பதறும் பதினாறு 6: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


நாம் நம் குழந்தைகளை நண்பர்களாகத்தான் நடத்துகிறோம் என நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் மூன்றில் இரண்டு பெற்றோர், குழந்தைகளிடம் கடுமையா கவே நடந்துகொள்கின்றனர்.

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பது, அவர்களைக் கண்டிக்காமல் இருப்பது போன்றவையெல்லாம்தான் சிறந்த பெற்றோருக்கான வரையறைகளாகப் பலரும் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், குழந்தைகள் எதை வேண்டுமானாலும் மனம்விட்டுப் பேசுகிற நெருக்கத்தை வளர்க்கத் தவறிவிடுகிறார்கள். நம் சந்தேகங்களை எல்லாம் கேட்டால் பெற்றோர் நம்மைப் பற்றித் தவறாக நினைப்பர்கள் அல்லது திட்டுவார்கள் என்ற நினைப்பே அவர்களை அமைதியாக்கிவிடுகிறது. அதனால்தான் தங்களுக்குள் எழும் கேள்விகளுக்கான பதிலை அவர்கள் வீட்டுக்கு வெளியே தேடத் தொடங்குகிறார்கள்.

கேள்விக்குக் காதுகொடுங்கள்

“இதையெல்லாம் வீட்ல கேட்டா என்னைக் கொன்னுடுவாங்கடா” என்று ஒரு குழந்தை சொல்வதைவிட, “இருடா.. எங்க வீட்ல கேட்டுப் பார்க்கலாம். எங்க அம்மாவும் அப்பாவும் ஏதாவது நல்லதா சொல்லுவாங்க” என்று சொல்வதுதான் நாம் ஓரளவு நல்ல பெற்றோராக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். அவர்களைச் சின்னச் சின்ன விஷயங்களைப் பேச அனுமதித்தால்தான் நாளடைவில் அனைத்தையும் தயக்கமின்றிப் பேசுவார்கள். ஆனால், நம்மில் பலரும், “இதெல்லாம் ஒரு விஷயம்னு வந்து என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத. வேற உருப்படியான வேலை ஏதாவது இருந்தா பாரு. எப்பப் பாரு இந்த மாதிரி உளறுவதை நிறுத்து” என்று சொல்லி அந்தக் குழந்தைகளை முகம்வாடச் செய்கிறோம். பிறகு எப்படி அவர்கள் நம்மிடம் அனைத்தையும் பேசுவார்கள்?

எல்லாமே ஏடாகூடம் அல்ல

பதின் பருவக் குழந்தைகள் அனைவரும் ஏடாகூடமான கேள்விகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்ற நினைப்பு தவறு. அவர்களுக்கு இந்த உலகம், மனிதர்கள், தங்கள் ஆளுமை, தங்களுக்குள் ஏற்படும் உடல் - மன மாறுதல்கள், அரசியல், திரைப்படம் என எத்தனையோ உண்டு நம்மிடம் பேச. ஆனால், நாம்தான் அவர்கள் பாலியல் ரீதியான சந்தேகங்களை மட்டுமே வைத்திருப்பார்கள் என நினைத்து அந்தக் கேள்விகளை முன்கூட்டியே தவிர்த்துவிடத் துடிக்கிறோம். அல்லது அதுபோன்றவற்றை மட்டுமே எதிர்பார்க்கிறோம்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் குழந்தைகளை எப்போதுமே பிஸியாக வைத்திருக்கிறோம். காலையில் பள்ளி, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் குறைந்தது இரண்டு டியூஷன் அல்லது வேறு ஏதாவது பயிற்சி வகுப்பு, பிறகு சாப்பாடு, தூக்கம் என அவர்களை எப்போதும் இறுக்கத்திலேயே வைத்திருக்கிறோம். இதில் எங்கிருந்து அவர்கள் நம்மிடம் பேச? எத்தனை வீடுகளில் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் விளையாட அனுமதிக்கிறோம்? அவர்கள் ஓடியாடி விளையாடும் போதுதான் உடலுடன் சேர்ந்து மனமும் வலுப்பெறும். அப்படியில்லாமல் அவர்களைப் பல மணி நேரமாக ஒரே இடத்தில் உட்காரவைத்து உடலுக்கு வேலை தராவிட்டால் உள்ளே சேருகிற ஆற்றலையெல்லாம் என்ன செய்வார்கள்? அதை எப்படிச் செலவழிப்பார்கள். கிடைக்கும் நேரத்தில் தேவையில்லாத விஷயங்களைப் பேசியும் பார்த்தும்தான் அந்த ஆற்றலைச் சமநிலைக்குக் கொண்டுவருவார்கள்.

அதனால், மாலை குழந்தைகள் வீடு வந்ததும் அவர்களை குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அல்லது பாட்டு, நடனம், விளையாட்டு என அவர்களுக்குப் பிடித்த ஏதாவதொரு வகுப்பில் சேர்த்துவிடலாம்.

அரசியல் பேசுவோம்

பாடப் புத்தகங்கள் தவிர பிற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம். வாசிப்புப் பழக்கம் அவர்களின் பார்வையை விசாலப்படுத்துவதுடன் அவர்கள் நம்மிடம் பேசுவதற்கான சூழலையும் ஏற்படுத்தித்தரும். குழந்தைகளிடம் பேசுவதற்கான விஷயத்தை ஒரு புத்தகத்திலிருந்தேகூட நாம் எளிதாகத் தொடங்கிவிட முடியும். “குழந்தைகளின் நண்பர்கள் குறித்து நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவர்களுடன் அடிக்கடி நாம் பேசுவதைப் பார்க்கும் குழந்தைகளுக்கு நம் மேல் மதிப்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தங்கள் நண்பர்களை மதிக்கும் பெற்றோரைக் குழந்தைகள் அதிகமாக நேசிப்பார்கள்” என்று சொல்கிறார் பள்ளி மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துநர் சிபி. பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்வதில் பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் அவர்.

“பெற்றோர் வாரம் ஒருமுறையாவது பள்ளிக்கு வந்து வகுப்பு ஆசிரியரைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் பள்ளி நடவடிக்கை குறித்துப் பெற்றோரும் வீட்டில் குழந்தைகளின் செயல்பாடு குறித்து ஆசிரியரும் அறிந்துகொள்ள முடியும். பெற்றோர் – ஆசிரியர் உறவு இணக்கமாக இருக்கும் சூழலில் குழந்தைகள் தடம் மாறுவதை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்” என்கிறார் சிபி.

குழந்தைகளிடம் அனைத்தையும் பேசுவதற்கான வாசலைப் பெற்றோரே திறக்க வேண்டும். அவர்கள் நம்மிடம் ஆசையாகச் சொல்ல வருவது நமக்கு ஒன்றுமேயில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால், அது தனக்கு முக்கியமாகப்படுவதால்தான் குழந்தை அதைத் தன்னிடம் சொல்ல விரும்புகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தவிர நாமே பொதுவான சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் பேசலாம். அது சமகால சினிமாவாகவோ அரசியல் நிகழ்வாகவோ இருக்கலாம். அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத, புரியாத ஒன்றைப் பற்றிப் பேசும்போது அதை அவர்கள் ஆர்வத்துடன் கேட்பதுடன் அடுத்தடுத்து அது குறித்துத் தேடவும் தொடங்குவார்கள். அதைப் பற்றித் தங்கள் நண்பர்களுடன் விவாதிப்பார்கள். நண்பர்கள் மத்தியில் அவர்களை ஹீரோவாகக் காட்டிக்கொள்ளவாவது இதுபோன்ற ஆரோக்கியமான விவாதத்தை அவர்கள் நடத்துவார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் அவர்களைப் பாதை மாறாமல் வைத்திருக்கும்.

ஆற்றுப்படுத்துநர்கள் அவசியம்

பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் குழந்தைகள் தயக்கமின்றிப் பேசுவதற்கான சூழல் நிலவினாலும், சில குழந்தைகள் தயக்கத்தால் எதையும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். அப்படியான சூழலில் ஆற்றுப்படுத்துநர்களும் மாணவர்களுக்கான மன நல ஆலோசகர்களும் அவசியம். நம்மை முன் பின் அறியாத ஒருவரிடம் அவர்கள் எந்தவித மனத்தடையும் தாழ்வுமனப்பான்மையும் குற்றவுணர்வும் இல்லாமல் பேசுவதற்கான சாத்தியம் அதிகம். ஆனால், எத்தனை பள்ளிகளில் மன நல ஆலோசர்கள் இருக்கிறார்கள்? அரசுப் பள்ளிகளில் மாவட்டத்துக்கு இருவர் எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் எத்தனை பள்ளிகளுக்குச் சென்று எத்தனை மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க முடியும்? அவர்களை மாணவர்கள் எளிதாக அணுகும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. தனியார் பள்ளிகளில் சில பள்ளிகளில் ஆற்றுப்படுத்துநர்கள் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான பள்ளிகள், படிப்புக்கும் மதிப்பெண்ணுக்கும் தருகிற முக்கியத்துவத்தில் பத்து சதவீதத்தைக்கூட மாணவர்களின் ஆரோக்கியமான மனநிலைக்குத் தருவதில்லை என்பதே நிதர்சனம்.

போதையின் பாதையில்

இப்படியொரு சூழலில் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே அதிகம். இயல்பான நடவடிக்கையிலிருந்து அவர்கள் லேசாகப் பிசகினாலும் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். இப்படி கவனிக்காமல் விட்டதால்தான் ஆதித்யாவின் பெற்றோர் அன்று தங்கள் மகனையே இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பத்தாம் வகுப்புப் படிக்கும் தங்கள் மகனுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். பள்ளியில் புராஜெக்ட் செய்யச் சொல்கிறார்கள் என அவன் பணம் கேட்டபோதெல்லாம் மறுக்காமல் கொடுத்தனர். குரூப் ஸ்டடி என அவன் அடிக்கடி நண்பர்களின் வீடுகளுக்குச் சென்ற போதெல்லாம் மறுப்பேதும் சொன்னதில்லை. தங்கள் மகன் நல்லபடியாகப் படித்து, நல்ல மதிப்பெண் வாங்கினால் போதுமென்று அவர்கள் நினைத்தார்கள். 

அதனால்தான் அவனிடம் ஏற்பட்ட சின்னச் சின்ன மாற்றங்களை அவர்கள் கவனிக்கவில்லை. கவனித்தபோதும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

விடுமுறை நாளன்று படிப்பதாகச் சொல்லி கதவைச் சாத்திக்கொண்ட ஆதித்யா மதிய உணவுக்குக்கூட வெளியே வரவில்லை. கதவைத் தட்டியும் பலனில்லாமல் போக, அந்தப் பெற்றோரைப் பயம் தொற்றிக்கொண்டது. மாற்றுச் சாவியைத் தேடி, கதவைத் திறப்பதற்குள் இருவரும் ஒரு நிலையில் இல்லை. கதவைத் திறந்து உள்ளே சென்றவர்களுக்கு மயங்கிய நிலையில் இருந்த மகனைப் பார்த்ததும் அதிர்ச்சி. தண்ணீர் தெளித்தும் ஆதித்யா எழவில்லை. உலுக்கி எழுப்ப முயன்றபோது குழறலாக ஏதேதோ பேசினான். அப்போதுதான் அவன் புத்தகப்பையில் இருந்த ஒரு பொட்டலத்தை அவனுடைய தந்தை எடுத்தார். பிரித்துப் பார்த்தவரின் இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. ஆம், போதை தரும் பொடி அதில் மடித்துவைக்கப்பட்டிருந்தது. தங்கள் மகன் போதையில் மயங்கிக் கிடக்கிறான் என்பதை உணர்ந்தபோது அந்தப் பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் சிரித்த முகத்துடன் பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்பியதும் படிப்பு, வீட்டுப்பாடம் என இருக்கும் தங்கள் மகன் எப்படி போதைப் பழக்கத்துக்கு ஆளானான் என யோசித்து யோசித்து மாய்ந்துபோனார்கள்.

ஆதித்யா மட்டுமல்ல, இன்று பல பதின் பருவக் குழந்தைகள் போதை எனும் மாய வலைக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள். ஏன் இப்படி நடக்கிறது? அவர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது? அதிலிருந்து அவர்களை எப்படி மீட்பது? இவற்றுக்கான பதில் ஆதித்யாவின் பெற்றோருக்கு மட்டுமல்ல, பதின் பருவக் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்குமானது.

(நிஜம் அறிவோம்…)

x