பதறும் பதினாறு 8: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


போதைப் பழக்கம் என்றதுமே போதை மருந்து, ஊசி போன்றவைகளைத் தான் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். புகையிலை, குடி, நுகர்ச்சியின் மூலமே போதையைத் தரும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துமே போதைப் பொருட்களே.

ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் நுகர்ச்சியால் கிடைக்கிற போதைப் பழக்கத்துக்கு மிக எளிதாக ஆட்பட்டுவிடுகிறார்கள். காரணம், அவை மிக எளிதாகவும் மலிவாகவும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. தவிர அவை தவிர்க்கப்படக்கூடிய அல்லது சந்தேகப்படக்கூடிய பொருட்கள் அல்ல. அதனால் எந்தச் சிக்கலும் இல்லாமல் அவர்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். நாளடைவில் அதற்கு அடிமையாகவும் ஆகிவிடுகிறார்கள். ஓரளவு வளர்ந்த குழந்தைகள் புகையிலைப் பழக்கத்துக்கு ஆட்படுகிறார்கள். பான், குட்கா போன்றவை அதில் அடக்கம். அதற்கு அடுத்த நிலையில் புகையும் மதுவும் வருகின்றன. போதையின் இறுதிநிலைதான் போதை மருந்துப் பழக்கம்.

கணக்கெடுப்பு சொல்வதென்ன...

மற்ற போதைப் பழக்கங்களைவிட புகையிலைப் பழக்கம் வளரிளம் பருவத்தினர் மத்தியில் அதிகமாக இருக்கிறது. தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு 3-ன் போது 40 சதவீதமாக இருந்த புகையிலைப் பயன்பாடு, நான்காவது கணக்கெடுப்பின்போது 47 சதவீதமாக அதிகரித்தது. இதுவே, பெண்களின் சதவீதம் நான்கிலிருந்து ஆறாக உயர்ந்திருக்கிறது.

ஏதோ ஒரு ஊரில் எங்கோ ஒரு குழந்தை போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருப்பார்கள்; நம் வீட்டில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்ற பல பெற்றோரது நம்பிக்கையை இந்தக் கணக்கெடுப்பு முடிவுகள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நம் குழந்தைகள் இப்படியொரு பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம். சிவாவின் அம்மாவும் அப்படியொரு நிலையில்தான் இருந்தார்.

விழிப்புடன் செயல்படுவோம்

சிவா படிப்பில் முதல்வன் இல்லை. பதினோறாம் வகுப்பு படிக்கும் அவனிடம் ஆளுமைப் பண்பு இருந்தது. எதையும் திருந்தச் செய்வான். விளையாட்டில் ஆர்வம் அதிகம். இதுவரை அவன் பங்கேற்ற கால்பந்துப் போட்டிகளில் தோல்வியடைந்ததே இல்லை. ஆனால், சில மாதங்களாகக் கால்பந்து பயிற்சிக்குச் சரிவர செல்வதில்லை. வகுப்பிலும் கவனத்துடன் இருப்பதில்லை. அடுத்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்றுவிடுவோம் என்பதால் சக மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருக்க, சிவாவோ தேர்வுகளில் வழக்கத்தைவிடக் குறைவான மதிப்பெண்ணே வாங்கியிருந்தான். தன் வகுப்பு நண்பர்களுடன்கூட சரிவரப் பேசுவதில்லை, எதையும் பகிர்ந்துகொள்வதும் இல்லை. பள்ளிக்கும் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டான்.

சிவாவின் இந்த மாற்றம் அவனுடைய தமிழாசிரியருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவனைக் கவனித்துவந்தார். ஒருநாள் மதிய உணவு இடைவேளையின்போது வகுப்பில் தனியாக அமர்ந்திருந்தவனிடம் ஆசிரியர் பேசினார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசினானே தவிர எதையும் முழுமையாகச் சொல்லவில்லை சிவா. மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் சிவாவின் வீட்டுக்குச் சென்றார் ஆசிரியர். ஒரே அறை கொண்ட சிறிய வீடு அது. ஆசிரியரைப் பார்த்ததும் சிவாவின் அம்மா பதறிவிட்டார். சிவா கால்பந்து விளையாடச் சென்றிருந்ததால் அவனைப் பற்றி அவனுடைய அம்மாவிடம் ஆசிரியரால் பேசமுடிந்தது.

ஆசிரியர் பேசப் பேச, தன் மகன் போதைக்கு அடிமையாகியிருப்பதை அதிர்ந்து அந்த ஏழைத் தாயால் அழ மட்டுமே முடிந்தது. கணவனும் இல்லாத நிலையில் தனி ஆளாக நின்று மகனை வளர்க்க தான் பட்ட பாடுகள் எல்லாமே வீணாகிப்போனதாக அழுதார். பதின் பருவத்தில் சில குழந்தைகள் இப்படிப் பாதை மாறுவது இயல்புதான் என்பதை சிவாவின் அம்மாவுக்குப் புரியவைத்த ஆசிரியர், அதிலிருந்து அவனை மீட்பதன் அவசியத்தையும் உணர்த்தினார்.

விளையாட்டாய் தொடங்கிய பழக்கம்

விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிவா ஆசிரியரைப் பார்த்து அதிர்ந்தான். ஆசிரியரும் அம்மாவும் மெதுமெதுவாக கேள்விகளைக் கேட்க, அனைத்தையும் சொன்னான். சீனியர் மாணவன் ஒருவன் மூலமாகத்தான் போதை மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் சிவாவுக்கு அறிமுகமாயிருக்கிறது. ஆரம்பத்தில் மறுத்தவன், பிறகு அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டான். ஒரு கட்டத்தில், தான் தவறான பாதையில் செல்கிறோமோ என்று தோன்ற, அதை யாரிடம் சொல்வது, சொன்னால் நம்மை நல்லவிதமாக ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கத்திலும் சந்தேகத்திலும் அமைதியாகிவிட்டிருக்கிறான்.

விளையாட்டாகத் தொடங்கிய பழக்கத்தை அவனால் அத்தனை சீக்கிரம் உதறித்தள்ளவும் முடியவில்லை. இதனால் படிப்பிலும் கவனத்தைச் செலுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்த சிவாவைச் சரியாகப் புரிந்துகொண்டார் ஆசிரியர். அவனிடம் பக்குவமாகப் பேசி, அருகில் இருந்த அரசு மருத்துவ மனையின் உளவியல் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். தொடர்ச்சியாக ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றதில் எதிர்பார்த்ததைவிட விரைவாகவே தேறிவந்தான் சிவா. காரணம், அவனுடைய அம்மாவும் ஆசிரியரும் அவன் மேல் வைத்த நம்பிக்கை.

சிவாவுக்குக் கிடைத்ததைப் போன்ற ஆசிரியரும் வழிகாட்டலும் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? ஆசிரியர் கவனிக்கவில்லையென்றால் வீட்டில் இருக்கிறவர்களுக்குத் தங்கள் மகன் குறித்து எப்படித் தெரியும். “இப்படியொரு சூழலில் பெற்றோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம். “குழந்தைகள் போதைக்கு அடிமையாவதைப் பல நேரம் நம்மால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. அவர்கள் பள்ளிக்குச் செல்வது குறையும். மாதம் ஒரு முறையாவது பள்ளிக்குச் சென்று நம் குழந்தைகளைப் பற்றி விசாரித்தால் அவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துவிடலாம். படிப்பிலும் பின்னடைவு ஏற்படும். சில குழந்தைகளின் ஆளுமைப் பண்பில் மாற்றம் ஏற்படும். பொறுப்புள்ள குழந்தைகளாக இருந்தால் அடிக்கடி கடமையிலிருந்து தவறுவார்கள் இவையெல்லாம் ஆரம்பகட்ட அறிகுறிகள்” என்கிறார் அவர்.

மனத்தடையை உடைப்போம்

சிவாவின் விஷயத்தில் ஒரு இடத்தை நாம் சரியாகப் புரிந்துகொண்டால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகளை மிக எளிதாக மீட்கலாம். போதைப் பழக்கம் குறித்து நாம் சொன்னால் நம்மைத் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற மனத்தடைதான் அந்தப் பழக்கத்தைப் பெரியவர்களிடம் சொல்லாமல் சிவா மறைக்க முக்கியக் காரணம். எனவே, இதுபோன்ற பழக்கம் இருப்பதைத் தெரிந்துகொண்டால் பெற்றோர் நம்மைத் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

ஆர்வத்தால் உந்தப்பட்டுத்தான் பெரும்பாலான குழந்தைகள் போதையை நோக்கிச் செல்கிறார்கள். பலருக்கு அந்த முதல் அனுபவம் விரும்பத்தக்கதாகவும் நிறைவாகவும் இருக்காது. ஏதோவொரு அசௌகரியம் இருக்கும். அதனாலேயே ஒரே நாளுடன் அதை நிறுத்திக்கொள்கிறவர்கள் உண்டு. இன்னும் சிலர் நண்பர்களின் வற்புறுத்தலால் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் தொடர்ந்து அந்தச் செயலைச் செய்து இறுதியில் அதற்கு அடிமையாகிவிடுவதும் நடக்கிறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் எளிதாகக் கிடைப்பதால் பலரும் மதுவுக்கு எளிதாக அடிமையாகிறார்கள். தவிர, நம் வீட்டிலோ, உறவினர் வீடுகளிலோ, அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கிறவர்களோ குடிப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்க்கிற குழந்தைகள், பெரியவர்களே இதைச் செய்கிறார்கள், அப்படியென்றால் அதில் தவறேதும் இல்லை என்ற நினைப்பிலும் குடிப் பழக்கத்துக்கு ஆளாகலாம். எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் அதைத் தொடரலாம்.

அக்கறையோடு இருப்போம்

குடிப்பதால் இன்பம் கிடைக்கிறது என்ற நினைப்பில் பல பதின் பருவக் குழந்தைகள் குடிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் சிலர் கவலையிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம் என்பதைக் காரணமாக வைத்துக் குடிப்பார்கள். உண்மையில் இரண்டுமே நடப்பதில்லை. மதுவுக்கு அவர்கள் மூளை பழகியிருக்கும். அது கிடைக்காதபோது எரிச்சல், தூக்கமின்மை, நடுக்கம், பதற்றம் போன்றவை ஏற்பட்டு அந்த உந்துதலில் அவர்கள் தொடர்ந்து குடிக்கத் தொடங்குவார்கள். இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, மதுப் பழக்கத்துக்கு ஆளான பதின் பருவக் குழந்தைகளுக்கும்தான்.

“குடிக்கிறவர்களையும் போதைப்பழக்கத்துக்கு ஆளானவர்களையும் இந்தச் சமூகம் அணுகுகிற விதம்தான் பல மாணவர்களைப் பிரச்சினைகளை வெளியே சொல்லவிடாமல் தடுக்கிறது. ஒரு மாணவன், குடியிலிருந்தோ போதைப் பழக்கத்திலிருந்தோ வெளியே வர நினைத்தால் அவனைப் பெற்றோரும் ஆசிரியரும் எந்த முன்முடிவும் இல்லாமல் அணுக வேண்டும். அவனைக் குற்றவாளியைப் போல நடத்தக் கூடாது. மனம்விட்டுப் பேச நாம் தயாராக இருக்கிறபோதுதான் குழந்தைகளும் தங்கள் தரப்பைத் தயக்கமின்றிச் சொல்வார்கள்” என்று சொல்கிறார் கார்த்திக் தெய்வநாயகம்.

ஓரளவு படித்த பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தங்கள் குழந்தைகளை ஓரளவு காத்துவிடுகின்றனர் அல்லது மீட்டுவிடுகின்றனர். வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை மீட்கப் பெரும்பாலும் யாரும் இருப்பதில்லை. அதனால் இது குறித்த விழிப்புணர்வைப் பள்ளிகளில் ஏற்படுத்தலாம். அரசு மருத்துவமனைகள் சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தலாம். தங்கள் குழந்தையை மட்டும் கவனிக்காமல் அவர்களுடைய நண்பர்கள் குறித்தும் பெற்றோர் ஓரளவு அக்கறை காட்டலாம். இந்த அணுகுமுறைகள், குழந்தைகளைச் சிக்கலின் தீவிரத்திலிருந்து மீட்கும்.

(நிஜம் அறிவோம்…)

-பிருந்தா சீனிவாசன்

x