எங்க நாலு பேருக்கும் அஞ்சு பிள்ளைங்க!- தோழிகளைச் சேர்த்து வைத்த தாய்மை!


நாகர்கோவில் இடலாக்குடியில் இருக்கும் அந்த வீட்டில் இருந்து பச்சிளம் குழந்தைகளின் சிரிப்பு, சிணுங்கல்கள் சங்கீதமாக இசைக்கிறது. ஒன்பது மாதங்களுக்கும் குறைவான ஐந்து அழகுக் குழந்தைகள், அவர்களின் அம்மாக்கள் சங்கமித்த ஆச்சரிய நிகழ்வு அங்கு நடந்தது. இந்தத் தாய்மார்கள் அனைவருமே கல்லூரித் தோழிகள்.

நாகர்கோவில் பாகேஷ்வரி, சரண்யா, சரிகா, வித்யா ஆகிய நான்கு பேரும் ஒரே கல்லூரியில் பொறியியல் படித்தவர்கள். கல்லூரித் தோழிகளான இவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சென்னையில் வீடு எடுத்து ஒன்றாகவே தங்கினார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் ஆளுக்கு ஒரு திசையில் திருமணம் செய்துகொண்டு புகுந்தவீடு சென்று விட்டனர். எப்போது மீண்டும் சந்திப்போம் என்று ஏங்கிக்கொண்டிருந்த இவர்களை தாய்மை மீண்டும் சங்கமிக்க வைத்திருக்கிறது. நெகிழ்வூட்டும் அந்தச் சந்திப்பில் நானும் அங்கிருந்தேன்.

பேசும்போதே பாகேஷ்வரியின் முகத்தில் ஏக பூரிப்பு. “என்னோட வீட்டுக்காரர் தினேஷுக்கு ஜப்பானில் வேலை. நானும் திருமணம் முடிஞ்சதும் ஜப்பானுக்குப் போயிட்டேன். நாலு பேருக்கும் திருமணமாகி ஆளுக்கொரு பக்கம் பிரிஞ்சிட்டோம். எப்பவாவது போனில் பேசிக்குறதோட சரி. சொல்லி வெச்சது போலவே நாலு பேரும் இரண்டு, மூணு மாச வித்தியாசத்தில் வரிசையாக பிள்ளைதாச்சி ஆனோம். உடனே, ‘தாயாக போகிறவர்கள்’ என்னும் பெயரில் வாட்ஸ்- அப் குழு ஆரம்பிச்சோம். அதில் நாங்க நான்கு பேரும் கர்ப்ப காலத்தில் ஏற்படுற சின்னச் சின்ன சந்தேகங்களுக்கு எங்களுக்குள்ள ஆலோசிப்போம். நான்கு பேருக்கும் குழந்தை பிறந்ததும் வாட்ஸ் - அப் குழுவின் பெயரை ‘அம்மாக்கள்’ன்னு மாத்தினோம். சுருக்கமாக சொன்னா தாய்மைதான் எங்களை சேர்த்து வச்சுருக்கு.” என்றார் பாகேஷ்வரி.
தொடர்ந்து பேசிய சரிகா, “வித்யா ரொம்ப தைரியசாலி. எப்பவும் துருதுருன்னு இருப்பா. பாகேஷ்வரி நல்ல ஆலோசனை சொல்லுவா. மத்தவங்களுக்கு உதவுற குணம் அதிகம். சரண்யா நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பா. இப்படி எங்க ஒவ்வொருத்தரிடமும் பிடிச்ச குணத்தை இந்தச் சந்திப்பில் பகிர்ந்துக்கிட்டோம். எங்களோட தூய்மையான நட்பைப் போலவே, இந்தக் குழந்தைகளும் நட்பாகப் பழகுவதற்கான தொடக்கப் புள்ளிதான் இது. இப்போ அவங்களுக்கு இதைப் புரிஞ்சுக்குற தன்மை இருக்காது. ஆனா, போட்டோ, வீடியோ எடுத்து இதை ஆவணப்படுத்தி பின்னாளில் காட்டுவோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சமையல் அறையில் இருந்து பிரியாணி வாசனை மூக்கைத் துளைக்கிறது.

தோழிகள் சந்திப்பு நடந்த சரிகாவின் வீட்டில் சிக்கன் வறுவல், பிரியாணி, மட்டன் குழம்பு என விருந்து தடபுடலாக தயாராகிக்கொண்டிருந்தது. சரிகாவுக்கு முகம்மது அத்னான், முகம்மது அஃப்னான் என இரட்டை ஆண் குழந்தைகள். ஏழு மாதங்கள் ஆகின்றன. பாகேஸ்வரியின் மகன் தக்‌ஷத்துக்கு ஏழு மாதமும், சரண்யாவின் மகன் தராங்கிற்கு ஒன்பது மாதமும் ஆகிறது. வித்யாவின் மகள் மதுக்‌ஷரா ஐந்து மாத ஜூனியர்!

x