இலங்கைக்குள் இந்துத்துவா இறக்குமதி செய்யப்படுகிறது!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் பேட்டி


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சமீபத்தில் இந்தியாவுக்கு வருகைதந்தது. இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், இலங்கையின் நகர திட்டமிடல், குடிநீர் வடிகால் வாரிய அமைச்சருமான ரவுப் ஹக்கீமும் இருந்தார்.  ’காமதேனு’ இதழுக்காக அவரைச் சந்தித்தேன். அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து...

மோடி ஆட்சியில் இந்திய - இலங்கை உறவு தற்போது எப்படி உள்ளது?

இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு இலங்கையுடனான உறவு, பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. இலங்கையுடனான உறவை நல்ல முறையில் பேண வேண்டும் என்ற ஆர்வம் தொடர்கிறது. குறிப்பாக, இனப்பிரச்சினையில் சகல சமூகங்களையும் திருப்திபடுத்துவதற்கு இந்திய அரசு நாட்டம் கொண்டிருக்கிறது. வட கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாட்டுக்கும் ஆர்வம் இருக்கிறது. இந்த விடயங்களில், இலங்கையில் ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு ஏற்றவாறு செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. 

இந்தியாவுடன் 1987-ல் இடப்பட்ட ஒப்பந்தத்தை மீற முடியாத சூழல் இலங்கை அரசுக்கு இருந்துவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் வட கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும் என்பதும் ஒன்று. இதை இலங்கையில் ஆட்சிக்கு வந்த சில கட்சிகள் போதுமான அளவுக்குச் செய்யாதபோதெல்லாம், இந்திய அரசு ராஜதந்திர ரீதியில் ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச சபைகளில் வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், இலங்கை அரசுக்குப் பொருளாதார ரீதியாக உதவிசெய்தும் வந்திருக்கிறது. எனினும், யுத்தத்தின்போதும், அதன் பிறகும் மக்களின் மறுகுடியேற்றம் சம்பந்தமான விஷயங்களில் இந்திய அரசு காட்டிவரும் கரிசனையையும் மறுப்பதற்கில்லை.

x