டெல்லியிலுள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு ஐந்து முறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறை காந்தி சமாதிக்குச் செல்லும்போது மனம் கனிந்துபோய்விடவே செய்கிறது. பழைய டெல்லியில் ராஜ்காட் என்ற இடத்தில் யமுனை ஆற்றங்கரையில் இந்தச் சமாதி அமைந்துள்ளது.
ஒருமுறை காந்தி சமாதிக்கு மழை நாளில் போயிருந்தேன். சாரல் அடித்தபடியே இருந்தது. நிச்சயம் அதிகக் கூட்டமிருக்காது என நினைத்துக்கொண்டு காரை விட்டு இறங்கினேன். ஆச்சரியம். கையில் குடையுடன் ஆட்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
நாங்களும் குடையுடன் காந்தி சமாதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அன்றைக்கும் நல்ல கூட்டம். மழை வெயில் எதுவும் காந்தியை நாடி வருபவர்
களைத் தடுப்பதில்லை. காந்தியே அப்படித்தான் நடந்துகொண்டார்.
எத்தனை முறை வாசித்தாலும் அவரது சுயசரிதை வியப்பூட்டவே செய்கிறது. இந்தியாவின் மகத்தான பயணி மகாத்மா காந்தியே. அவர் ஊர்சுற்றிப் பார்க்க அலைந்தவரில்லை. மாறாக இந்தியர்களை ஒன்றிணைக்க அவர் முடிவில்லாத பயணங்களை மேற்கொண்டார். முழு இந்தியாவைக் கண்ட ஒரே அரசியல் தலைவர் அவராகத்தான் இருக்கக் கூடும்.
மற்ற அரசியல் தலைவர்களுக்கு இல்லாத சிறப்பு மகாத்மா காந்தி நடந்தே இந்தியாவின் முக்கிய நிலங்களைக் கண்டார் என்பதே.
காந்தி தன் வாழ்நாளில் ஒருமுறைகூட விமானத்தில் பயணம் செய்ததேயில்லை. லண்டனுக்குப் போகும் நாட்களில்கூட கப்பலில்தான் சென்றார். காந்தியின் மூன்றாவது வகுப்பு ரயில் பயணங்கள் பிரசித்திபெற்றவை. இன்று இந்தியாவில் எந்த அரசியல்வாதி மூன்றாம் வகுப்பு ரயிலில் பயணம் செய்கிறார். போதையில் விமானநிலையத்தில் சண்டையிடும் அரசியல்வாதிகளைத்தானே நாம் அறிந்துகொண்டிருக்கிறோம்.
காந்தி ஒற்றை ஆளாக நடக்கவில்லை. அவர் சக இந்தியர்களை நடக்க வைத்தார். காந்தியின் கையில் உள்ள கைத்தடி அவர் தண்டி யாத்திரைக்குக் கிளம்பும்போது காகா காலேக்கர் கொடுத்தது. அந்தக் கைத்தடியை ஊன்றியபடியே அவர் சீரற்ற சாலைகளில் நடந்து சென்றார். மனஉறுதியை அவர் நடை முன்னெடுத்தது.
பகவான் புத்தர் மிக வேகமாக நடக்கக் கூடியவர் என்பார்கள். காந்தியின் நடையும் அப்படிப்பட்டதுதான். கடற்கரையில் ஒரு சிறுவன் கைத்தடியைப் பிடித்த
படியே காந்தியோடு நடக்கும் புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். எத்தனை அற்புதமான படமது.
தண்டி யாத்திரையின்போது மகாத்மாவின் கைத்தடியைப் பிடித்து அழைத்துச் சென்ற பெருமையும் கனு காந்திக்கு உண்டு. புகைப்படத்திலுள்ள அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை. காந்தியின் பேரன் கனு காந்திதான்.
மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் மாஸசூஸிட்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கனு காந்தி, அங்கு உயர்கல்விப் படிப்பை முடித்தார். அதன் பின்னர், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’வில் பணியாற்றினார்.
பாஸ்டனில் பணியாற்றிய டாக்டர் ஷிவலட்சுமியுடன் கனு காந்திக்குத் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த கனு காந்தி 2014-ல் இந்தியா திரும்பினார். அவருக்குக் குழந்தைகள் கிடையாது.
இந்தியாவில் இருந்தபோது கையில் இருந்த பணமெல்லாம் கரைந்த நிலையில், யாரிடமும் உதவி கேட்க விரும்பாமல் கனு காந்தி ஊர் ஊராகச் சுற்றித் திரிந்துள்ளார். எவரிடமும் தான் காந்தியின் பேரன் என்று சொல்லிக்கொள்ளவில்லை. நோயுற்ற நிலையில் கனு காந்தி டெல்லியில் உள்ள குரு விஷ்ரம் விருத் என்ற ஆசிரமத்தில் வசிக்கத் துவங்கினார். அங்குள்ளவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. முதுமையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அனாதரவான நிலையில் மரணம் அடைந்தார் கனு காந்தி. இறந்த பிறகே அவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
காந்தி சமாதிக்கு வரும் பெரும்பான்மை பார்வையாளர்கள் கடவுளின் சன்னிதானத்துக்குச் செல்வதுபோல பக்தியோடு நடந்துகொள்கிறார்கள். கண்களை மூடி காந்தியிடம் வேண்டுகிறார்கள். என்ன வேண்டுவார்கள்? அதிலும் குழந்தைகள், பெண்கள் காந்தியின் முன்னால் கைகூப்பி நிற்கும் காட்சியைக் காணும்போது மனது நெகிழ்ந்துவிடுகிறது.
போர்பந்தரிலுள்ள காந்தி பிறந்த வீட்டுக்கோ, அவரது வார்தா ஆசிரமத்துக்கோ சென்றபோது ஏற்படாத அனுபவம் அவரது சமாதியில் கிடைக்கிறது. உண்மையில் அது ஒரு ஆன்மிக சுத்திகரிப்பு.
நீங்கள் கைகூப்பி வணங்கும்போது மனது காந்தியைப் போல வாழ்க்கையில் ஒருமுறையாவது நாம் நடந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ரூபாய் நோட்டிலும் சிலையிலும் காந்தியைக் காணும் இந்தத் தலைமுறைக்கு மகாத்மா காந்தி என்பது ஒரு பெயர். அடையாளம். சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தகவல். அவ்வளவே. காந்திய அறத்தையும் காந்தியச் செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. காந்தி எந்த அறத்தை உயர்த்திப்பிடித்தாரோ அதைத் தன் வாழ்நாளில் தானே கடைப்பிடித்துக் காட்டினார்.
லண்டனில் போய்ப் படித்துத் திரும்பியபோதும் அவர் தனது சுயசரிதையை குஜராத்தியில்தான் எழுதினார். தாய்மொழிப் பற்றுக்கு இதை விடச் சிறந்த உதாரணம் வேறு என்ன சொல்ல முடியும்?
இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை காந்தியின் காலடி பட்டிருக்கிறது. காந்தி சிலைகள் இல்லாத ஊர்களேயில்லை.
காந்தி சமாதியை எப்போதும் பூக்களால் அலங்கரித்திருக்கிறார்கள். அணையா நெருப்பு எரிந்துகொண்டேயிருக்கிறது. நெருப்பின் முன் பேசுவது மனிதர்கள் கற்காலம் தொட்டு செய்துவரும் நடவடிக்கை.
அந்த அணையா நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நெருப்புக்கு வயதாவதில்லை. காலத்தின் விரல் தீண்ட முடியாத பொருளது. அந்த நெருப்பு ஒரு சாட்சி. இந்திய வரலாற்றின் சாட்சி. எத்தனை தியாகங்களைச் செய்து சுதந்திரம் பெற்றோம் என அந்த நெருப்புக்குத் தெரியும். அந்த நெருப்பை வணங்கினேன்.
காந்தியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? இணையத்தில் அவரது உரைகள் கேட்கக் கிடைக்கின்றன. சில காணொளிகளும் பார்வைக்குக் கிடைக்கின்றன. அவரது குரல் மென்மையானது. சண்டமாருதம் போல மேடையில் அவர் பேசவில்லை. ஒரு தந்தை மகனிடம் பேசுவது போல, ஒரு தாய் பிள்ளைகளிடம் பேசுவது போல பேசுகிறார். இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்களைக் கூட அவர் மரியாதையாகவே விமர்சனம் செய்தார். ஒருமுறைகூட அவர்களை இழிவாகப் பேசியதில்லை.
காந்தி சமாதிக்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் சமகால வன்முறைகளை, அதிகாரப் போட்டிகளை, சுயநலத்தைத் தாங்க முடியாமல் அவர் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். மகாத்மா பிரார்த்தனை பலிக்கும் என்று நம்பியவர். தன் வாழ்நாளில் ஒரு மணித்துளியைக்கூட அவர் வீணடித்துவிடவில்லை.
காந்தி சமாதியின் மீது மழை பெய்துகொண்டிருந்தது. அந்த மழை அவரது கருணையின், அன்பின் அடையாளம் போலவேயிருந்தது. எவரும் நனைவதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை.
காந்தி சமாதிக்கு எத்தனையோ தேசத்தின் தலைவர்கள் வந்து மரியாதை செய்திருக்கிறார்கள். எத்தனையோ போராட்டத்தின் துவக்கமாக காந்தி சமாதி இருந்திருக்கிறது. இந்தியாவின் உயரிய விருதைப் பெற்ற பலரும் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவருவதை அறிவேன்.
‘யாத்ரா’ என்றொரு இந்திப் படம். அதில் நானா படேகர் புகழ்பெற்ற எழுத்தாளராக நடித்திருப்பார். இந்தியாவின் உயரிய விருதைப் பெறுவதற்காக டெல்லி செல்லும் அவர் காந்தி சமாதிக்குச் செல்வார். அங்கே கண்மூடி பிரார்த்தனை செய்வார். தனது எழுத்துக்கும் உண்மைக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி உள்ளது என்பதைப் பற்றி யோசித்துக் குற்றவுணர்ச்சி கொள்வார். இனிமேல் தான் மனசாட்சியோடு வாழ வேண்டும் என முடிவு எடுத்துக் காணாமல் போய்விடுவார். அதன் பிறகு அவரைக் குடும்பமே தேடுவார்கள்.
காந்தி சமாதியில் நானா படேகர் மனம் மாறும் காட்சி மறக்க முடியாதது. ஒருவனின் மனசாட்சியை காந்தி தொட்டு எழுப்புகிறார். உண்மையோடு நடந்துகொள் என்று தோழமையுடன் சொல்கிறார். அந்தக் குரலுக்குச் செவிகொடுப்பவன் வாழ்க்கை மாறிவிடும் என்பதே நிஜம்.
(பயணம் நிறைந்தது)