தமிழகத்தின் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் பலர் மீது எதிர்க்கட்சியான திமுக, சரம் சரமாக ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருவதும், அவற்றையே மனுக்களாக்கி வழக்குகள் தொடுப்பதும், வானிலை அறிக்கை போல அன்றாடச் செய்தி ஆகிவிட்டது. ‘எதிர்க்கட்சிகள் என்றாலே இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்’ என்று இதைப் புறந்தள்ளிவிட்டுப் போக முடியவில்லை. சட்ட விரோத ‘குட்கா’ விவகாரம் உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக வருமானவரித் துறையும் சிபிஐ-யும் சோதனை நடத்தி ஆதாரங்கள் கைப்பற்றல், கைது நடவடிக்கைகள் என விவகாரம் வளர்ந்துகொண்டே போகிறது.
அதிலும் குறிப்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தும் வண்ணம் வருமானவரித் துறையும் சிபிஐ-யும் ஏராளமான ஆதாரங்களைத் திரட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. ஆனால், இத்தனை நடந்த பிறகும் ‘சட்டப்படியும் அரசியல் ரீதியாகவும் இவற்றையெல்லாம் எதிர்கொள்வேன்’ என்ற ரீதியிலான விஜயபாஸ்கரின் அறிக்கையைப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது!
அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார். நற்பெயர் ஒன்றையே தன் பொதுவாழ்க்கையின் சொத்தாகக் கருதிப் பதவியைத் தூக்கி எறிந்ததால்தான், அவர் இன்றும் மக்கள் மனதில் அகலாமல் வாழ்கிறார். இதேபோல், தங்களை நோக்கிக் குற்றம் சாட்டி ஒற்றை விரல் நீண்டதுமே, துளியும் தாமதிக்காமல் பதவி விலகிய கண்ணியமான அரசியல் தலைவர்கள் இந்திய அரசியல் வரலாற்றில் இன்னும் பலரும் உண்டு.
அந்த அளவுக்கெல்லாம், குற்றச்சாட்டின் நிழல் தங்களைத் தொடுவதற்குக்கூட இடம் கொடுக்காமல், எடுத்த எடுப்பிலேயே பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, நிராயுதபாணிகளாகச் சட்டத்தைச் சந்திக்கும் துணிச்சலை இன்றைய அரசியல்வாதிகளிடம் மக்கள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், அடிமேல் அடிவாங்கி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கிய பிறகும் ‘வழக்குகளைச் சட்டப்படி சந்திப்பேன்’ என்று அறிக்கை ஜாலம் செய்துகொண்டே அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ‘துணிவு’ அல்ல... ‘அரசியல் இழிவு!’