கூடாது - நீதியில் தாமதம்!


ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஒருவேளை, ஆளுநர் முடிவெடுக்கத் தயங்கினால், மத்திய அரசின் முடிவுக்குத் தமிழக அரசின் பரிந்துரை அனுப்பப்படும்.

தேசத்தின் இளம் அரசியல் தலைவரான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் ஓடிவிட்டன. வெவ்வேறு காலகட்டங்களில், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டாலும் கருணை அடிப்படையிலும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுளாகக் குறைக்கப்பட்டது. அதன்பிறகு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்தன. 

வழக்கின் தீவிரம் கருதி வழங்கப்படும் தண்டனையை ரத்துசெய்வதோ, குறைப்பதோ சரிதானா என்பது விவாதத்துக்குரிய கேள்வி. மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு ஆளானவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு தந்து தண்டனையை ரத்துசெய்யக் கோருகிறார்கள். அதுபோன்ற தருணங்களில், `நீதிமன்றத்துக்கு இல்லாத கருணையும், நியாய உணர்வும் ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும்தான் இருக்கிறதா?’ என்று கேட்பவர்களும் உண்டு. 

அதேசமயம், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே மாறிவிடுவதையும் கவனிக்க வேண்டும். செய்யாத குற்றத்துக்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்து நிரபராதி எனத் தீர்ப்பு வரும்போது தங்களின் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அநேகம். அதுபோல, சிவில் வழக்குகளில் தங்களுக்கான நியாயம் கிடைப்பதில் உண்டாகும் அநியாயமான தாமதத்தால் அல்லல்படும் குடும்பங்களையும் பார்க்கிறோம்.

x