திருப்பதிக்கு வரும் ஏழுமலையான் பக்தர்களை, கழுத்தில் காவித் துண்டு கட்டிய சேவகர்கள் பலர் ஆங்காங்கே நின்று வழி நடத்துவதைப் பார்த்திருக்கலாம். இவர்கள்தான் ‘ஸ்ரீவாரி சேவகர்கள்’. நமக்கு வழி காட்டுவதிலிருந்து, நெற்றியில் திருநாமம் இட்டு, குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி, அன்பாய் உபசரிப்பது வரை அனைத்தையும் இந்த ஸ்ரீவாரி சேவகர்கள் இன்முகம் கொண்டு செய்து வருகிறார்கள்.
இதுமட்டுமல்ல... இலவச லட்டு பிரசாதம் வழங்குவது, உண்டியல் காணிக்கை எண்ணுவது, நெரிசலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது, காலணிகள் உள்ளிட்ட பக்தர்களின் உடமைகளைப் பாதுகாப்பது என அனைத்து வேலைகளையும் பிரதிபலன் பாராது ஸ்ரீவாரி சேவகர்கள் செய்துவருகிறார்கள். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இவர்கள் எல்லாம் இங்கேயே தங்கியிருந்து ஏழுமலையானுக்குச் செய்யும் சேவையாய்
நினைத்து இவற்றையெலலாம் செய்துவருகிறார்கள்.
போற்றுதலுக்குரிய பணி
நாம் யாரென்று இந்த ஸ்ரீவாரி சேவகர்களுக்குத் தெரியாது, அவர்கள் யாரென்றும் நமக்குத் தெரியாது. ஆனால், ஏழுமலை யானின் பக்தர்கள் என்ற ஒரே காரணத்தால், இவர்கள், பக்தர்களுக்கு பல சேவைகள் புரிந்து வருகின்றனர். தேவஸ்தான விடுதிகளில் இவர்கள்தான் பக்தர்களுக்கு தங்கும் அறை வழங்க விண்ணப்ப படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து வழிகாட்டல் செய்கிறார்கள். தகவல் மையங்களில், பல மொழி பேசும் பக்தர்களின் சந்தேகங்களுக்கு மிக பொறுமையாக அவரவர் மொழியிலேயே பதிலளிக்கிறார்கள். திருமலையில் மட்டுமல்ல... திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும், கோவிந்தராஜர் கோயிலிலும் இவர்களின் சேவைகள் போற்றுதலுக்குரியது.
திருமலைக்கு வரும் பக்தர்களின் உடமைகளை பாதுகாப்பாக வாகனங்களில் மலைக்கு அனுப்பி வைப்பது, திருமலையில் மீண்டும் அவைகளை எடுத்து உரியவர்களிடம் சேர்ப்பது, அன்னதான மண்டபங்களில் பக்தர்களுக்கு உணவு பரிமாறு வது, கோயிலில் பக்தர்களை வரிசையில் சீர்படுத்தி, அடுத்து வரும் பக்தர்களுக்காகத் துரிதமாக பக்தர்களை வெளியே அனுப்பி வைப்பது, கூட்டம் அதிகமான நாட்களில், வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு வெயில், மழை என்றும் பாராமல் உணவு உள்ளிட்டவைகளை வழங்குவது என வாரி சேவகர்களின் சேவை நீண்டு கொண்டே போகிறது.
தேவஸ்தானமே ஏற்பாடு செய்து தருகிறது
ஸ்ரீவாரி சேவகர்கள் படையில் 18 முதல் 60 வயது வரை உள்ள சேவகர்கள் இருக்கிறார்கள். இதில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். குஜராத், டில்லி உள்ளிட்ட வடமாநிலத்தவர்களும் இதில் இருக்கிறார்கள். இதில்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும் குறிப்பிட்ட காலத்துக்கு இந்தச் சேவையைச் செய்ய இங்கு வந்து போகிறார்கள்.
தனியாகவோ, குழுவாகவோ ஸ்ரீவாரி சேவகர்களாக ஏழுமலையானுக்குத் தொண்டாற்றலாம். 3, 4, 7 நாட்கள் வீதம் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சேவை செய்யலாம். சேவையை நிறைவு செய்யும் நாளில் இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்கிறது. அத்துடன் இவர்களுக்கு லட்டு பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. இவர்கள் சேவையிலிருக்கும் அத்தனை நாளும் தங்கும் இடம், உணவு உள்ளிட்டவைகளை தேவஸ்தானமே ஏற்பாடு செய்து தருகிறது.
மாலை தொடுக்க 50 பேர்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 18 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்களாகவும், 20 ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதில்லாமல் ஸ்ரீவாரி சேவா அறக்கட்டளையினர் தினமும் 2 ஆயிரம் பேர் வரை இங்கு ஊதியமில்லா பணி செய்கின்றனர். ஸ்ரீவாரி சேவா தன்னார்வ பெண் பக்தர்கள் தினமும் சுமார் 50 பேர் வீதம் ஏழுமலையானுக்கு விதவிதமான மலர் மாலைகளைக் தொடுத்துக் கொடுக்கும் சேவையில் ஏடுபட்டு வருகிறார்கள். முடி காணிக்கை செலுத்தும் இடத்திலும் இவர்களின் சேவை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீவாரி சேவகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வழக்கமான நாட்களை விட பிரம்மோற்சவத்தின்போது அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். எனவே அந்த நாட்களில் 24 மணி நேரமும் ஸ்ரீவாரி சேவகர்கள் பக்தர்களுக்குத் தொண்டாற்றுகிறார்கள்.
200 பேரில் தொடங்கியது
சத்ய சாய் சேவா சமிதியினரின் தொண்டை பின்பற்றி இந்த வாரி சேவா அறக்கட்டளை, 2000-மாவது ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. வெறும் 200 ஸ்ரீவாரி சேவகர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் இப்போது சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இந்தச் சேவையில் பங்காற்ற ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேவஸ்தானத்தின் 16 துறைகளில் ஸ்ரீவாரி சேவகர்கள் சேவை செய்கிறார்கள். குறிப்பாக அன்னபிரசாதம் திட்டத்தில் இவர்களின் சேவை பாராட்டுதலுக்குரியது. காய்கறி வெட்டுதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுவது என அனைத்திலுமே இவர்கள் பங்காற்றுகிறார்கள்.
எங்கிருந்தோ வந்து எங்கிருந்தெல்லாமோ வரும் முகம் தெரியாத பக்தர்களுக்காக இன்முக சேவையாற்றும் இந்த வாரி சேவகர்களின் சேவை ஏழுமலையான் சன்னிதியில் என்றென்றும் தொடரட்டும், எப்போதும் சிறக்கட்டும்!
மறுபடியும் வருவேன்!
திருமலையில் சர்வ தரிசனத்துக்கு பக்தர்களின் ஆதார் விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த பரிடால ராஜம்மா. ஸ்ரீவாரி சேவகரான இவர் தங்களது சேவை குறித்து நம்மிடம் பேசுகையில், “சார், என்னவென்று சொல்ல முடியாத ஒரு மன நிம்மதி ஏழுமலையானுக்கான இந்த சேவையில் கிடைக்குது. பெருமாளை நம்பி வரும் பக்தர்களுக்குச் செய்யும் இந்தச் சேவையை அந்த ஏழுமலையானுக்குச் செய்யும் சேவையாகவே நாங்கள் கருதுகிறோம். ஸ்ரீவாரி சேவைக்கு வருவது இதுதான் எங்களுக்கு முதல் முறை. இதற்காக எங்கள் ஊரிலிருந்து பத்துப் பேர் வந்திருக்கிறோம். 7 நாட்கள் இங்கு வாரி சேவை செய்துவிட்டு ஊருக்குத் திரும்ப இருக்கிறோம். சீக்கிரமே மறுபடியும் சேவை செய்ய வருவேன்” என்றார்.
ஆண்டு முழுவதும் சேவை செய்ய ஆசை!
விஜயநகரத்திலிருந்து வந்திருந்த அப்பல்ராஜு, “நான் நகை கடை வைத்துள்ளேன். எங்கள் குடும்பத்தில் அத்தனை பேருமே ஏழுமலையானின் தீவிர பக்தர்கள். வருடத்துக்கு 2 முறையாவது திருமலைக்கு நாங்க வந்துருவோம். அப்படி வரும்போதெல்லாம் மூன்று நாட்களாவது ஸ்ரீவாரி சேவை செய்துவிட்டு அப்புறம் ஏழுமலையானை தரிசித்துதான் ஊருக்குத் திரும்புவோம். அதுபோல இப்போதும் கடந்த 2 நாட்களாக இங்கே சேவை செய்துவருகிறேன். நாளைக்கும் சேவை இருக்கிறது. இப்படி அவ்வப்போது வந்து சேவைசெய்வதைவிட நிரந்தரமாக இங்கேயே தங்கியிருந்து ஏழுமலையான் பக்தர்களுக்கு ஆண்டு முழுவதும் ஸ்ரீவாரி சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஏழுமலையான் என்ன நினைக்கிறாரோ பார்க்கலாம்” என்றார்.
இந்துக்கள் மட்டுமே வரமுடியும்!
“தேவஸ்தானத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளிலும் ஸ்ரீவாரி சேவகர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோசாலையில் பசுக்கள் பாதுகாப்பிலும் இவர்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் மட்டுமே ஸ்ரீவாரி சேவைக்கு வரமுடியும் என்றாலும் 60 வயதைக் கடந்த முதிய
வர்கள் உடல்நலன் குன்றியவர்கள் இந்தச் சேவையில்பங்காற்ற முடியாது” என் கிறார் தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி யும் ஸ்ரீவாரி சேவா அறக்கட்டளையின் பொறுப்பாளருமான ரவி.
(முகங்கள் வரும்...)
-என்.மகேஷ்குமார்