கொட்டுக்கார குருசாமி
ஜெயிலிலிருந்து திரும்பிய பாண்டி,
“எங்கய்யா சம்மதிச்சுட்டாரு…” எனச் சொல்லக்கேட்டதும் குமராயிக்கு இருப்புக் கொள்ளலே. புருசனைப் பார்க்க பார்க்க, புதுசா பார்க்கிற மாதிரி, சந்தோசம் தாங்கலே!
நல்ல சேதி கொண்டுவந்த புருசனுக்கு, நாவுக்கு ருசியா ஆக்கிப்போட, விடைக்கோழிகளை விரட்டிக்கொண்டு திரிந்தாள் குமராயி.
எந்தக் கோழியும் சிக்க மாட்டேங்குது. கொல்லையில் மேய்ந்த கோழிகள், குமராயியைக் கண்டதும் குப்பைமேட்டுக்குத் தாவுது. குப்பைமேட்டுப் பக்கம் தலையைக் கண்டால், பறந்து போயி, நாத்துப் படப்பு உச்சியிலே உக்காருது. கல்லைக் கொண்டு எறிந்தால், ‘படபட’வென றெக்கை அடிச்சு, கூரை வீட்டு முகட்டுக்கு ஒரே தாவு.
விரட்டி விரட்டித் தவிச்சுப்போனாள் குமராயி. கோழிக்குப் பின்னாடி நாக்குத் தள்ள ஓடித் திரியிறதை சனம் வேடிக்கை பாக்குது.
“அடியேய் கொமராயீ… ஏன் இந்த ஓட்டம் ஓடித் திரியிறே? வீட்டுக்கு யாரும் விருந்தாடி வந்திருக்காகளா?”
கேள்வி கேட்ட கிழவியுடன் சண்டைக்கு எக்கினாள் குமராயி. “விருந்தாடிக்கு ஆக்கிப் போடவா நான் கோழி வளக்குறேன்? நீயெல்லாம் உன் வீட்டுக்கு வர்ற விருந்தாடிகளுக்குக் கோழி அடிச்சுத்தான் விருந்து வைக்கிறயாக்கும்? எச்சிக்கைட்டெ காக்காயை விரட்டாதவ நீயி. கேக்க வந்துட்டே… கேக்க! பொத்திக்கிட்டுப் போவேன்.”
“கேட்டது ஒரு குத்தமாத்தா? நீ ஒரு பொம்பளைன்னு ஓங்கிட்டெ வந்து கேட்டென் பாரு. ஏம்புத்தியைப் பிஞ்ச வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்” காது தண்டட்டி குலுங்க கழுத்தை ஒரு வெட்டு வெட்டினாள் கிழவி.
“போ... போயி அடிச்சுக்கோ. பிஞ்ச வெளக்கமாரு என் வீட்டுலெ நெறையா கெடக்கு. எடுத்து அடிச்சுக்கோ” என்றாலும் கோழி மேலேயே கண்ணாய் இருந்தாள்.
‘இவள்ல்லாம் ஒரு பொம்பளை. இவ கூட, அந்த பாண்டிப் பய எப்பிடிதான் காலம் தள்ளுறானோ! திங்கு திங்குனு ஆடத்தான் செய்யிறாள்!’ வாய்க்குள்ளேயே முனகினாள் கிழவி.
அடுத்த வீட்டுக் கூரை முகட்டில் நின்ற முட்டைக் கோழியை, கையிலிருந்த கல்லால் குறி பார்த்து எறிந்தாள் குமராயி. றெக்கை சடசடக்க, கிறுகிறுத்துக் கீழே விழுந்தது கோழி.
வெள்ளாங்குளம் ஊர்ச்சாவடி, அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு இருக்குது. ஒரு பக்கம் வெட்டுச் சீட்டு, தாயக்கட்டம். இன்னொரு பக்கம் ஆடுபுலி, ரம்மியாட்டம். கூடிக்கிடந்த இளவட்டங்களுக்குள் சோலையும் இருந்தான்.
எந்த ஆட்டத்திலேயும் கலந்துகொள்ளாமல் மல்லாக்க அடிச்சு படுத்துக் கிடக்கிற ஆம்பளைகளும் உண்டு. சாவடி பட்டியல் கல்லு, அம்புட்டு குளிர்ச்சி!
ஆட்டம் ஆட்டமாய் இருக்க, சாவடி முழுக்கச் சோலையின் கல்யாணப் பேச்சுதான். ஆரம்பிச்சு வச்சவன் கள்ளாப்பருந்து.
“சோலை, பெருநாழி மாப்பிள்ளை ஆகப்போறான்!”
“ஒண்ணுக்கு ரெண்டு சம்பந்தம்… ஒரே வீட்டுலெ!”
“அரியநாச்சி அக்கா மாதிரி குணசாலி பெறந்த வீட்டிலே எத்தனை சம்பந்தமும் பண்ணலாம்.”
“மச்சான் சக்கரைத் தேவருக்கு வாக்கப்பட்டு வந்ததிலிருந்து வெள்ளாங்குளத்துச் சனம் அத்தனை பேர்கிட் டேயும் அந்தக்கா காட்டுற உறவும் ஒட்டுதலும்… அடடா!”
மாறி மாறி இளவட்டங்கள் பேசிக்கொண்டார்கள்.
“அவுக வீட்டுக்கு தேடிப்போற அத்தனை சனமும் வாயும் வயிறும் நெறஞ்சுதான் திரும்பும்.”
“சிரிச்சுக்கிட்டே ஆக்கிப் போடுற அன்னலெச்சுமி ஆச்சே.”
“அண்ணன் சக்கரைத் தேவரு ஆப்பநாட்டுக்கே ஞாயம் சொல்ற மனுசனா இருக்கார்னா அவருக்குப் பொண்டாட்டியா அரியநாச்சி மதினி வந்து வாய்ச்ச முகூர்த்தம்தான்.”
குட்டமுருகன், சோலை பக்கம் திரும்பினான். “ஏப்பா… சோலை. நீ கட்டப்போற பொண்ணுப்பிள்ளையை நேர்லெ பாத்திருக்கயா?”
“ஏழெட்டு வருசத்துக்கு முன்னே எங்கண்ணன் கல்யா ணத்தப்போ பார்த்தது” சுரத்தில்லாமல் சொன்னான் சோலை. “அவுக அண்ணன்காரன் பாண்டிக்கும் எனக்கும் எப்பவும் ஒத்துவராது. எங்கண்ணனும் மதினியும் சொன்னதினாலேதான் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்” ஊரணிக்கரை புளிய மரத்தைப் பார்த்துக்கொண்டு பேசினான்.
ஊர்ச்சாவடி முகட்டைப் பார்த்துக்கொண்டு மல்லாக்கப் படுத்திருந்த, மாமன் முறைகார பெருசு, “சக்கரை, ஏங்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலையே!” குறைபட்டார்.
“அம்மான்… நீங்க இல்லாமலா? சாதிசனத்தோட போயி, சபையிலே உக்காந்து நீங்கதானே பருசம் போடணும்!” சரிக்கட்டினான் சோலை.
“பருசம் எப்போ?”
“வர்ற ஞாயத்துக்கிழமை பெருநாழி போறதாக அண்ணன் சொன்னாரு.”
முற்றத்தில் நிற்கும் முருங்கை மர நிழலில் அமர்ந்து, கோழி மயிரை ஆய்ந்துகொண்டிருந்தாள் குமராயி.
நெற்றியில் இட்ட திருநீற்றுக் கீற்று, வியர்வையில் நனைய, வேகாத வெயிலில் வீதி வழியே நடந்து வந்த வள்ளி அத்தை, “பாண்டி வந்துட்டானாடீ?” குமராயியிடம் கேட்டுக்கொண்டே முற்றத்தில் நுழைந்தாள்.
மயிரை ஆய்வதிலேயே குறியாய் இருந்த குமராயி, பதில் பேசலே.
தாழ்வாரப் படி ஏறி, தலைவாசலில் நுழைந்தாள் வள்ளி அத்தை.
குளித்து, ஈரத் தலையைத் துவட்டிக்கொண் டிருந்தான் பாண்டி.
“ஏப்பா… பாண்டி. எங்கண்ணனைப் பார்த்தியா? என்ன சொன்னாரு?”
“என்ன சொல்லப் போறாரு? ஓம் மச்சினன் கருப்பையாவுக்கு மாயழகியை பேசி முடிச்சிட்டு, கல்யாணத் தேதியை முன்னக்கூடியே சொல்லு. ஜெயில்லெ லீவு எடுக்க வசதியா இருக்கும்ன்னாரு.”
உள்வீட்டு அறைக்குள் துணிமணிகளை மடித்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள் மாயழகி.
பாண்டிக்கு அருகே வந்தாள் வள்ளி அத்தை.
“அங்கே உங்க அக்காக்காரி கொழுந்த னுக்குப் பருசம் போட, சாதிசனத்தைத் தெரட்டிக் கிட்டு வரப்போறான்னு பேசிக்கிறாக!”
விருட்டெனத் திரும்பிய பாண்டி, “பருசம் போட வர்றான்ங்களா! யாரைக் கேட்டு வர்றானாம்? ஏந் தங்கச்சி கல்யாணத்தை வெள்ளாங்குளத்தான் முடிவு பண்றானா? அப்பிடியே வந்தாலும் பெருநாழியிலே ஒரு நாய்க்குட்டிகூட அந்த மொசப் பிடிக்கிற பயலுக்குக் கழுத்தை நீட்டாது” உச்சி கோபம், வாய் வழியே சிந்தியது.
துணிமணிகளை மடிப்பதை நிறுத்திவிட்டு, காது கொடுத்தாள் மாயழகி.
ஒரு எட்டு முன்னே வந்தாள் வள்ளி அத்தை. “ஏப்பா… பாண்டி. ஒரு பொண்ணு காரியத்திலே அப்படி எல்லாம் பொசுக்குன்னு பேசக் கூடாதுப்பா…”
“வேற என்ன செய்யச் சொல்றீக?”
“மாயழகியை என் மச்சினன் கருப்பையா வுக்கு முடிக்கப்போறோம். பருசம் போடணும்னு நீங்க யாரும் வர வேண்டாம்னு நீ போய்ச் சொல்லிட்டு வா.”
“எங்கே? அந்தப் பய வீட்டுக்கா? நான் போக மாட்டேன்.”
“நீ போகாட்டி… யார் மூலமாவது தாக்கல் சொல்லி விடு.”
பொழுது முகம் காணும் முன் எழுந்துவிடும் அரியநாச்சியால் வயிற்றுப் பாரத்தோடு இப்ப வெல்லாம் எந்திரிக்க முடியிறதில்லெ. எழுந்து வந்து தலைவாசலைத் திறந்து பார்த்தாள். தெருவெல்லாம் விடிஞ்சு கிடந்தது.
வாசல் தெளிக்க வரும் பூவாயி கிழவியை இன்னும் காணோம்.
தாழ்வாரத்து ஓரமிருக்கும் கோழிக் கூட்டைத் திறந்து விட்டதும் குஞ்சுகளோடு வெளியேறின. கூட்டுக்குள் கையை விட்டுத் துழாவினாள். ரெண்டு முட்டைகள் கிடந்தன.
மேற்கே பார்த்துத் திண்ணையில் அமர்ந் தவள், ‘வாசல் தெளிக்காம கெடக்கு. பூவாயி அத்தையை இன்னும் காணோமே… என்ன!’ வாய்க்குள் பேசினாள்.
தெருவையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண் தூரத்தில்… பெருநாழி பாதை வழியாக நடந்து வர்றவன் பெருநாழி கொட்டுக்கார குருசாமி மாதிரி தெரியுது. அடிவயிற்றில் ‘கெதக்’ என்றது.
‘ஆத்தாடீ! இழவு சொல்லி வர்ற கொட்டுக் காரன் மாதிரி தெரியுது! பெருநாழியிலே யாரு செத்தது?’ பதற்றத்தில் புலம்பினாள்.
வந்தவன், பெருநாழி கொட்டுக்கார குரு சாமியேதான்.
துலங்கும் தூரத்திலேயே ரெண்டு கைகளை யும் தலைக்கு மேல் குவித்து, “சேவிக்கிறேன் தாயீ”’ கும்பிட்டான் குருசாமி.
“என்ன குருசாமி இந்நேரம்?” பதறிப் போய்க் கேட்டாள்.
முற்றத்து ஓரம் குத்துக்காலிட்டு அமர்ந்த குருசாமி, “அது ஒண்ணும் இல்லத்தா…” பின் தலையைச் சொரிந்தான்.
“அரியநாச்சீ!” கூவி அழைத்துக்கொண்டே வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தான் சக்கரைத் தேவன்.
“சேவிக்கிறேன் சாமியோவ்…” கும்பிட்டான் குருசாமி.
“யாரப்பா… நீ? பெருநாழி கொட்டுக் காரன்லெ!” கேட்கும்போதே உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கம்.
“ஆம சாமி.”
“என்ன இந்நேரம் வந்திருக்கே? பெருநாழி யிலே ஏதும் கேதமா? யாரு செத்தது?” என்றவன், பிள்ளத்தாச்சி அரியநாச்சி அருகில் இருப்பதை உணர்ந்தவனாய், குருசாமியைப் பார்த்து, ‘சொல்லாதே…’ என்பதுபோல் கண் காட்டினான்.
“அரியநாச்சி… நீ எந்திருச்சு உள்ளே போ” என்றான்.
புருசன் சொல்வதைக் காதிலேயே வாங்காத அரியநாச்சி, “ஏப்பா… குருசாமி. சொல்லு… நீ வந்த விவரம் என்ன?” பதற்றத்தோடு கேட்டாள்.
கைவாக்கில் திண்ணையில் வைத்த கோழி முட்டைகள் உருண்டுகொண்டிருந்தன.
“ஒங்க தம்பி பாண்டி அய்யா அனுப்பிவிட்டாரு தாயி…”
“பாண்டியா! என்ன சொல்லி விட்டான்?”
குருசாமி தரையைப் பார்த்துக்கொண்டே, பேசத் தயங்கினான்.
“அடலேய்… சொல்லுடா. என்ன சொல்லி விட்டான்?” அரட்டினாள்.
“ஒங்க தங்கச்சி மாயழகி ஆத்தாவை… பாண்டி அய்யா மச்சினன் கருப்பையாவுக்குப் பேசி முடிக்கப்போறாகளாம். அதுனாலே… மாயழகி ஆத்தாவை பொண்ணு கேட்டு… வெள்ளாங் குளத்திலே இருந்து யாரும் வர வேண்டாம்னு சொல்லிட்டு வரச் சொன்னாரு தாயீ…”
“எதூ!” அதிர்ந்து வாய் பிளந்தாள் அரியநாச்சி.
“‘எழவு சொல்லிப் போற கொட்டுக்காரன்கிட்டே ஒரு பொண்ணு காரியத்தை சொல்லி விடுறீகளே சாமீ… நான் போக மாட்டேன்னேன். ‘போறயா… என்னடா?’ன்னு அடிக்க வந்தாரு. தட்ட முடியாம வந்தேன் சாமீ” தலை கவிழ்ந்தே இருந்தான் குருசாமி.
இரண்டு கைகளையும் பின்னே ஊன்றி, சாய்ந்து அமர்ந்தாள் அரியநாச்சி.
சக்கரைத் தேவன் எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான்.
“என்னத்தா… அரியநாச்சி! தம்பிக்காரன் குடுத்த மருவாதியிலே மகுந்து போயி இருக்க யாக்கும்! நான் நேத்தே சொல்லலே? பெரியா ளுகளுக்கு மரியாதை கொடுக்கிறதிலே பெரு நாழிக்காரன்ங்களை மிஞ்சினவன் யாரும் கெடையாதுன்னு. சொன்ன சொல்லு காத்துலெ கரையுமுன்னே நிரூபிச்சிட்டான் ஓந்…தம்பி!”
கண் மூடித் தலை கவிழ்ந்தாள் அரியநாச்சி.
“டேய்… குருசாமி! அந்த தரங்கெட்ட சின்னப்பய கிட்டே போய்ச் சொல்லு. அவன் தங்கச்சியை இன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா… வீடு புகுந்து தூக்கிக்கொண்டு வந்து ஏந்தம்பி சோலைக்குக் கட்டி வைக்கப் போறே’ன்னு. முடிஞ்சா… தடுத்துப் பார்க்கச் சொல்லு. போ….”
கொட்டுக்கார குருசாமி கும்பிட்டபடி எழுந்தான்.
(சாந்தி... சாந்தி...)