இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?- நினைவலைகளில் நெகிழும் பேராசிரியர் மா.செங்குட்டுவன்


பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என திராவிட இயக்கத்தின் நான்கு தலைமுறை தலைவர்களோடு உறவாடியவர் உறவாடி வருபவர் பேராசிரியர் மா.செங்குட்டுவன். 91 வயதைக் கடக்கும் இவருக்கு, செப்டம்பர் 15 முப்பெரும் விழாவில், ‘பேராசிரியர்’ விருதை வழங்கி கவுரவிக்க இருக்கிறது திமுக. விருது பெறும் மகிழ்வில் திளைத்திருக்கும் அவரைச் சந்தித்தபோது பழைய நினைவுகளை இளமைத் துள்ளலுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

“அப்போது நான் மன்னார்குடியில் தங்கி பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். நான், நாவலரின் சகோதரர் ராமதாஸ், பேராசிரியரின் சகோதரர் அறிவழகன் மூவரும் சேர்ந்து அப்போதே திராவிட மாணவர் கழகம் துவங்கி பெரியார் கொள்கையை பிரச்சாரம் செய்தோம். இந்திய சுதந்திர நாளை கறுப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்றார் பெரியார். அதை ஏற்று நாங்கள் மூவரும் கறுப்புச் சட்டை அணிந்து பள்ளிக்குச் சென்றோம். எங்களை பிரம்பால் அடித்த ஆசிரியர், பொதுத் தேர்வையும் எழுதவிடவில்லை. பிறகு தனியாக தேர்வு எழுதித்தான் பள்ளிப் படிப்பை முடித்தோம்.

பெரியாரே பாராட்டினார்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஈரோட்டில் பெரியார் பகுத்தறிவு பயிற்சி பாசறை நடத்துவார். திருவாரூர் தாலுக்கா மாவூர் கிராமத்தில் ஆர்.எஸ். சர்மா என்று ஒரு பிராமணர் இருந்தார். சீர்திருத்தவாதியான அவர் தனது மாளிகைக்குப் பக்கத்திலேயே கல்கத்தா காளிக்கு கோயில் கட்டியிருந்தார். இருந்தாலும், பெரியார் மீது பற்று கொண்டிருந்த அவர், தனது மாளிகையிலேயே பகுத்தறிவுப் பாசறையை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனால், 1949-ம் ஆண்டுக்கான பாசறையை அவரது மாளிகையில் நடத்தினார் பெரியார். என்னோடு சேர்த்து பத்து மாணவர்கள் கலந்து கொண்ட அந்தப் பாசறையில் மணியம்மையாரும் கலந்து கொண்டார்கள். 
அப்போது பெரியார் நடத்திய பேச்சுப்போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு!

x