75 வயதாகி முதுமையைத் தழுவி, இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டபோதும்கூட எதற்காகவும் கவலைப்படாமல் படுத்துக்கொண்டே பலரது பசிப்பிணி போக்கிக்கொண்டிருக்கிறார் கோவை சிவப்பிரகாச சுவாமிகள்.
கடலூருக்கு சுமார் ஐந்து கிலோமீட்டரில் இருக்கிறது மேட்டுக்குப்பம். இது அருட்பிரகாச வள்ளலார் சித்தியடைந்த இடம். வடலூர் வரும் வள்ளலாரின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவர் சித்தியடைந்த சித்திவளாகத்துக்கும் தவறாமல் செல்வார்கள். சித்தி வளாகத்தைத் தரிசித்த பின்னர் அருகிலிருக்கும் கோவை சிவப்பிரகாச சாமிகளின் அன்னதான ஆதீனத்தை அடைகிறார்கள். அங்கே அவர்களை அன்போடு வரவேற்கும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு வடை பாயசத்துடன் சுடச்சுட மதிய உணவு படைத்து மகிழ்வித்து மகிழ்கிறார்கள்.
சாப்பிட்டு முடித்து சிவப்பிரகாச சுவாமிகளின் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது பக்தர்கள் கூட்டம். இத்தனைக்கும் எழுந்திருக்காமல் மெத்தையில் படுத்த நிலையிலேயே இருக்கிறார் சிவப்பிரகாசம் சுவாமிகள். அகலமான அந்த வெள்ளை நிற மெத்தையில் குப்புறப் படுத்தவாறே முழங்கைகளை முன்னால் ஊன்றி முகத்தை நிமிர்த்தி, பக்தர்களோடு பேசுகிறார். 18 வருடங்களுக்கு முன் விபத்து ஒன்றில் சிக்கினார் சிவப்பிரகாசம். அதில் கடும் பாதிப்புக்குள்ளாகி மூன்று மாதம் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவரது இடுப்புக்குக் கீழே முற்றிலுமாகச் செயல் இழந்து விட்டது. தற்போது சிறுநீர்கூட தானாகக் கழிக்க முடியாத நிலையில் அவர்!
“எப்படி ஆன்மிக நாட்டமும் சேவையில் விருப்பமும் வந்தது, உங்கள் பூர்வாசிரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?’’ என்று சிவப்பிரகாசத்திடம் கேட்டேன். “ பல்லடம் அருகேயுள்ள போகம்பட்டியில் முருகசாமி - கண்ணம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தேன். மிகவும் ஏழ்மையான குடும்பம். எட்டாவது வரைக்கும்தான் தட்டுத்தடுமாறி படிக்க முடிந்தது. அதன்பின்னர் சின்னச்சின்ன வேலைகளைப் பார்த்தேன். பிறகு ஒருநாள் ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு நேராக காஞ்சிபுரத்துக்குப் போனேன். அங்குள்ள தொண்டைமண்டல ஆதீனத்தில் அடைக்கலமாகி அங்கு ஏழு ஆண்டுகள் தங்கி சைவசித்தாந்தம், வேதாந்தம், புராணங்கள் உட்பட சமயக்கல்வி, ஆன்மிகக் கல்வியைப் படித்தேன். பிறகு, காவியுடுத்தி ஊர் ஊராக அலைந்தேன். அப்போது பாழடைந்து கிடக்கும் கோயில்களை அந்தந்த ஊர்மக்களை ஒன்றுதிரட்டி கும்பாபிஷேகம் செய்விக்கும் வேலைகளைத் தொடங்கினேன். அப்படிச் சுமார் 30 கோயில்கள் என்னால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒருநாள் வடலூர் வந்தபோது ஒரு திருமணத்தில் பேராசிரியர் சீனி.சட்டையப்பனைச் சந்திக்க நேர்ந்தது. அவரது சந்திப்புதான் என்னை சன்மார்க்கத்துக்கு இழுத்துவந்தது. காவியுடையில் இருந்த என்னை வெள்ளாடை உடுக்கச்செய்தது. அப்போதிலிருந்து சன்மார்க்கத்தில் ஈடுபட்டு சேவையாற்றி வருகிறேன்’’ என்றார் சிவப்பிரகாசம்.