையும் ஒன்று.

எதிர்பாராத முடிவு

ஸ்வேதா ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். பொறுப்புணர்வு மிக்கவள். பெற்றோர் சொல்லுக்கு மீறிய வார்த்தை அவளிடம் இல்லை. படிப்போ, வீட்டு வேலையோ பெற்றோர் சொல்லிச் செய்கிற அளவுக்கு வைத்துக்கொள்ள மாட்டாள். இதுவரை ஸ்வேதாவைப் பற்றிப் பள்ளியிலிருந்து எந்தப் புகாரும் வந்ததில்லை. அக்கம்பக்கத்திலும் அவளுக்கு நல்ல பெயர். அதனால் ஸ்வேதாவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவளுடைய பெற்றோரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அன்று ஸ்வேதா பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தபோதே முகம் வாடியிருந்தது. எதைக் கேட்டாலும் சுரத்தில்லாமல் பேசினாள். ஸ்வேதாவை இரவுச் சாப்பாட்டுக்காக அழைக்கச் சென்ற அவளுடைய அம்மா அதிர்ந்துபோய் கத்தினார். பதறியபடி ஓடிவந்தார் ஸ்வேதாவின் அப்பா. கை அறுபட்டு ரத்தம் ஒழுக தலை சாய்த்திருந்த மகளையும் அதைப் பார்த்த அதிர்ச்சியில் அலறும் மனைவியையும் பார்த்தவர் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டார். அடுத்த நொடியே தன்னைச் சுதாரித்
துக்கொண்டு மகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிகிச்சை முடிந்து அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகளின் அருகில் அந்தப் பெற்றோர் விடிய விடிய விழித்துக் கிடந்தனர்.

பிரிக்க முடியாத பிணைப்பு

மறுநாள் காலை வீட்டுக்குத் திரும்பிய பிறகும் தங்கள் மகளின் செயலுக்கு என்ன காரணம் என அந்தப் பெற்றோர் கேட்கவில்லை. உடலால் சோர்ந்திருக்கும் அவளை மனத்தால் நோகடிக்கக் கூடாது என நினைத்து அமைதி காத்தனர். அந்த அமைதிதான் ஸ்வேதாவைப் பேசச் செய்தது.

ஸ்வேதாவும் சுமித்ராவும் பள்ளித் தோழிகள். முதல் வகுப்பிலிருந்து ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளாக ஒரே பிரிவில் படிப்பதால் இன்னும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். இவர்கள் படிப்பது பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்பதால் மாணவிகளுக்கு வகுப்புத் தோழி மீதோ சீனியர் மாணவி மீதோ ஈர்ப்பு ஏற்படுவது இயல்பாக இருந்திருக்கிறது. அந்த ஈர்ப்புக்கு அவரவருக்குத் தகுந்தபடி ஏதோவொரு பெயர் வைத்துக்கொண்டனர். அப்படி எந்த ஈர்ப்பும் இல்லையென்றாலும், சக மாணவிகளின் வற்புறுத்தலால் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நிர்பந்தமும் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்காகவே ஒருவரைத் தன் நட்புக்கும் ஈர்ப்புக்கும் உரியவராகத் தேர்ந்தெடுத்த மாணவிகளும் உண்டு. அதன் பிறகு அந்த இரண்டு மாணவிகளும் நெருங்கிய தோழிகளாகிவிடுவார்கள். அடிக்கடி பேசிக்கொள்வது, ஒன்றாகச் சாப்பிடுவது, பிடித்தப் பொருட்களைப் பரிசளித்துக்கொள்வது எனத் தொடங்கி ஒருவருக்குப் பிடிக்காததை இன்னொருவர் செய்யவே கூடாது என்ற நிலைவரைக்கும் நீளும்.

அதீத அன்பு ஆபத்து

ஸ்வேதாவும் சுமித்ராவும்கூட இவற்றையெல்லாம் கடைப்பிடித்தார்கள். எதை வாங்கினாலும் ஒரே நிறத்தில் வாங்கினார்கள். தங்கள் இருவர் பெயரின் முதலெழுத்தையும் ஒன்றாகச் சேர்த்து எஸ்.எஸ். என்று புத்தகங்களில் எழுதினார்கள். இருவரும் ஒருநாள்கூடப் பேசாமல் இருந்ததில்லை. எதிலும் கருத்து வேறுபாடு இல்லை. அந்த அளவுக்கு இணைபிரியாத தோழிகளாக இருந்தார்கள். ஏதோவொரு சின்ன விஷயத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட, அன்று முழுக்க ஸ்வேதாவிடம் பேசவில்லை சுமித்ரா. சிறு சண்டைதானே சமாதானமாகிவிடும் என ஸ்வேதா அமைதிகாக்க, மறுநாளும் சுமித்ரா பேசவில்லை. ஸ்வேதாவே வலியச் சென்று பேசியும் சுமித்ரா அதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தாள். அதை ஸ்வேதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அன்று அப்படியொரு விபரீத செயலைச் செய்திருக்கிறாள்.

மகள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நட்பில் சண்டையும் கோபமும் இயல்புதானே, இதில்இப்படி அதீதப் பிணைப்புடன் இருக்க என்ன காரணம் எனக் குழம்பினர். பிறகு ஒரு வழியாக மகளைச் சமாதானப்படுத்திவிட்டு, சுமித்ராவை அழைத்துப் பேசினர், தனக்காக ஸ்வேதா இப்படியொரு முடிவெடுத்திருப்பதைப் பார்த்து சுமித்ரா கலக்கமடைந்தாலும் தங்களைப் பற்றி அவளுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என நினைத்து அச்சப்பட்டாள். சுமித்ரா அச்சப்பட்டபடி அப்படிஎதையும் அவர்கள் கேட்கவில்லை. ஆனால், இப்படியாகஉணர்வு ரீதியான பிணைப்பு இருவரின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல என்பதை அவர்கள் இருவருக்கும் புரியும்விதமாகப் பொறுமையாக விளக்கிச் சொன்னார்கள்.

வயதுக்கே உரிய ஆர்வமும் சூழலும் அவர்களை இப்படி நினைக்கவும் நடந்துகொள்ளவும் செய்திருப்பதையும் எடுத்துச்சொன்னார்கள். தோழிகள் இருவரும் ஓரளவு அதை ஏற்றுக்கொண்டாலும் தங்கள் இருவருக்கும் இடையிலான பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது என்ற நினைப்பை மட்டும் விட்டுவிடவில்லை. அந்த நினைப்பு நிஜமல்ல என்பதை அவர்களுக்குப் புரியவைக்க, வகுப்பு ஆசிரியரின் துணையும் தேவைப்பட்டது.

வயதால் விளையும் நெருக்கம்

“பெண்கள் மட்டும் படிக்கிற பள்ளிகளில் இதெல்லாம் ரொம்பச் சாதாரணம். ஒவ்வொரு பள்ளியிலும் இதுக்கு ஒவ்வொரு பெயர். எனக்குத் தெரிந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களுக்குப் பிடித்த பெண்ணை ‘ஃபிகர்’ என்று சொல்கிறார்கள். எனக்கும் ஆள் இருக்கு என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமிதமும் பெருமையும் இருக்கு. உனக்கு ஆள் இல்லையா என்றுதொடர்ச்சியாகக் கேட்டு, இதுபோன்றவற்றில் விருப்பம் இல்லாத பெண்களைக்கூட கமிட் செய்துகொள்ள வைத்து
விடுவார்கள். ஆண்கள் இல்லாத பள்ளிச் சூழல், சகமாணவிகள் கொடுக்கிற அழுத்தம் இவற்றால் மாணவிகள், தங்களுக்குப் பிடித்த சீனியரையோ ஜூனியரையோ காதலியைப் போல நடத்தத் தொடங்குவார்கள்.

ஒரு பெண் நடந்துசென்றால் அவளுக்குப் பிடித்த பெண்ணின் பெயரைச் சொல்லி கிண்டல் செய்வதில் தொடங்கி ஆண் – பெண் காதலில் இருக்கிற அத்தனையும் இதிலும் நடக்கும்” என்கிறார் பள்ளி மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துநர் காயத்ரி. காதலில் நடக்கிற அபத்தங்கள் இதிலும் உண்டு. ஒருவர் பேசவில்லை என்றாலோ புறக்கணித்தாலோ இன்னொருவர் இருவிதமாகச் செயல்படுவார். தனக்குப் பிடித்த பெண்ணை வற்புறுத்தித் தன்னிடம் அன்பாக நடந்துகொள்ளச் செய்யலாம். அல்லது தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளலாம். பெரும்பாலான பெண்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள்கிறார்கள்.

சாப்பாட்டைத் தவிர்ப்பது, தனிமையில் அழுவது எனத் தொடங்கி உயிருக்கு ஆபத்தான காரியங்கள் வரை செய்யத் துணிவார்கள். படிப்பிலும் கவனம் செல்லாது. அடுத்தடுத்த வகுப்புக்கு மாறும்போதோ நாட்கள் செல்லவோ இதுபோன்ற ஈர்ப்பு தானாகவே படிப்படியாகக் குறைந்துவிடும். ஆனால், இருவரும் உணர்வுபூர்வமாக நெருக்கமாக உணர்வது அவர்களின் சீரான வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதால் ஆசிரியரும் பெற்றோரும் இதுபோன்ற விஷயம் குறித்து மனம்விட்டுப் பேசலாம். ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லி விளக்கலாம். எக்காரணம் கொண்டும் அவர்களை அவமானப்படுத்தவோ புறக்கணிக்கவோ கூடாது. அப்படிச் செய்ததால்தான் அந்தத் தோழிகளின் எதிர்காலம் திசைமாற இருந்தது.

அவமானப்படுத்துவது தவறு

ரேகாவும் சுரேகாவும் பத்தாம் வகுப்பு மாணவிகள். வழக்கமான நட்பை மீறி இருவருக்கும் இடையே உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்தது. ஒருவர் இல்லாமல் இன்னொருவரைத் தனியாகப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு நிஜமும் நிழலுமாக இருந்தார்கள். ஒருநாள் பள்ளி மைதானத்தில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ரேகாவின் தோள் மீது சாய்ந்தபடி எதையோ சொல்லிச் சிரித்தாள் சுரேகா. அதைக் கேட்டுச் சிரித்த ரேகா, தோழியைத் தன் தோளோடு சேர்த்து லேசாக அணைத்தாள். அப்போது அந்த வழியாகச் சென்ற உடற்பயிற்சி ஆசிரியை இருவரையும் பார்த்துவிட்டார். உடனே அவர்களை வரச் சொல்லி சத்தமாக அழைத்தார். இருவரும் புரியாமல் எழுந்துவர, மைதானத்தில் இருந்த அனைத்து மாணவிகள் முன்னிலையிலும் இருவரையும் மோசமாகத் திட்டினார்.

இது கண்ணியமான பள்ளி என்றும் இதுபோன்ற அசிங்கமான செயல்களுக்கு இது இடமல்ல என்று ஆத்திரத்துடன் சொன்னார். சுற்றியிருந்த மாணவிகள் கேலியாகச் சிரிக்க, ரேகாவும் சுரேகாவும் குற்றவுணர்வில் குறுகிப்போனார்கள். வகுப்புக்குத் திரும்பியவர்கள் யாரிடமும் பேசவில்லை. அனைவரும் தங்களையே பார்ப்பதாக உணர்ந்தார்கள். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தால் தங்கள் நிலை என்னவாகும் என்ற பயத்தில் அப்போதே இறந்துவிடலாம் என நினைத்தார்கள். அப்போதுதான் அவர்களுடைய வகுப்பு ஆசிரியர் அவர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். அதுவரை கண்டிப்பான குரலில் பேசிய ஆசிரியர், பொறுமையாகவும் ஆறுதலாகவும் பேச, இருவரும் ஓரளவு நிம்மதியடைந்தனர்.

தோழிகள் இருவர் இப்படி நெருக்கமாகப் பழகுவது தவறில்லை என்று அவர் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் தலைகுனிந்து நிற்கிற அளவுக்குப் பெரிய தவறைச் செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இயல்பான நட்புக்கும் அதீத நெருக்கத்துக்கும் இருக்கிற வேறுபாட்டைச் சொன்னார். இருவரும் நடந்துகொள்ள வேண்டிய முறையையும் சுட்டிக்காட்டினார். அது அவர்களுக்கு மனதளவில் தெம்பளித்தது, அவர்கள் செய்யத் துணிந்த தவறிலிருந்து அவர்களை மீட்டது. ஏன் பெண்ணுக்குப் பெண் மீது இப்படி ஈர்ப்பு ஏற்படுகிறது? அதற்கு என்ன காரணம்? எல்லாப் பெண்களும் இப்படி நடந்துகொள்வார்களா?(நிஜம் அறிவோம்...)

-பிருந்தா சீனிவாசன்

x