70 வயது தோழர் திருமூர்த்தியும்... 60 வயது ஹெர்குலஸ் சைக்கிளும்..!


நகைச்சுவைப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நாடகக் கலைஞர், இடது சிந்தனைப் பாடகர் எனப் பன்முகம் காட்டுபவர் தோழர் திருமூர்த்தி. வயது 70-ஐக் கடந்தும் ஓர் இளைஞரைப்போல மேடைகளில் வலம் வருகிறார். சமீபத்தில் இவரது 2000-வது மேடைப் பேச்சை விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத் தோழர்கள். தோழரிடம் நாம் காண்பதற்கு இப்படி நிறைய விசேஷங்கள். ஆனாலும், தோழர் தனக்கென விசேஷமாக நினைப்பது எதைத் தெரியுமா? அது அவருக்குச் சொந்தமான 60 வயது பழசான ஹெர்குலஸ் சைக்கிளைத்தான்.

கோவையில் தோழரின் வீட்டுக்கு நான் சென்றபோதும் அந்த சைக்கிளைத்தான் துடைத்துக்கொண்டிருந்தார். அருகே இரண்டு காற்று அடிக்கும் பம்ப்புகள், பஞ்சர் ஒட்டும் இத்யாதிகள். அக்கம்பக்கத்து குழந்தைகளின் சைக்கிள்களை அன்பொழுக பழுது பார்த்துக் கொடுப்பதிலும் தோழருக்கு அலாதி பிரியம்! “என் அப்பா சின்ன வயசிலயே தவறிட்டார். அம்மா மில் தொழிலாளி. நாங்க அஞ்சு குழந்தைகள். கோவை அரசுக் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி., படிச்சேன். உப்பிலிபாளையத்திலிருந்து கல்லூரிக்கு எட்டு மைல். பஸ் டிக்கெட் 19 பைசா. காசில்லாம நடந்தே போவேன். அப்பவே இலக்கியம் கொஞ்சம் பரிச்சயம். 1961-ல், கலை இலக்கிய பெருமன்றத் தொடக்க விழாவும் மாநில மாநாடும் எங்க ஊர்லதான் நடந்தது. அதுல தோழர்கள் ஜீவா, தொ.மு.சி. ரகுநாதன், பாண்டியன், த.பெ. வீராசாமி, கே.சி.எஸ்.அருணாசலம், சாலமன் பாப்பையா, சிவகாம சுந்தரி, பேபி சவுண்ட் சர்வீஸ் மணி இவங்களோட நெருக்கம் ஏற்பட்டுச்சு.

சவுண்ட் சர்வீஸ் மணி ஒரு சைக்கிள் கடை வெச்சிருந்தார். அந்தக் கடையை அவர் கொடுத்துட முடிவெடுத்தப்ப எனக்கு ஒரு சைக்கிளைக் கொடுத்து, ‘காசை மெதுவா கொடு’ன்னு சொன்னார். அப்ப இந்த சைக்கிளை 65 ரூபாய்க்கு ரெண்டு தவணையில தர்றதா சொல்லி வாங்கினேன். அப்பவே இந்த சைக்கிள் பத்து வருஷம் பழசு. நான் காலேஜ்ல பி.எஸ்சி., வேதியியல் முடிச்சது, தபால் துறையில் வேலைக்குப் போனது, கைப்பந்து விளையாட்டு வீரராக பல இடங்களுக்குச் சென்று விளையாடுனது, பொண்ணுக மூணுபேரை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விட்டது... இப்படிக் கிட்டத்தட்ட 55 வருஷமா எல்லாத்திலும் இந்த சைக்கிள் எங்க வாழ்க்கை
யோட கலந்தே இருக்கு” என்றவரிடம், “இந்த சைக்கிள் மேல அப்படி என்ன சென்டிமென்ட்?” என்று கேட்டேன்.

“கம்யூனிஸ்ட்டுக்கு ஏதுங்க சென்ட்டிமென்ட்? நானும் லூனா மொபட் ஓட்டினவன் தான். ஆனா, ரெண்டொரு தடவை அதுல விழுந்து அடிபட்டுட்டேன். அப்புறம் அதைத் தொடவே இல்லை. இதுவும் லேசுப்பட்ட சைக்கிள் இல்லை. 1966-ம் வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டு பக்கத்துல இருக்குற மைதானத்தில் ஒருத்தர் ஏழு நாள் இடைவிடாம சைக்கிள் ஓட்டும் சாகசம் செஞ்சிட்டிருந்தார். இந்த சைக்கிளை எடுத்துக்கிட்டு அதை வேடிக்கைப் பார்க்க போனவன், அப்படியே மறந்துட்டு பக்கத்துல இருந்த சினிமா தியேட்டருக்குப் போயிட்டேன். பாதியில பதறிப் போயி வந்தா சைக்கிளைக் காணோம். சாகச வீரர் சைக்கிள மரத்துல சாய்ச்சி அதுலேயே தூங்கிக்கிட்டிருந்தார். அவர்கிட்ட போய் கேட்டேன். ‘இதுவா பாரு!’ன்னு அவர் உட்கார்ந்திட்டிருந்த சைக்கிளைக் காட்டுனாரு. அவரோட சைக்கிள் ரிப்பேர்ங்கிறதால என்னோடத எடுத்து ஓட்டியிருக்காரு. அவர் ஏழு நாள் சாகசத்துக்கும் இந்த சைக்கிள்தான் உதவியிருக்கு. கோவை குண்டு வெடிப்பு சமயம் எங்க தபால் அலுவலகம் பக்கத்துல ரெண்டு குண்டுகளைக் கைப்பத்துனாங்க. எங்க ஆபீஸுல வைக்க இருந்த குண்டுகள்னு சொல்லி, போலீஸ் என் சைக்கிளையும் பிரிச்சு மேய்ஞ்சு ஆராய்ச்சி பண்ண கூத்தும் நடந்துச்சு” என்றவர், சைக்கிளை வைத்து நடந்த இன்னும் சில சுவாரஸ்யங்களையும் சிரித்தபடியே விளக்கினார்.

x