சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்திக்கச் சென்றபோது, சென்னை புரசைவாக்கத்தில் கல்லூரி மாணவர் களுக்கான பேச்சுப்போட்டியில் இருந்தார். ‘பெரியாரும் அண்ணாவும்’ இதுதான் பேச்சுப்போட்டிக்கான தலைப்பு. வைகோவைச் சந்திக்கும் வரையில் நிகழ்ச்சியைக் கவனிக்கலாம் என்றிருந்தேன். மொத்தம் 2,500 பேர் பங்கேற்ற போட்டியில் மாவட்டம், மண்டலம் என்று ஒவ்வொரு படியாக முன்னேறியவர்களுக்கான மாநில இறுதிப்போட்டி அது. கல்லூரி மாணவ மாணவிகள் 21 பேர் மேடையேறினார்கள். கட்சிக்குத் துளியும் சம்பந்தமில்லாத நடுவர்கள் மூவர் ஒரு ஓரமாக உட்கார்ந்து ஒவ்வொருவரின் பேச்சையும் மதிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். போட்டி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகப் போட்டியாளர்களைப் பெயர் சொல்லி அழைக்காமல், சற்றுமுன் அளிக்கப்பட்ட எண்களைச் சொல்லி அழைத்தார்கள்.
முதலில் ஒரு பையன், அடுத்து பெண் என்ற முறையில் அழைக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் பின்னிப் பெடலெடுத்தார்கள். சிலர் பேசும்போது உடல் புல்லரித்தது. சிலர் பேசுகையில் அரங்கு அதிர்ந்தது. சிலர் கண் கலங்கவும் வைத்தார்கள். பெரிய தலைவர்கள் பேசுகிறபோது ஒலிப்பதிவு செய்வோமே, அதேபோல அவர்களது பேச்சால் ஈர்க்கப்பட்டு அனிச்சையாக ஒலிப்பதிவு செய்யத் தொடங்கிவிட்டேன். கம்பீரமாக, ஏற்ற இறக்கத்துடன், எதுகை மோனையாக, நிறைய மேற்கோள்களுடன் மாணவர்கள் பேசி அமர, பதினாறாவதாக அழைக்கப்பட்ட மாணவி தி.அட்சயா மேற்கோள்களுக்கோ, வார்த்தை ஜாலங்களுக்கோ முக்கியத்துவம் தராமல், எதிரில் இருப்பவர்களோடு உரையாடுவது போன்ற இயல்பான தொனியில் கருத்துச் செறிவோடு பேசிவிட்டுப் போனார். அவருக்குத்தான் முதல் பரிசு ஒரு லட்ச ரூபாய்!
தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் அட்சயா. இவரது அப்பா தியாக ராஜன், தவிலைச் சுற்றியிருக்குமே ‘வளை’ (ரிங்ஸ்) அதைச் செய்பவர். நான்காவது தலைமுறையாக அந்தத் தொழிலில் ஈடுபட்டி ருக்கிறார். தாய் செல்வி, இல்லத்தரசி. அண்ணன் பெங்களூருவில் பொறியாளராக இருக்கிறார். அட்சயா தஞ்சை பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியல் இறுதியாண்டு பயில்கிறார்.
மாணவியைப் பாராட்டிவிட்டு அவரது குடும்பப் பின்னணி பற்றி விசாரித்தேன். சிறுவயதிலிருந்தே மேடையேறுகிற பெண் அவர். ஆரம்பத்தில், கவிதை, நடனம், பேச்சுப்போட்டி என்று எல்லாவற்றிலும் சேர்ந்து பரிசு வாங்கியவர், ஆறாம் வகுப்புக்குப் பிறகு பேச்சுப்போட்டியில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அதிலும்கூட, எழுதி வைத்து மனப்பாடம் செய்து பேசாமல், கருத்துகளைத் திரட்டி உள்வாங்கிக்கொண்டு தன்னுடைய வார்த்தைகளில் பேசுவதையே பழக்கப்படுத்திக் கொண்டவர்.