வட்டியை வெறுக்கும் ஜன்சேவா வங்கி!- அறவழியில் பணம் செய்வோம்...


பொதுத் துறை வங்கிகளே வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கும் இந்தக் காலத்தில் வட்டியில்லாமல் கடன் கொடுக்கவும், தொழில் நஷ்டமானால், வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் ஒரு வங்கி இருந்தால் எப்படி இருக்கும்?

‘வட்டி வாங்குவது மனித குலத்துக்கு எதிரானது என்பது இஸ்லாத்தின் கொள்கையாக இருந்தாலும் அதெல்லாம் இந்தக் காலத்துக்கு சரிப்பட்டு வருமா என்று கேட்பவர்கள்தான் நிறைய! ஆனால், வட்டி வாங்காமலும் கடன் கொடுக்க முடியும் என்று நீரூபித்துக்கொண்டிருக்கிறது ‘ஜன்சேவா வங்கி’. அதாவது மக்கள் சேவை வங்கி. இந்திய அளவில் சில இஸ்லாமியர்கள் சேர்ந்து உருவாக்கிய வங்கித்திட்டம் இது. இங்கு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல... ஏழைப்பட்ட மனிதர்கள் அனைவருக்கும் வட்டியே இல்லாமல் கடன் தருகிறார்கள். அரபு நாடுகளில் இப்படியான வங்கிகள் நிறைய இருக்கின்றன என்றாலும் இந்தியாவுக்கு இது புதிது!
அண்மையில் நாகர்கோவிலில் ‘ஜன்சேவா வங்கி’யின் முக்கிய நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் நடந்தது. அங்கு வந்திருந்த ஜன்சேவா திட்டத்தின் தேசிய துணைத்தலைவர் அகமதுமீரானிடம் பேசினோம். “மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர் ரகமத்துல்லாவும் அவரது நண்பர்களும் சேர்ந்து 2011-ல் ஜன்சேவா வங்கியை ஆரம்பித்தனர். இது கூட்டுறவு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இதில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே கடன் பெறமுடியும்.

ஜன்சேவா மூலம் நாங்கள் ஏழைகளுக்கு பல வகையிலும் பொருளாதார உதவிகளை அளித்து வருகிறோம். அதில் முக்கியமானது வட்டியில்லாத நிதி உதவித் திட்டம். ஏழை ஒருவர் அரிசிக்கடை வைக்க விரும்புகிறார் என்றால் நாங்களே அவருக்குக் கடை பார்த்து, மொத்தமாக அரிசியைக் கொள்முதல் செய்து அவரிடம் கொடுத்துவிடுவோம். நேரடிக் கொள்முதல் விலையிலிருந்து ஒரு சிறிய அளவு தொகையைக் கூட்டி அவருக்குக் கொடுப்போம். அந்த லாபத்தில் விற்றாலே அவருக்கும் அதிக லாபம் கிடைக்கும். அதேநேரம், அரிசிக்காகக் கூடுதலாக நாங்கள் அவரிடம் வசூலித்த தொகையிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவரது கடனையும் கழித்துக் கொண்டே வருவோம். இதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வங்கியின் லாபக் கணக்கிற்கும் வங்கியின் நிர்வாகச் செலவுக்கும் போகும். பொருளாதாரத்தில் வரும் உறங்கும் கூட்டாளி, உழைக்கும் கூட்டாளி தத்துவத்தின் நீட்சிதான் இது. அதேநேரத்தில், கடன் பெற்றவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால், பங்குதாரரான நாங்களே அதைத் தாங்கிக் கொள்வோம். கடனை அவர் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜன்சேவா அமைப்பின் இயக்குநர் (நிதி) இப்னுசவுத், “எங்களிடம் ‘இன்வெஸ்மென்ட் டெப்பாசிட் திட்டம்’ கூட இருக்கிறது. கருணை உள்ளம் கொண்டவர்கள் அதிலும் இணைந்து சேவை செய்யலாம். அதன் பெயரே ‘அறவழியில் பணம் செய்வோம்’ என்பதுதான். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையில் இருந்துதான் தொழில் செய்யவும், வாகனம் வாங்கவும் கடன்களை வழங்குகிறோம். அதில், கடன் பெற்றவருக்கு நஷ்டம் ஏற்பட்டால், எங்களிடமுள்ள முதலீட்டுத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும். முதலீட்டாளர்களுக்கு வங்கியின் நிகர லாபத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத் தொகையும் கொடுப்போம்” என்றார்.

x