நானொரு மேடைக் காதலன் - 8


நாகர்கோவில் கோட்டாறில் நடந்த ஈழத்து உறவுகளின் உரிமை காக்க கலைஞர் பங்கேற்ற கூட்டத்தில், கலைஞர் எனப் பெயரை உச்சரித்து அந்த உரை, முரசொலியிலும் தினகரனிலும் செய்தியாக வந்த நாள். என் பயணத்தில் அதுதான் திருநாள். இனி ஊரில் இருப்பது உசிதமல்ல; உடனே சென்னை புறப்பட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன். எனது மேடைக் காதல் கைகூட வீடு ஏற்ற இடமல்ல; வீதிக்குப் போக வேண்டியதுதான் என்று தீர்மானித்தேன். என் பெயரைச் சுட்டி கலைஞர் பேசிய பேச்சு பிரசுரமான முரசொலியை எடுத்துக்கொண்டு யாரிடத்தும் சொல்லிக்கொள்ளாமல் விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுதில் கனத்த இதயத்துடன் கண்ணீர் கசிந்தபடி வீட்டை விட்டு வெளியேறி சென்னை பயணமானேன். 

சென்னை வந்த நான் திமுக அமைப்புச் செயலாளர் நீல. நாராயணன் அவர்களைச் சந்தித்து குமரி மாவட் டத்தில் பேசிய நூற்றுக்கு மேற்பட்ட கூட்டங்களின் விளம்பரத் தாள்களை அவர் கையில் கொடுத்தேன்.  தலைமைக் கழகச் சொற்பொழிவாளராக ஆக நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும் என்று வணங்கி கேட்டுக் கொண்டேன். ‘பிரமாதமாக இருக்கிறது உன் பேச்சு என்று எனக்கு வருகிற தகவல்கள் என்னை மகிழ்ச்சியில்  ஆழ்த்தியது. உன்னைச் சந்திக்க நானே ஆர்வமாக இருந்தேன்’ என்று சொல்லி என் கரம் பற்றி என்னைக் கொள்கை பரப்புச் செயலாளர் செ. கந்தப்பனிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து, ‘ஒரு பெரிய பேச்சாளனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்றார். ‘பேச்சாளரை எல்லாம் உருவாக்க முடியாது சம்பத். உருவாகி வர வேண்டும்’ என்றார். அந்த வார்த்தையே என்னில் கருவாகி உருவாகி வருவதற்குக் காரணமாக அமைந்தது என்பதை சொல்லத்தான் வேண்டும். 

அன்றே சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியும் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழியும் கலந்துகொண்ட கூட்டத்தில் எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது. செளகார் பேட்டையில் நடந்த அந்தக் கூட்டத்தில் பரிதி இளம்வழுதியின் பரிந்துரை யில் நானும் பேசினேன். அந்த ஒரு மேடையில் பேசிய பேச்சே தலைநகர் சென்னையில் பல மேடைகளில் பேசுகிற வாய்ப்பை இயல்பாகவே பெற துணை நின்றது. மயிலை மாங்கொல்லைத் திடலில் அண் ணன் துரைமுருகன் கலந்துகொண்ட கூட்டத்திலும், சிந்தாதிரிப் பேட்டையில் அண்ணன் இரகுமான்கான் கலந்துகொண்ட கூட்டத்திலும்,  வியாசர்பாடியில் கவிஞர் குடியரசு கலந்து கொண்ட கூட்டத்திலும், கோட்டூர்புரத்தில் க. சுப்பு கலந்துகொண்ட கூட்டத்திலும் பேசினேன். இந்தக் கூட்டங்களில் எல்லாம் உரை முழக்கம் செய்து திமுக கழகத்தினர் மத்தியில் எனக்கோர் தடத்தை யும் இடத்தையும் பெற்றது நான் பெற்ற பேறு. 

அந்த  நேரத்தில்தான் ஆதிக்க இந்தியின் அத்து மீறல், அன்றாட நடவடிக்கைகள் ஆகி விட்டன. மத்திய - மாநில அரசுக்கான கடிதப் பரிவர்த்தனைகள் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று  மத்திய அரசு வற்புறுத்தியது. மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் இந்திமய மாக்கப்பட்டுத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. அன்னைத் தமிழை அலட்சி யப்படுத்தி அவமரியாதை செய்த ஆதிக்கத்துக் கெதிராக திமுக போர் முரசு கொட்டியது. மத்திய அரசின் இந்த ஈனச் செயலைக் கண்டித்து ஐப்பசி மாதத்து அடை மழையாய் திமுக-வின் சார்பில் நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தேறின. விடிய விடிய நடந்த அந்தக் கூட்டங்களை மத்திய - மாநில அரசுகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாதது திமுக-வைக் கொதிநிலைக்குத் தள்ளியது. கோபத்தின் உச்சிக்கே சென்றது கழகம்.

கோதி குழல் முடித்து கொல்லை வழிவரும் ஆதிக்க அணியின் ஆரக் கால்களை வெட்டிச் சாய்ப்பதற்கு அடலேறுகளை அணி திரட்ட இந்தி எதிர்ப்புத் திறந்த வெளி மாநாடு கோவையில் சிதம்பரம் பூங்காவில் நடைபெறும் என்று கலை ஞர் அறிவித்தார். அந்த மாநாட்டில் உரையாற்ற வாய்ப்புக் கேட்டு நாஞ்சிலாரை அணுகினேன். பேராசிரியரின் இல்லம் சென்று கோரிக்கை வைத்தேன். உத்தரவாதமான பதில் கிடைக்காத நிலையில், தலைவர் கலைஞர் அவர்களுக்கு, அன்பகம் முகவரிக்குக் கடிதம் எழுதினேன்.  

‘அச்சம் நீங்கிய தமிழினத்தின் ஆணிவேராய் மிச்சம் இருக்கும் தமிழர்களின் கடைசி நம்பிக்கை யாய் தமிழர்க்கு வாய்த்த தன்னிகரிலாத் தலைவர் அவர்களுக்கு கழக மேடையில் நடை பயிலும் சம்பத் எழுதுவது: வணக்கங்கள் பல. வாழி நலம் சூழ. காலடிக்குக் கீழே காணாமல் போன காலங்களைத் தங்கள் காலடியில் தேடுகிற கடைசித் தொண்டன் நான். கழக மேடைகளில் உரையாற்றுவதைத் தவிர வாழ்க்கையில் வேறு நோக்கமில்லை. தலைநகர் சென்னையில் தொடர்ந்து உரையாற்றி வருகிற எனக்கு வேறெங் கும் போக அறிமுகம் இல்லை. கொழுப்பெடுத்த இந்தியின் கொட்டத்தை அடக்க பொங்கு தமிழுக்குத் தலை தந்த குமணன் உலவிய கோவையில் நவம்பர் 8, 9 -ல் நடக்கும் இருநாள் திறந்தவெளி மாநாட்டில் எனக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்கள். அப்போது உன் மருங்கு நெருங்கி வாய்ப்புத் தா என்று கேட்க வாய்ப்பில்லை. அதனால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் ஆரூர்ச் சோழனே’ என்றொரு மடலைக் கலைஞருக்கு எழுதினேன்.

ஆழ்வார்களின் அமுதத் தமிழைக் கடன் வாங்கித்தான் எழுதினேன். கலைஞர் அதில் ஆழ் வார் எனக் கனவிலும் கருதவில்லை. கலைஞரின் ஆழமான வாசிப்பு என்னைத் திகைக்க வைத்தது. மாநாட்டில் படத்திறப்பாளர் வரிசையில் பாவேந்தர் படத்தைத் திறந்து வைக்கிற வாய்ப்பைத் தந்தார் கலைஞர். முரசொலியில் செய்தி பார்த்தபோது என்னை எனக்கே நம்ப முடியவில்லை. சு. இராசரத்தினம் எழுதிய ‘தமிழீழம் நாடும் அரசும்’ என்ற புத்தகத்தை வாங்கி ‘உன் கண்ணில் நான் விழித்தேன்’ என்று எழுதி கலைஞர் கையில் கொடுத்தேன். பேராசிரியரும் நாஞ்சிலாரும் உடனிருந்தார்கள். பேராசிரியர் ‘சமய இலக்கியங்களை எல்லாம் படிப்பியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘கடிதம் சூப்பர்’ என்றார் நாஞ்சிலார். ‘போய் வருகிறேன்’ என்று தலை குனிந்தேன். கலைஞர் தோளைத் தட்டினார். மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்புகள். 

கடந்த கால  கழக மாநாடுகளில் பாவேந்தர் படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர்களின் உரைகளை முரசொலியில் தேடிப் படித்தேன். குறிப்பிட்ட சில கவிதைகளைத் திரும்பத் திரும்ப உரையாளர்கள் பயன்படுத்தியிருந்தது எனக்கு நெருடலாக இருந்தது. பாரதிதாசனை இப்படி யாரும் பேச முடியாது என்று அனைவரும் சொல்லத்தகுந்த வகையில் பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டேன். மகத்தான அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத்
தலைவர் அண்ணன் மு. கண்ணப்பன். மேடை யில் வீற்றிருந்த தலைவர்கள் ஆசிரியர் கி. வீர மணி, மதுரை ஆதீனகர்த்தர், நாவலர் சோம சுந்தர பாரதியாரின் மகன் கிருஷ்ணசாமி பாரதி 

ஐ. ஏ. எஸ். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு பாவேந்தர் படத்தைத் திறந்து வைத்தேன். 
“தந்தை பெரியார் தத்துவக் கப்பலை தமிழ் கொண்டு நடத்திச் சென்ற பாரதிதாசன் கவிதைகள் விடுதலை விரும்பிகளின் சங்க நாதம். மண்ணுரிமையையும் பெண்ணுரிமையையும் மீட்டெடுக்க விரும்புவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தகுதி பாரதிதாசன் கவிதைகளுக்கு உண்டு. முடைநாற்றம் வீசுகிற மூட நம்பிக்கைக் கள்ளியை வேரோடும் தூரோடும் வெட்டிச் சாய்க்கிற ஆயுதம் பாரதிதாசன் கவிதைகள். காலத்தால் கைவிடப்பட்ட கைம்பெண்களின் கவலையைப் போக்குகின்ற சஞ்சீவி மருந்து பாரதிதாசன் கவிதைகள். உருண்டுகொண்டு இருக்கிற உலகப் பந்தை உள்ளங்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு வாளாகவும் தோளாகவும் வாய்த்தவை பாரதி தாசன் கவிதைகள். காலத் தீயில் கருகிப்போகாத இலட்சியங்களை வென்றெடுக்கக் களம் காணும் காளைகளுக்கு வீரத்தையும் சாரத்தையும் தரவல்லது பாரதிதாசன் கவிதைகள். 

அழகை ஆராதிப்பவனுக்கு அமுதத்தையும் காதலைக் கொண்டாடியவனுக்கு சுகத்தையும் வாரி வழங்கியது பாரதிதாசன் கவிதைகள். முக்காடு போட்டுக்கொண்டு தமிழால் முடியாது என்று முனகியவர்களுக்குத் தமிழால்தான் முடியும் விடியும் என்று சாதித்தவன் பாரதி தாசன். பாவேந்தன் பாட்டைக் காது கொடுத்துக் கேட்டால் பூகம்ப அதிர்வுகளை, எரிமலையின் சீற்றத்தை, புரட்சியின் பூபாளத்தை, பேரிகையின் முழக்கத்தை, முரசின் பேரொலியை ஒரு சேரக் கேட்கலாம். குப்பனையும் சுப்பனையும் தன் கவிதையால் கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு சேர்த்தான். ஆண்டாண்டு காலம் அவமானப்படுத்தப்பட்ட தென் திசை இராவண னையும் இரணியனையும் தனது கவிதையால் ஆகாயத்துக்குத் தூக்கிச் சென்றான். 

மேனாட்டுக் கவிஞர்கள் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த், வால்ட் விட்மன், ஷெல்லி ஆகியவர் களின் தோளில் உட்காருகிற தகுதி தமிழில் பாரதிதாசனுக்கு மட்டுமே உண்டு. உரிமைச் செம்பயிருக்கு வேராக இருக்கும் தமிழ், இள மைக்குப் பால்; புலவர்க்கு வேல்; முயர்வுக்கு வான்; அசதிக்குத் தேன்; அறிவுக்குத் தோள்; வயிரத்தின் வாள்; பிறவிக்குத் தாய், உளமுற்ற தீ என்றான் பாரதி தாசன். தீயின் மீதே தீயவர்கள் கை வைக்கத் துணிந்துவிட்டார்கள். வழி வழி வந்த மறத்தனம் மரத்துப் போய்விட்டது என்று மனப்பால் குடிக்கிறார்கள். தமிழை அழித்து விட்டால் தமிழினத்தை அழித்து விடலாம் என்று தப்புத்தாளம் போடுகிறார்கள். தகிடுதத்தம் செய்கிறார்கள். இந்தி எதிர்ப்பு என்பது இன்பத் தமிழகத்தைப் பொறுத்தவரை நீறு பூத்த நெருப்பு என்பதைக் கூறு கெட்டவர்களுக்குப் புரிகிற மொழியில் புரிய வையுங்கள் தலைவர் அவர்களே...

ஈரேழு வயதில் ஆரூர் வீதியில் தமிழ்க்கொடி ஏந்தி ‘இந்திக்கு இங்கே ஆதிக்கமாம். அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்’ என்று எக்காள முரசு கொட்டிய தலைவர் அவர்களே! சரித்திரம் திரும்புகிறது. கட்டளை இடுங்கள். காலத்தின் கைப்பிடித்து காற்றில் நடக்கும் தீரர்கள் உங்கள் பின்னால். தீயின் நாக்குகளைத் தீண்டிச் சுவைக்கும் ஈகர்கள் உங்கள் பின்னால். காட்டாற்று வெள்ளத்தில் களமாடத் துடிக்கும் வாலிபர்கள் உங்கள் பின்னால். கட்டளையிடுங்கள். சமருக்கும் தயார்... சாவுக்கும் தயார்’’ கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேனடை போல் திரண்டிருந்த பெருங்கூட்டம் செய்த ஆரவாரத்தில் நானே விக்கி ஒரு கணம் இமை மூடாமல் அசையாமல் நின்றேன். கன்னத்தில் கை வைத்து வைத்த விழி அசையாமல் நான் பேசும்போது தலைவரும் மேடையில் இருந்த அனைவரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்களாம். சொன்னார்கள் நண்பர்கள்.

“பயிலுறும் அண்ணன் தம்பி- அக்கம்
பக்கத் துறவியின் முறையார்,
சந்ததம் மறவாத் தந்தை,
குயில் போற் பேசிடும் மனையாள்- அன்பைக் 
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம்- தமிழ் என்
அறிவிலில் உறைதல் கண்டீர்!

மேடையில் வீற்றிருக்கும் தீபங்களே. விடை பெறுகிறேன்; எதிரில் திரண்டிருக்கும் தீப்பந்தங்களே... விடைபெறுகிறேன்’’ என்று சொல்லி விடை பெற்று  என் இருக்கையில் அமர்ந்தேன். அனைவரது பார்வையும் இந்தச் சின்னவன் மீது. கண்களாலேயே கட்டளை இடுகிற கண்டிப்புக்குப் பெயர் போன அண்ணன் மு. கண்ணப்பன், ‘எப்போது ஊருக்குப் போகிறாய்’ என்றார். ‘இன்றிரவே’ என்றேன்.  ‘இன்று  தங்கிவிட்டு நாளை மாவட்டக் கழக அலுவலகத்தில் என்னைப் பார்த்துவிட்டுப் போ’ என்றார். ‘சரி’ என்றேன். அடுத்த நாள் மாவட்டக்கழகம் சென்றேன்.  ‘பேச்சு ரொம்ப ரொம்பப் பிரமாதம். இந்த பாணி திமுக மேடைக்குப் புதிது’ என்று சொல்லி பாராட்டிவிட்டு,  ‘அடுத்த மாதம் 15 நாட்கள் கோவை மாவட்டத்துக்குத் தேதி தா’ என்று வாங்கிக்கொண்டார். மேடை என்னை இனி வாழவைக்கும் என்று நம்பிய நாள் அந்த நாள். அந்த அண்ணன் கண்ணப்பனுக்கு பூம்புகாரில் இருந்து அழகான நந்தி வாங்கி ‘என் கண்களைத் திறந்த கண்ணப்ப அண்ணனுக்கு’ என்று எழுதி நன்றியுடன் கொடுத்தேன்.

(இன்னும் பேசுவேன்...)

x