பொள்ளாச்சி ஆனைமலையைச் சேர்ந்தவர் கவிஞர் ச.பிரியா. ‘ஓவியங்கள் வழியும் தூரிகை’ என்ற தலைப்பிலான கவிதை நூலுக்கும் சொந்தக்காரர். கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி உள்ளிட்ட இதழ்களிலும், புன்னகை, கருந்துளை உள்ளிட்ட சிற்றிதழ்களிலும் ஏராளமான கவிதைளை எழுதிக் குவித்துள்ளார். த.மு.எ.க.ச-தின் வளரும் படைப்பாளர் விருது, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நமது கவிஞர் விருது, மீரா விருது என விருதுகளையும் குவித்துள்ள பிரியாவுக்கு பிடித்தவை பத்து இங்கே…
ஆளுமை: கர்மவீரர் காமராசர். தன்னலம் கருதாமல் நேர்மை, உழைப்பு, எளிமை இந்த மூன்றையும் உயிர் மூச்சாய்க் கொண்டு செயலாற்றிய பெருந்தலைவர் அவர். அதனால்தான் ஏராளமான அணைக்கட்டுகளையும், பள்ளிக் கூடங்களையும் உருவாக்கிய அவரது ஆளுமைத்திறனைத் தலைமுறைகள் கடந்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
கதை: எர்னஸ்டோ ஹெமிங்வேயின் ‘தி ஓல்டு மேன் அண்ட் தி ஸீ’, ஜெயகாந்தனின் ‘பொம்மைகள்’, சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்’.
ஊர்: எப்போதுமே வற்றாத ஆறு, பசுமை போர்த்திய மரங்கள், வயல்வெளிகள் என மொத்த இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்ட ஆனைமலை. நான் வசிக்கும் இடமும் அதுதான் என்பதும் கூடுதல் காரணம்.
தலம்: மனித வாழ்வே மரணத்தை நோக்கிய பயணம்தான் என்பதை அழுத்தமாக உணர்த்தும் கங்கை நதி.