என்றென்றும் ஏழுமலையான்! - 7: ஏழுமலையான் சன்னதியில் சவரத் தொழிலாளர்களின் சமரசமில்லா சேவை


திருமலை திருப்பதிக்கு வருபவர்களில் அநேகம் பேர் கட்டாயம் முடிக் காணிக்கை தந்துவிட்டுப் போவார்கள். இப்படி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை செலுத்தும் பழக்கம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் இருந்தே இருப்பதாகக் கல்வெட்டுகள் சொல்கின்றன. அந்தக் காலத்திலிருந்தே திருமலையில் சவரத் தொழிலாளர்களும் பரம்பரை, பரம்பரையாகத் தொழில்செய்து ஏழுமலையானுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

மன்னர் தந்த மரியாதை

16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களின் கட்டுப்பாட்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் இருந்தது. திருப்பதி அடுத்துள்ள சந்திரகிரி பகுதியில் அமைந்திருந்த கோட்டையில்தான் அவ்வப்போது விஜயநகர மன்னர்கள் தங்குவது வழக்கம். 16-ம் நூற்றாண்டில், கிருஷ்ணதேவராயர் வம்சத்தைச் சேர்ந்த மூன்றாம் ரங்க தேவ தேவ நிவாச மகா தேவராயுலு எனும் மன்னர் ஆண்டு வந்தார். இவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டுள்ளது. அந்தக் காலத்தில், நாவிதர் குலத்தைச் சேர்ந்த சிலர் மருத்துவ தொழிலும் பார்த்து வந்தனர். அவர்களை ‘மருத்துவர்’ என அழைக்கும் பழக்கமும் இருந்தது. இந்நிலையில், நாவிதர் குலத்தைச் சேர்ந்த பந்துலுகாரி சஞ்சீவுலு எனும் மருத்துவர், சுவாமியை தரிசிக்க கால் நடையாக திருப்பதிக்கு வந்தார். அக்காலத்தில், தற்போதுள்ள வாரி மெட்டு பகுதி மட்டுமே மலைப்பாதையாக இருந்தது. இதனால், வாரி மெட்டு பகுதியில் அவர் இரவு தங்கினார். அப்போது, அரசருக்கு தீராத தலைவலி உள்ள விஷயம் தெரிந்து அவரைக் காண சந்திரகிரி செல்கிறார் சஞ்சீவுலு. அரசரிடம் தான் ஒரு மருத்துவர் எனக் கூறி, அவருக்கு வைத்தியம் பார்த்து தலைவலியைக் குணப்படுத்துகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அரசர், சஞ்சீவுலுவிடம், “என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்” என்றார்.

அதற்கு, “அரசே, நான் என்ன பெரிதாகக் கேட்டு விடப் போகிறேன். ஏழுமலையானுக்கு எங்கள் குலத்தைத் சேர்ந்தோர், வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய அனுமதிக்க வேண்டும். திருமலைக்கு நேர்த்திக் கடனாக தலைமுடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டும். இதற்கு தாங்கள் ஒப்புதல் அளித்தால் போதும்” என்றார் சஞ்சீவுலு. இதற்கு சம்மதித்த அரசர், திருமலையில் தற்போது ‘மக்கள பாவி காட்டேஜ்’ (எம்.பி.சி) உள்ள இடத்தில் நாவிதர் குலத்தின் பெயரில் ஒரு மண்டபத்தை நிறுவினார். அதன் அருகில் ஒரு சிறிய குளமும் வெட்டப்பட்டது. அதுமுதல் திருமலைக்கு வரும் பக்தர்கள், இந்த மண்டபத்தில் தங்களது முடி காணிக்கை செலுத்தி விட்டு, அருகில் உள்ள குளத்தில் நீராடி, அதன் பின்னர் சுவாமியை தரிசிப்பதை வழக்க மாகக் கொண்டனர்.

தேரில் தங்கக் குடை

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, தலைமுடி காணிக்கை செலுத்துவது இவ்வாறு ஒரு வரைமுறைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சுவாமிக்கும் இவர் கள் பல்வேறு கைங்கர்யங் களைச் செய்து வந்துள்ளனர். இக்குலத்தோர் சம்பந்தப்பட்ட நாதஸ்வர, தவில் கலைஞர்கள் சுவாமியின் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு கச்சேரி செய்வதும், அன்றாட திருப்பணிகளுக்கு மேள தாளங்களை வாசிப்பதுமாக சுவாமிக்கு கைங்கர்யங்கள் செய்தனர். மேலும், நாவிதர் குலத்தைச் சேர்ந்தவர்கள், பிரம்மோற்சவத்தின் 8-ம் நாள் தேர்திருவிழாவில் தேரின் தலை பாகத்தில், ஒரு குடையை சமர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டனர். முதலில் மரக்குடையை எடுத்து வந்தவர்கள் பிறகு தங்கக் குடையை சமர்ப்பணம் செய்தனர். இந்த குடைதான், இன்றளவும், பிரம்மோற்சவத்தின் போது, தேரின் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும்.

ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி, பந்துலுகாரி சஞ்சீவுலு இவரது சகோதரர் மல்லையா ஆகியோர் வழிவந்தவர்கள் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், நிவாச மங்காபுரம் ஆகிய கோயில்களிலும் பக்தர்களுக்கு முடி எடுக்கும் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இவர்களை ‘பந்துலு’ வம்சாவளியினர் என்றழைக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் காலத்துக்கு பின்னர், மஹந்துக்களின் ஆட்சிகாலம் வந்தது. அப்போது, திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆதலால், எம்.பி.சி பகுதியில் இருந்து தற்போது உள்ள கல்யாண கட்டா பகுதிக்கு முடி காணிக்கை செலுத்தும் இடம் மாற்றப்பட்டது.

அதற்கு முன் இந்த இடம், யானைகளைக் கட்டும் இடமாக இருந்தது. ‘கல்யாணம்’ என்றால் சுப நிகழ்ச்சி, ‘கட்டா’ என்றால், சமூகம் எனப் பொருள். அதாவது, பக்தர்கள் சுப நிகழ்ச்சி நடத்தும் இடம் எனப் பொருள் வரும்படி, இதற்கு கல்யாண கட்டா எனப் பெயர் சூட்டப்பட்டது காணிக்கையாகத் தரப்படும் முடியிலிருந்து ஈட்டப்படும் வருமானத்தில் சவரத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 1933-ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவானபோது சுமார் 400 சவரத் தொழிலாளர்கள் இங்கிருந்தனர்.

உண்டியலுக்கு அடுத்தபடியான வருமானம்

ஏழுமலையானுக்கு தினமும் 35 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தலைமுடி காணிக்கை செலுத்துகிறார்கள். அதாவது, தரிசனத்துக்கு வருவோரில் சுமார் 60 சதவீதம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். எனவே, உண்டியல் வருமானத்துக்கு அடுத்தபடியாக பக்தர்கள் செலுத்தி வரும் தலைமுடி காணிக்கை மூலமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு அதிக வருமானம் கிடைக்கிறது. ஆம், பக்தர்கள் தினமும் நேர்த்திக்கடனாக ஏழு மலையானுக்கு காணிக்கை தரும் தலைமுடி விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு ரூ. 100 முதல் 150 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. பக்தர்கள் காணிக்கை செலுத்திய முடிகளை 6 பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். நீளம், நிறம், தரம் என இவைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. அதன் பின்னர் இவை, சுத்தம் செய்யப்பட்டு, காய வைக்கப்பட்டு, இ-குளோபல் டெண்டர் மூலம் ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. ஆண்டுக்கு நான்கைந்து முறை இங்கு முடி ஏலம் விடப்படுகிறது.

பந்துலு காரி வினுகொண்டா சுப்ரமணியம்

சவரத் தொழிலாளர்களை அதிகரிக்க வேண்டும்

பந்துலுகாரி சஞ்சீவுலு வம்சாவளியான பந்துலு காரி வினுகொண்டா சுப்ரமணியம் தற்போது திருப் பதியில் வசிக்கிறார். ஆந்திர மாநில சவரத் தொழி லாளர் சங்கத்தின் தலைவரான இவர் நம்மிடம் பேசுகையில், “ஏழுமலையானுக்குச் செய்யும் சேவைகளில் ஒன்றாகத்தான் எங்களது வம்சாவளியினர் திருமலையில் சவரத் தொழில் செய்து கொண்டிருக் கிறோம். அந்த மலை வளர்வதுபோல் ஏழுமலையான் எங்கள் குடும்பங்களை வாழவைத்துக் கொண்டிருக் கிறார். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அதற்கேற்ப திருமலையில் சவரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். தேவஸ்தானம் தொடங்கிய போது பணிபுரிந்த 400சவரத் தொழிலாளர்களும் தேவஸ்தான ஊழியர்களாகபணி நிரந்தரம் செய்யப்பட்டனர். நெருக்கடியைச் சமாளிக்க தற்போது கூடுதலாக 1,200 சவரத் தொழிலா ளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்.

(முகங்கள் வரும்...)

-என்.மகேஷ்குமார்

x