பரிசம்
கேசவனையும் கருப்பையாவையும் மட்டும் முளைக்கொட்டுத் திண்ணைப் பக்கம் வரச்சொல்லியிருந்தான் பாண்டி.
வந்து காத்திருந்த ரெண்டு பேருமே, ‘மச்சான் எதுக்கு வரச் சொன்னாரு?’ என ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
கேசவன், பீடியை வாயில் வைத்து சுண்டி இழுத்துக் கொண்டே, “வெள்ளாங்குளத்தான்ங்க என்ன அம்புட்டுப் பெரிய தாட்டியன்ங்களா! ஊரு விட்டு ஊரு வந்து வீடு புகுந்து நம்ம பொண்ணைத் தூக்கீருவான்ங்களாக்கும்? பெருநாழிக்காரன் என்ன அவத்தப் பயலுகளா? கொலைபலி ஆகிப்போகாது?” புகையை உயரே ஊதிவிட்டான்.
“அவன்ங்களுக்கு பதறிக்கிட்டு இன்னைக்கே பருசம் போட்டு நிச்சயம் பண்ணணுமாக்கும்? பாண்டி மச்சான் ஏன் அவசரப்படுறாரு?”
இன்னைக்கு ராத்திரி மாயழகியைப் பரிசம் போடப்போகிற மாப்பிள்ளை கருப்பையா, முகம் இறுகிப்போய், பதில் ஏதும் பேசாமல் பாதையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பாதை வழியே பாண்டி வருவதைக் கண்டதும், ‘மச்சான் வர்றாரு...’ வாய்க்குள் பேசினான்.
புகைந்த பீடியை அவசரமாய்க் காலில் போட்டு மிதித்த கேசவன், தலைப்பாகைக் கட்டை அவிழ்த்து, துண்டை உதறித் தோளில் போட்டான்.
கவிழ்ந்தவாக்கில், “பாண்டி மச்சான் மொகத்திலே எப்போ
பார்த்தாலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கத்தான்ப்பா செய்யுது! பரபரன்னு அலையிறாரு!” கருப்பையாவுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னான்.
நெருங்கி வந்துவிட்ட பாண்டி, ஜாடைமாடையாகக் கருப்பை யாவைக் கண்கோதிவிட்டு, கேசவனைப் பார்த்து, “கொட்டுக்கார குருசாமிகிட்டே அந்த வெள்ளாங்கொளத்தான் சொல்லி விட்டதைக் கேட்டியா மாப்ளே?” எனச் சொல்லி முடிக்கும் முன் குறுக்கே பேசினான் கேசவன்.
“அட விடுங்க மச்சான். அங்கிட்டு யாரு? அக்கா புருசன் தானே? சக்கரை அண்ணேன்... ஏதோ கோவத்திலே சொல்லி யிருப்பாரு.”
கேட்டதும் பாண்டிக்குப் பலியாய் கோபம் வந்தது.
“ஏன்டா... என்னடா... அண்ணேன் ணொண்ணேன்? வீடு
புகுந்து நம்ம பொண்ணைத் தூக்கணும்னு சொல்லி யிருக்கான். எம்புட்டு நெஞ்சழுத்தம் அவனுக்கு!”
தலை கவிழ்ந்து தரையைப் பார்த்தான் கேசவன்.
கோபித்துக்கொண்டதாய் யூகம் பண்ணிய பாண்டி, கிட்டே வந்து கேசவனின் தோளைத் தொட்டு, “வெள்ளாங்குளத்தான் லேசுப்பட்ட ஆளுக இல்லை மாப்ளே. கிசும்பு பிடிச்சவன்ங்க. ஆப்பநாட்டுலேயே அவன்ங்க கொடி மட்டும்தான் பறக்கணும்னு நெனைப்பான்ங்க” முளைக்கொட்டுத் திண்ணையில் தாவி ஏறி அமர்ந்தான்.
கேசவனும் கருப்பையாவும் பாண்டியின் வாயையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள்.
“அப்போ எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். ஏதோ ஒரு பொண்ணு பிரச்சினை. பெருநாழிக்கும் வெள்ளாங் குளத்துக்கும் ஒரு பெரிய கலகம் நடந்தது. அவன்ங்க ஊரு விட்டு ஊரு வந்து, நாடார் பேட்டையிலே நின்னுக்கிட்டு, ‘அடேய்… வாங்கடா வாங்கடா’ன்னு வம்புக்கிழுத்து வெள்ளை வீசுறாய்ன்ங்க. பெருநாழி கடைத்தெருவுலெ, கம்பத்துப்பிள்ளை ஓட்டலுக்கு முன்னாடி நம்ம ஆளுக தெரண்டான்ங்க. ரெண்டு ஊருக்காரனும் அருவா… வேல்கம்போட மோதுறான்ங்க. ‘சதக்’ ‘சதக்’னு வெட்டு விழுகுது. ஒரே ரத்தக்காடு! மூணு கொலை ஆகிப் போச்சு. அங்கிட்டு ரெண்டு. இங்கிட்டு ஒண்ணு.”
கருப்பையாவும் கேசவனும் அகலக் கண் திறந்தார்கள்.
“அந்த நேரம், எங்கய்யா வெள்ளையத் தேவனும் நம்ம கோவிந்தச் சின்னையாவும் நல்ல வாலிபம்; சிலம்பு வஸ்தாவிகள். ரெண்டு பேரும்தான் அவன்ங்க கூட்டத்தையே கொம்பு சுத்தி அடிச்ச ஆளுக.”
கேசவன் எச்சிலை விழுங்கினான்.
“அப்புறம் கோர்ட்டு, கேஸுன்னு அலைஞ்சு ரெண்டு ஊருக்காரனும் தவிச்சுப்போனாய்ன்ங்க. காலப்போக் கிலே அதை எல்லாம் நம்ம மறந்துட்டோம். ஆனால் அவன்ங்க இன்னும் மறக்கலெ. நெஞ்சோரமா பகையை ஒதுக்கி வச்சுக்கிட்டே இருக்கான்ங்க.”
“அப்புறம் எப்பிடி மச்சான்… ரெண்டு ஊருக்கும் இத்தனை சம்மந்தஞ்சாவடி ஆச்சு?”
“என்ன செய்யிறது? எல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு... சொந்தம். எங்க ஆத்தா பெறந்தது வெள்ளாங்குளம். எங்கப்பன் கூடப்பெறந்த அய்த்த வாக்கப்பட்டதும் வெள்ளாங்குளம்.” தலை கவிழ்ந்து கண்களை மூடினான் பாண்டி. “இந்த ஊருப் பொண்ணுக அந்த ஊர்லெயும் அந்த ஊருப் பொண்ணுக இந்த ஊர்லெயும் வாக்கப்பட்டுருக்குக. எத்தனை சம்மந்தஞ்சாவடி ஆகியிருந்தாலும் அவன்ங்களுக்கு நம்ம பேர்லே ஒரு பகை இருந்துக்கிட்டே இருக்கு” நிறுத்தினான்.
“இன்னைக்கு ராத்திரி, நம்மளை மக்கட்டத்தனம் பண்ணணும்னே கட்டாயம் பெருநாழிக்குள்ளே வருவான்ங்க.”
“வந்தூ… என்ன பண்ணுவாய்ன்ங்க?”
“என்ன… பண்ணுவாய்ன்ங்களா? ராத்திரி நிச்சய தார்த்தம். ஊரு கூடி என் வீட்டிலே பருசம் போட்டுக்கிட்டு இருப்போம். அவய்ன்ங்க கம்பு அருவாளோட வந்து கலகம் பண்ணுவாய்ன்ங்க. அவன்ங்களை ஊருக்குள்ளே நுழைய விட்டுட்டோம்னா அப்புறம் நம்ம யாரும், ‘நானும் ஆம்பளை’ன்னு இடுப்பிலே வேட்டி கட்டித் திரியிறதிலே அர்த்தம் இல்லை மாப்ளே.”
கருப்பையாவும் கேசவனும் பார்த்துக்கொண்டார்கள்.
“இப்போ என்ன மச்சான் பண்ணணும்?”
“நாங்க பெரியாளுக கூடி வீட்டிலே பருசத்தைப் போடுறோம். நீங்க எளவட்டங்க… வலுவான ஆயுதங் களோட பதுங்கியிருந்து, வெள்ளாங்குளம் வண்டிப் பாதையைக் கண்காணிக்கணும். பொழுது இருட்டுன பெறகு அந்தப் பாதையிலே எவன் வந்தாலும் மடக்குங்க.”
“நடந்தெல்லாம் வர மாட்டான்ங்க. அருவா கம்புகளோட வண்டி கட்டிதான் வருவான்ங்க.”
“எப்பிடி வந்தாலும் சரி. எவனும் ஊர் எல்லையைத் தாண்டி உள்ளே வரக் கூடாது. போட்டுத்தள்ளுங்க” திண்ணையை விட்டுக் குதித்து இறங்கிய பாண்டி, கேசவனைப் பார்த்து, “எல்லா வீட்டிலேயும் அருவா, கம்புக கெடக்குதில்லே?” என்றான்.
“அருவா கம்புகளுக்கா பஞ்சம்? நாலு ஊரை அடிக்கலாம்.”
“முழிப்பா இருக்கணும்ப்பா நம்ம கைதான் முந்தணும்” என்றபடி வீட்டை நோக்கி நடந்தான்.
பாண்டி நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்த இருவரும் ஒண்ணு சொன்ன மாதிரி திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
“ஏன்டா கேசவா! ராத்திரி நான் எங்கே இருக்குறது? பருசம் போடுற வீட்டிலேயா? உங்களோட காட்டுலேயா?” என்றான் கருப்பையா.
கட்டிலிருந்து ஒரு பீடியை உருவி வாயில் வைத்த கேசவன், “இதென்ன கேள்வி? பொண்ணுக்குப் பருசம் போட்டு நிச்சயம் பண்ணப்போற மாப்பிள்ளை நீயி. பருசம் போடுற இடத்திலேதான் இருக்கணும். நீ அந்த வேலையைப் பாரு. நான் போயி எளவட்டங்களைக் கெளப்புறேன்” பற்ற வைத்தான்.
குமரிகளெல்லாம் மாயழகியைச் சுற்றி அமர்ந்திருந்
தார்கள்.
வீட்டு முற்றத்தில் கிடந்த நாலைந்து பெஞ்ச் பலகையில் பெரிய ஆம்பளைகள் உட்கார்ந்திருந்தார்கள். தாழ்வாரத்து விளக்கு வெளிச்சத்தில் பொம்பளைகள் கூட்டம்.
முற்றத்து மையத்தில் விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் தட்டு, தாம்பாளங்கள் நிறைந்திருந்தன.
ஒரு தட்டில் பரிச சேலை, ரவிக்கை. ஒரு
தட்டில் உள்பாடி, உள்பாவாடை. ஒவ் வொரு தட்டு, தாம்பாளத்திலும் மஞ்சள் கிழங்கு, சந்தனம், குங்கும டப்பா, வாசனை சோப்பு, சோப்பு டப்பா, சீப்பு, முகம் பாக்குற கண்ணாடி, பவுடர் டப்பா, கண் மை டப்பி, வளையல், ரிப்பன், ஜடைக் குஞ்சம்.
கொஞ்சம் பெரிய தாம்பாளங்களில் வாழைப்பழம், மாம்பழம், பேரிக்காய்,
பேரீச்சைப்பழம், கல்கண்டு, கருப்பட்டி வட்டு,
வெத்தலைக் கட்டு, கொட்டப்பாக்கு. வண்ணப் பெட்டியில் நிறை மரக்கால் அரிசி, ஓலைக் கொட்டானில் உப்பு.
பரப்பி இருந்த பரிசப் பொருட்களுக்கு முன்னே, கிழக்கே பார்த்து சம்மணமிட்டு அமர்ந்திருந்தார் கோவிந்தத் தேவர். வெளுத்த வேட்டி, முழுக்கைச் சட்டை, கழுத்திலே காக்காப் பட்டுத் துண்டு.
தட்டு வரிசைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் குமராயி.
தாழ்வாரத்துப் பொம்பளைகள் பேசிக் கொண்டார்கள்.
“கூடப்பெறந்த ஒத்தப் பிறவி அரியநாச்சி. அவளைத் தள்ளிவச்சுட்டு அப்பிடி என்ன அவசரமாம் பருசம் போடணும்னு…”
“மாயழகி என்ன சொல்றா?”
“அந்தப் பிள்ளை என்ன சொல்லப் போகுது? பாவம்...வாயே தெறக்கலே. அப்பன், ஆத்தா இல்லாம வளர்ந்த புள்ளை. வள்ளி ஒருத்தி இல்லேன்னா... எப்பவோ செத்துச் சுண்ணாம்பாயிருக்கும்.”
“ஒரு பொம்பளைப் புள்ளையைப் பகடைக்காயா வச்சில்லே இம்புட்டு ஆட்டமும் ஆடுறான்ங்க…”
“இந்தா... இங்கே ஒருத்தி இருக்காள்லெ குடும்பம் கலைக்கி குமராயி... எல்லாம் அவள் மூப்புதான். ஆட்டமா ஆடுறா.”
“வெள்ளாங்குளத்து சக்கரை இருக் கானே பாசக்காரன். மனுச மக்களோட தரம் தெரிஞ்ச ஆளு. இந்தத் தரங்கெட்ட நாயி அவனை ஒதுக்கி வச்சுட்டு இப்பிடி ஒரு காரியம் பண்ணுது.”
“வெள்ளாங்குளம் சக்கரை… மனுசருக் குதான் மனுசன். அவனும் வெள்ளையத் தேவன் மருமகன் தானே? விடுவானாக்கும்? இப்போ வந்து, வீடு புகுந்து மாயழகியைத் தூக்கிட்டுப் போறானா… இல்லையான்னு பாரு.”
“அடியேய்… மெதுவா பேசுடீ. கொமராயி காதுலெ விழுந்தா ஆஞ்சிருவா…”
“அவள் ஏங்கிட்டே வாக் குடுத்தா ளாக்கும்… தலை மயித்தை இழுத்து வச்சு அறுத்துப்புடுவேன் அறுத்து.”
கோவிந்தத் தேவர், பொம்பளைகள் பக்கம் திரும்பி சத்தம் போட்டார். “ஏம்மா… பேச்சைக் குறைங்கம்மா.”
வெள்ளாங்குளம் வண்டிப் பாதை புதர் களுக்குள், கேசவனோடு சேர்ந்து பெருநாழி இளவட்டங்கள் பதுங்கியிருந்தார்கள். பெளர்ணமி நிலா வெளிச்சத்தில் வெகு தூரம் வரை துலங்கத் தெரிந்த வண்டித் தடத்திலேயே எல்லோருடைய கண்களும் பதிந்திருந்தன. பீடியைப் பற்ற வைக்கத் தீக்குச்சியை உரசிய கள்ளராமனின் கையில் ஓங்கி அறைந்தான் கேசவன். “கூட்டத்தைக் காட்டிக்குடுக்க நீ ஒருத்தன் போதும்டா…”
“நீ என்னப்பா... ஒரு பீடியைப் பத்த வைக்க விட மாட்டேங்கிறே...” என்ற கள்ளராமன், மறுபக்கம் திரும்பி, நெருப்பு தெரியாமல் உள்ளங்கைக்குள் உரசிப் பற்ற வைத்தான்.
பதுங்கியிருந்த இளவட்டங்களின் கைவாக்கில் வேல் கம்பு, அரிவாள், குத்துக்கம்புகள் கிடந்தன. கைகள் துறு துறுக்க… முனகினார்கள். ‘வெள்ளாங் குளத்தான்ங்க வந்தால்… வெட்டிச் சரிச்சிற வேண்டியதுதான்.’
குமரிகளுக்குள் அமர்ந்திருந்த மாயழகி, கவிழ்ந்தபடி, தொண்டைக் குழிக்குள் அழுதுகொண்டிருந்தாள். யார் கிட்டேயும் ஒரு வார்த்தை பேசலெ. பெரிய மனுஷிகள் சமாதானம் பண்ணியும் அழுகை நிக்கலெ.
முற்றத்திலிருந்து உள் வீட்டை ஆந்திப் பார்த்த கோவிந்தத் தேவர், “ஏம்மா பொண்ணைக் கூட்டிக்கிட்டு வாங்கம்மா…” குரல் கொடுத்தார்.
உள் வீட்டுக்குள்ளிருந்து சோலையம்மா கிழவி கத்தினாள்.
“மாயழகிப் பிள்ள வர மாட்டேங்குது.”
(சாந்தி... சாந்தி...)