சொந்தங்களைத் திரட்டிய அமைச்சர்!


சொந்தங்களைத் திரட்டிய அமைச்சர்!

சென்னையிலுள்ள தனது வீட்டில் சிபிஐ நுழைந்ததுமே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான இலுப்பூருக்குப் போன்களைப் போட்டாராம் அமைச்சர் விஜயபாஸ்கர். கடந்த முறை வருமானவரித்துறையினர் ரெய்டுக்கு வந்தபோது இங்குதான் சில முக்கிய ஆவணங்களும் கரன்சிகளும் சிக்கின! இம்முறை, ஊரிலுள்ள தனது சொந்தபந்தங்களுக்குப் போனைப் போட்டு அமைச்சர் அலர்ட் கொடுக்க... அடுத்த சில நிமிடங்களில் சுமார் இருநூறு முந்நூறு பேர் அமைச்சர் வீட்டில் கூடி
அனைத்தையும் சரிசெய்தார்களாம். எதுக்கும் இருக்கட்டுமே என்று அவர்கள் அத்தனை பேரையும் மாலை 6 மணி வரைக்கும் தமது வீட்டிலேயே இருக்கச் சொன்னாராம் அமைச்சர். சிபிஐ அங்கு வரப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பின்னரே அத்தனை பேரும் அங்கிருந்து கலைந்தார்களாம். அவர்களுக்குத் தேவையான
மதிய உணவு உள்ளிட்ட ‘அனைத்து’ ஏற்பாடுகளையும் அமைச்சரின் ஆதரவு வட்டம் அமர்க்களமாய் செய்து கொடுத்ததாம்!

ஒரத்தநாட்டில் டிடிவி சேனல்!

அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் ஒரத்தநாடு. அங்கு அவரை செல்லாக்காசாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் தினகரன், வைத்தியின் ஆதரவாளர்களை எல்லாம் தன் பக்கம் வளைத்து வருகிறார். ஒருகாலத்தில் வைத்திக்கு எல்லாமுமாக இருந்தவர் மா.சேகர். இப்போது இவர்தான் தஞ்சை மாநகர் மாவட்ட அமமுக செயலாளர். இழுப்பு வேலைகளைச் செய்து இம்சையைக் கூட்டுவது போதென்று இப்போது ஒரத்தநாட்டிலேயே ‘டிடிவி சேனல்’ என்ற சேனல் ஒன்றையும் தொடங்கி தொகுதி முழுக்க தினகரன் புகழ்பாடி வைத்தியை வம்பிழுக்கத் தயாராகி வருகிறது தினகரன் கோஷ்டி.

x