பதறும் பதினாறு 7: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


ஆதித்யா ஓரளவு சுயநினைவுக்கு வரும்வரை காத்திருப்பதைத் தவிர அவனுடைய பெற்றோருக்கு வேறுவழி தெரியவில்லை. பிறகு அவனைத் தங்களது குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். முதல்கட்டப் பரிசோதனைக்குப் பிறகு ஆதித்யாவை மனநல ஆலோசகரிடமும் அழைத்துச் செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். தொடர்ச்சியான சிகிச்சைக்குப் பிறகு ஆதித்யாவால் போதைப் பழக்கத்திலிருந்து மீள முடிந்தது.

நம்பிக்கையால் மீண்ட மகன்

தங்கள் மகன் இப்படியொரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டானே என்று அவனுடைய பெற்றோர் அவனை வெறுக்கவில்லை. திட்டவோ தங்கள் கோபத்தை வெளிப்படுத்தவோ இல்லை. மாறாக, எந்த இடத்தில் தாங்கள் அவனைக் கவனிக்காமல் விட்டோம் என்பதைத்தான் ஆராய்ந்தனர். அவனிடம் தென்பட்ட சின்னச் சின்ன மாற்றங்களைக் கண்டுகொள்ளாததுதான் அதன் முதல்படி என்பதையும் அவர்கள் உணர்ந்தனர். தங்களது கோபமும் வெறுப்பும் அவனை மீண்டும் பழைய பாதைக்கு அழைத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவனுடன் அதிக நேரத்தைச் செலவிட்டனர். அவனுக்கு எது நடந்தாலும் தாங்கள் உடன் இருப்போம் என்ற நம்பிக்கையை அவனுக்கு ஏற்படுத்தினர். ஒவ்வொன்றையும் அன்பாலே அவர்கள் சாதித்தனர்.

ஆரம்பத்திலேயே தடுக்கலாம்

ஆதித்யா போதைப் பழக்கத்துக்கு அடிமையான பிறகுதான் அவனுடைய பெற்றோருக்குத் தெரிந்தது. ஆனால், அந்தப் பழக்கத்தில் நுழையும்போதே நம்மால் குழந்தைகளை இனம்கண்டுவிட முடியும். ஆரம்பத்தில் அடிக்கடி பணம் கேட்பார்கள், அடுத்தடுத்து பொய் சொல்வார்கள், தனிமையை நாடுவார்கள். சில குழந்தைகள் அடிதடி, திருட்டு போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.  போதைப் பழக்கத்தின் உச்சகட்டமாக நாம் நினைத்துப்பார்க்காத குற்றச் செயல்களிலும்கூட குழந்தைகள் ஈடுபடக்கூடும்.  ஆனால், அவற்றில் எந்த முகத்தையும் நம்மிடம் வெளிப்படுத்தாமல் சாமர்த்தியமாக மறைத்துவிடுவார்கள்.

விளையாட்டாகத் தொடங்கும் பழக்கம்

எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டுக்காக சில நேரம் மது வகைகளைக் குடிப்பார்கள்; புகை பிடிப்பார்கள். பெரும்பாலும் தங்களைத் துணிச்சல் மிக்கவர்களாகக் காட்டிக்கொள்ளவும் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்பதை நிரூபிக்கவும் இப்படியான செயல்களில் ஈடுபடுவதுண்டு. இதை வெறும் விளையாட்டாக மட்டும் நினைத்துக் கடந்துவிடுவதில் சிக்கல் இல்லை. ஆனால், இதுவே தொடர்ச்சியான பழக்கமாக மாறுகிறபோதுதான் பிரச்சினை தொடங்குகிறது. 
“இந்தக் காலத்தில் பள்ளி மாணவர்கள் குடிப்பதும் புகைப்பதும் சர்வ சாதாரணமாய் நடக்கிறது. இதைத் தாண்டி நம்ம கண்ணுக்குத் தெரியாம எவ்வளவோ விஷயம் நடந்துக்கிட்டுதான் இருக்கு. குறிப்பா பள்ளிகளுக்கு வெளியே விற்கப்படுற போதையைத் தரும் மிட்டாய் போன்ற மாத்திரை. இது எப்ப கடைக்கு வரும்னு மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியும். பெரியவங்க போய் கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவாங்க. கடைக்கு வந்ததும் மாணவர்களுக்கு ரகசியமா சப்ளை ஆகும்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர். பள்ளிக்கு வெளியே இப்படி விற்கப்படும் மாத்திரைகள் தவிர மிட்டாய் வடிவிலும் போதைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதில்லை என்பதால் எந்தத் தடையுமற்று இவை மாணவர்களுக்குக் கிடைப்பதாகவும் அவர் சொல்கிறார்.

இலவசமாகக் கிடைக்கும் போதை

இது ஒரு பக்கம் என்றால் பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், சிறுவர்களையும் தங்கள் செயலுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் நடக்கிறது. எட்டாம் வகுப்பு தாண்டியவர்கள்தான் இவர்களின் இலக்கு. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஃபுரூட் பியர் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறார்கள். குளிர்பானம்தானே என அவர்களும் குடிக்க, பிறகு மெதுவாக ஒயின் ரகங்களை அவர்களுக்குப் பழக்குகிறார்கள். அந்தப் பழக்கத்துக்குச் சிறுவர்கள் அடிமையானதும் அவர்களை வீட்டிலிருந்து பணம் வாங்கிவரச் சொல்லி நிர்பந்திப்பார்கள். மறுக்கும் மாணவர்களை அவர்கள் குடிப்பதுபோல் செல்போனில் எடுத்துவைத்த படங்களைக் காட்டி மிரட்டுவார்கள். சில நேரம் அடிப்பதும் உண்டு. வீட்டில் பெற்றோருக்குத் தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என நினைக்கும் சிறுவர்கள் வீட்டிலிருந்து அடிக்கடி பணம் வாங்கிவந்து கொடுப்பார்கள்.

மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதையின் பெரிய வடிவமாகப் போதை மருந்துப் பொடியும் கஞ்சாவும் இருக்கின்றன. இவற்றை விற்பனை செய்கிறவர்கள் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள். நாளடைவில் அவர்கள் அதற்குப் பழக்கப்பட்ட பிறகு பணம் பெற்றுக்கொண்டு தருகிறார்கள். போதைக்கு அடிமையாகிவிட்ட மாணவர்கள் எப்படியாவது அதை வாங்கிவிடத் துடிப்பார்கள். பல நேரம் அதன் விளைவு நம் கைமீறிவிடுகிறது.

“இந்தக் காலத்துப் பெற்றோருக்குக் குழந்தைகள் வளர்ப்பதில் பல சிக்கல்கள். நாம் ஏதாவது கேட்டால் அவர்கள் நம்மை மதிக்காமல் போய்விடுவார்களோ என்ற பயத்திலேயே நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கண்டிப்பதில்லை. அதிக செல்லமும் ஆபத்து. பள்ளியின் நிலை வேறு. ஆசிரியர்களின் கண்டிப்பு இல்லாத சூழல், மாணவர்களை மிக எளிதாக எல்லைமீறச் செய்கிறது. தங்கள் கைகள் கட்டப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் ஓரளவுக்கு மேல் மாணவர்களின் விஷயங்
களில் தலையிட முடிவதில்லை. இந்தச் சூழலில் பெற்றோர்-ஆசிரியர் உறவு முக்கியமானது. மது, புகை, போதை போன்றவற்றுக்கு அடிமையாகும் குழந்தைகள் அடுத்
தடுத்து பல தவறுகளைச் செய்கிறார்கள். ஒன்றிலிருந்து மீள இன்னொன்று என இவர்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் ஆபத்தாகவே முடிகின்றன” என்று சொல்லும் அந்த ஆசிரியரின் வார்த்தைகள், பெற்றோருக்குமான எச்சரிக்கை மணி!

பக்குவம் தேவை

பெரும்பாலும் ஆண் குழந்தைகளே இப்படியான விஷயங்களில் எளிதில் சிக்கிக்கொள்கிறார்கள். பெண் குழந்தைகளின் சதவீதம் ஒப்பிடக்கூடிய அளவில்கூட இல்லை. குழந்தைகள் இப்படிப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. அவர்களின் நடத்தை மாற்றத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்பதால் பிரச்சினையில்லை. குழந்தைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்த பிறகுதான் பெற்றோர் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும். அடிப்பது, மிரட்டுவது போன்றவற்றைச் செய்தால் குழந்தைகள் இருவிதமாக நடந்துகொள்ளக்கூடும். 

“ஆமா, நான் அப்படித்தான் செய்வேன்” என்று பெற்றோரின் பேச்சை எதிர்த்துச் செயல்படலாம். இல்லையென்றால் தாழ்வு மனப்பான்மையிலும் குற்றவுணர்விலும் குறுகிப்போகலாம். இரண்டுமே ஆபத்து.

முன்னது குழந்தையின் நடத்தையை மேலும் சிதைக்கும் என்றால் பின்னதோ அவர்களை விபரீத முடிவுகளை நோக்கி இட்டுச்சென்றுவிடக்கூடும். எனவே, பெற்றோர் பொறுப்புடனும் பொறுமையுடனும் குழந்தைகளைக் கையாள வேண்டும். போதையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம். குடும்பச் சூழல் குறித்து விளக்கலாம். இல்லையென்றால் போதையால் சீரழிந்துபோனவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரியவைக்கலாம். இவற்றுடன் மனநல ஆலோசனையும் அவசியம். போதையை விட்டு மீளவே முடியாத நிலையில் மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும். ஆனால், நம் எந்தவொரு செயல்பாடும் குழந்தைகளை மனதளவில் பாதிக்கக் கூடாது; அவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது. அவர்களுக்குத் தேவை அறிவுரை அல்ல; அரவணைக்கும் கரங்கள் மட்டுமே!

(நிஜம் அறிவோம்…)

x