அசைவப்பிரியர்களாக இருந்தாலும், சிலருக்கு உணவகங்களில் அசைவம் சாப்பிடுவதில் தயக்கமிருக்கும். ருசிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக் கொண்டு உடலையும் பேணிக் கொள்ள திருச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.பி-யுமான குமார் ஒரு உத்தியைக் கடைப்பிடிக்கிறார். அதென்ன உத்தி?
“அசைவம் சாப்பிட்ட மாதிரியும் இருக்கணும், வயித்துக்குக் கெடுதல் வந்திடுமோங்கிற பயமும் வரக் கூடாது. அதுக்கு நான் போறது, திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு எதிர்ல இருக்கிற குரு ஹோட்டல். உள்ளூர் அரசியல்வாதிகள் தொடங்கி தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களில் பலர் திருச்சி வந்தால் தங்குவதும் சாப்பிடுவதும் இங்கதான். ஹோட்டலில் அன்றன்றைக்கான வழக்கமான மெனுவைத்தவிர, விருந்தினருக்கு என்ன தேவையோ அதைக் கேட்டறிந்து ஒரு மணி நேரத்தில் அதைத் தயார் செய்து கொடுப்பதுதான் விசேஷம்.
முன்னாடி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே குடியிருந்ததால காலைல வாக்கிங் போறப்பயே அப்படியே குரு ஹோட்டலுக்குள்ள போய் காபியோட ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்டறது வழக்கம். அதேமாதிரி வீட்டுக்கு சாப்பிடப் போகமுடியாத அளவுக்கு வேலை இருந்தாலும் அங்க போயிடுவேன். எனக்கு மீன்தான் ரொம்பப் பிடிக்கும். அதை வீட்டுல செஞ்சு சாப்பிடுவோமே தவிர ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறது இல்ல. இந்த ஹோட்டல்ல அசைவத்துக்குப் பதிலா சைவக் கறிதோசையும், சைவ ஈரல் வறுவலும் விரும்பி சாப்பிடுவேன். கட்சியில, குடும்பத்துலன்னு யாரு வந்தாலும் அவங்களுக்கான விருந்துல இது ரெண்டும் நிச்சயமா இருக்கும்” என்று கூறியபடி அந்தக் கடைக்கு என்னையும் அழைத்துச் சென்றார் குமார்.
எம்.பி-யைப் பார்த்ததும் வரவேற்பும், உபசரிப்பும் களை கட்டியது. ஹோட்டல் உரிமையாளர் குரு.சுப்ரமணியனே தனது அறையிலிருந்து எழுந்துவந்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் கறிதோசையும், வெஜ்ஈரலும் குமாரின் மேசையில் அணிவகுத்தன. அன்று கூடுதலாக வெஜ் ஆம்லேட்டும் வந்துவிட்டது. மெதுவாக ரசித்து, ருசித்துச் சாப்பிட்டவர், “சைவக் கறிதோசை உண்மையான கறிதோசையை விட ருசியாக இருக்குது. அதேபோல வெஜ் ஈரலும் வேற எங்கயும் கிடைக்காத சுவையோட இருக்குது” என்று பேசி முடிக்கையில், உணவையும் முடித்துவிட்டார்.
அப்புறம் என்ன... ஹோட்டல் உரிமையாளர் குரு.சுப்ரமணியனும், நிர்வாக ஆலோசகர் தாய்வீடு சிவக்குமாரும் சைவ கறிதோசை மற்றும் வெஜ் ஈரல் செய்முறை குறித்து விளக்கினர்.
சைவக் கறிதோசை: சாதாரணமாக நாம் அரைக்கும் தோசை மாவில் குட்டியாக ஊத்தப்பத்தை ஊற்றி, அதன்மேல் இங்கு விஷேசமாக தயாரிக்கப்படும் கிரேவியை பரப்பினால் அதுதான் சைவக் கறிதோசை. ஒரு குடும்பத்துக்கு (4 பேர்) தேவையான கிரேவி செய்வதற்கு பெல்லாரி வெங்காயம் 4, தக்காளி 4, காளான் கால் கிலோ, தேவையான அளவுக்கு மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை, உப்பு, மல்லித்தழை கொஞ்சம் கடுகு, உளுந்து தேவை.
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கணும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளித்து அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பொன்னிறமாக மாறியதும் அதன்மேல் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாதூள் மற்றும் உப்பை போட்டு நன்றாக கிளறணும். பிறகு தக்காளியைப் போட்டு தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதில், நறுக்கி வைத்துள்ள காளானைப் போட்டு கொதிக்கவிடுவது அவசியம். தண்ணீர் சுண்டி கிரேவி கெட்டியாக மாறும்போது கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கினால் அட்டகாசமான கிரேவி தயார். தோசை மாவில் ஊத்தப்பம் ஊற்றி அதன்மேல் இந்த கிரேவியை முழுவதுமாக பரப்பினால் சைவக் கறிதோசை ரெடி.
வெஜ் ஈரல்: அரை கிலோ பாசிப்பயிறு மாவுடன் 100 கிராம் மைதா சேர்த்து அதில் 100 மிலி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர், உப்பு, இஞ்சிப் பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி கரம் மசாலாதூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்து, அதை இட்லி பானையில் வைத்து வேகவைக்க வேண்டும். வெந்ததும் எடுத்து ஆறவைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் போட்டுப் பொறித்து எடுத்தால் சைவ ஈரல் தயார்.
அடுத்து அதற்கான கிரேவி. அரை கிலோ சின்னவெங்காயம், 100 கிராம் மிளகு, 100 கிராம் முந்திரிப்பருப்பு, 250 கிராம் தக்காளி ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி வதக்கணும். அதில் தேவையான அளவு கரம்மசாலா, உப்பு, ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். நன்கு வதக்கியவுடன் அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர், தனியாக கொஞ்சம் சோம்பு போட்டு தாளித்து 500 கிராம் பெரியவெங்காயம், 250 கிராம் தக்காளி, 100 கிராம் பச்சைமிளகாய் இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். நன்றாக வதங்கியவுடன் மிக்சியில் அரைத்து வைத்துள்ளதை இதில் ஊற்றி ஒன்றாக சேர்த்து கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்போதே உப்பு, காரம் பார்த்து தேவையானால் சேர்த்துக்கொள்ளலாம். இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்னதாக ஈரல் துண்டுகளைப் போட்டு கொதிக்கவிடணும். கடைசியாக 100 கிராம் கடலைப் பருப்பை தனியாக வேகவைத்து அதன் மீது தூவி இறக்கினால் சுவை ஆளைத் தூக்கும்.
“எந்தந்த ஊர்களில் என்னன்ன பொருட்கள் தரமாக கிடைக்குமோ, அந்தந்த ஊர்களிலேயே அந்தந்தப் பொருட்களை வாங்குகிறோம். தேவையான எல்லா மசாலாக்களுக்கும் தேவையான பொருட்களை அதனதன் சரியான அளவை எலக்ட்ரானிக் தராசில் எடைவைத்து சரியான விகிதத்தில் சேர்த்து நாங்களே அரைத்துக்கொள்கிறோம். பாரம்பரியமாக எங்களிடம் இருந்த சமையல்காரர்கள் மூலமாக அவர்களின் சுவை பக்குவத்தை இப்போதுள்ள இளைஞர்களுக்குக் கொண்டுசேர்த்து அதே சுவையை நிரந்தரமாக தந்துகொண்டிருக்கிறோம். எனது மனைவி அமுதாவும், அண்ணி உஷாரெங்கநாதனும் தினம்தோறும் வந்து சுவையை சரிபார்த்து சமையலர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதனால்தான் மூன்று தலைமுறைகள் கடந்தும் எங்களால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது” என்கிறார் குரு ஹோட்டல் உரிமையாளர் குரு. சுப்ரமணியன்.
-கரு.முத்து